• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது – சுரேஷ் பிரேமச்சந்திரன்

இலங்கை

பொதுத்தேர்தலில் பின்னர் புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு என ஜனாதிபதி தெரிவித்துள்ளமையானது 2026க்கு பின்னரும் தீர்வு கிடைப்பதில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.

தேர்தல்களில் வெற்றிகொள்ளவும் தமிழ் மக்களை அதற்கு எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளம் என்ற சிந்தனையில் ஈடுபடும் ஜனாதிபதி இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்குவது அவரது முன்னுரிமைப் பட்டியலில் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் யுத்தம் முடிந்து பதினான்கு வருடங்கள் கடந்த பின்னரும்கூட, தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண சிங்கள அரசதரப்பினர் தயாராக இல்லை என்பதை புதிதாக கடமையேற்றுள்ள இந்திய தூதுவரும் புரிந்துகொள்ள வேண்டும் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இத்தகைய ஒரு சூழ்நிலையில் சிங்கள அரசியல் தலைமைகளின் அசமந்தப் போக்கைச் சுட்டிக்காட்டக்கூடிய வகையில் தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அவருக்கு வாக்களிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply