• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துங்கள் –  பிரதமர் பணிப்பு

இலங்கை

புதிய வரவு செலவுத் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அனைத்து ஆளுநர்களுக்கும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பான செயற்பாடுகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலில் பேசிய அவர், ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் தொகுதிக்கும் குறைந்தது ஒரு அபிவிருத்தித் திட்டமாவது நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சில மாகாணங்களில் அபிவிருத்தி செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஆளுனர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையில் கருத்து முரண்பாடு உருவாவது தொடர்பான விடயங்களை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் பிரதமரிடம் முன்வைத்தனர்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் புதிய வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெளிவாக முன்னோக்கிச் செல்லும் பாதை குறித்து அறிவித்துள்ளதாகவும் அதற்கிணங்க அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகளுக்கு இணைக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களின் இடமாற்றம் ,வெற்றிடங்களை நிரப்புதல், புதிய ஆட்சேர்ப்பு மற்றும் மாகாண சபைகளின் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்கள் குறித்த திருத்தம் தொடர்பான விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
 

Leave a Reply