• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நீதிக்குப்பின் பாசம் படப்பிடிப்பு கடைசிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த நேரம்

சினிமா

ஒருநாள், நான் என் காரில் மவுண்ட் ரோடுக்குப் போகும் வழியில் ஜெமினி ஸ்டூடியோ அருகில் (அப்பொழுது அண்ணா மேம்பாலம் கட்டப்படவில்லை) ‘நீதிக்குப்பின் பாசம்’ படத்திற்கு ஒரு பெரிய விளம்பர ‘பேனர்.’ .
அதில் என் பெயர் எழுதப்படவில்லை. அதைப்பார்த்து எனக்கு வருத்தமாக இருந்தது.
அது கம்பெனி வைத்த பேனர் என்று எண்ணி படப்பிடிப்பில் தேவரண்ணனிடம் கூறி குறைப்பட்டுக் கொண்டேன். அப்போது அருகில் எம்.ஜி.ஆர். இருந்தார்.
மூன்று நாட்களுக்குப்பின்னர் எம்.ஜி.ஆர். என்னைக் கேட்டார்:–
அவர்:– ‘என்ன முதலாளி? (சில சமயங்களில் தேவரண்ணனையும் என்னையும் சேர்த்து முதலாளி என்பார். அது அவருடைய மனோ நிலையைப் பொறுத்தது.) ஜெமினி பேனரை இப்போ பாத்திங்களா?’.
நான்:– ‘இல்லியே. ஏண்ணே?’
அவர்:– ‘‘இப்பவே ஒங்க காரை எடுத்துக்கிட்டுப்போயி ஒரு நிமிஷம் பாத்திட்டு வாங்க சொல்றேன் – போங்க’.
போய் பார்த்தேன். ஒரு ‘பிளைவுட்’ துண்டுப் பலகையில் ‘கதை–வசனம்: ஆரூர்தாஸ்’ என்று என் பெயர் பெரிதாக எழுதப்பட்டு அந்தப் பேனரில் தனியாகப் பொருத்தப்பட்டிருந்ததைப் பார்த்ததும் எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. திரும்பி வந்து எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் சொன்னார்:–
அவர்:– ‘முந்தா நாள் அண்ணன்கிட்டே நீங்க சொன்னதைக் கேட்டு எங்க ஆபீசுக்கு (எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்) போன் பண்ணிக் கேட்டேன். பேனர் எழுதுனவுங்க மறந்து விட்டுட்டாங்க போலிருக்குன்னு மேனேஜர் ஆர்.எம்.வீரப்பன் சொன்னாரு. உடனே ஒங்க பேரை எல்லா பேனர்லயும் சேக்கணும்னு சொன்னேன். வீரப்பன் அப்படியே செஞ்சிட்டாரு. அதனாலதான் ஒங்களை போய் பாக்கச் சொன்னேன்’.
நான்:– ‘அப்படின்னா, அது ‘எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்’ வச்ச பேனரா?’
அவர்:– ‘ஆமா, சென்னை நகர வெளியீடு நாமதானே?’
நான்:– ‘அடடே! இது தெரியாம, தேவர் பிலிம்ஸ் வச்ச பேனர்னு நினைச்சித்தான் அண்ணன்கிட்டே சொன்னேன். ஸாரிண்ணே. ஒங்களுக்கு வீணா தொந்தரவு கொடுத்திட்டேன். ஆர்.எம்.வீரப்பண்ணன் என்னைத் தப்பா நினைச்சிடப்போறாரு’.
அவர்:– ‘அதெல்லாம் ஒண்ணும் நினைக்க மாட்டாரு. இப்போ ஒங்களுக்கு ஏற்பட்ட இந்த உணர்வு ஒருகாலத்துல எனக்கும் உண்டாச்சு. நான் கோவை ஜூபிடர் பிக்சர்ஸ்ல மாசச்சம்பளத்துல படங்கள்ள நடிச்சிக்கிட்டு இருந்தப்போ – எனக்கு ‘ஹீரோ அந்தஸ்து’ கிடைக்கிறதுக்கு முந்தி – விளம்பரங்கள்ள எம்பேரைப் போடாம என்னைப் புறக்கணிப்பாங்க.
அப்போல்லாம் நான் மனசு வேதனைப்பட்டு ‘நமக்கும் ஒரு காலம் வரும்’னு நினைச்சி ஆறுதல் அடைவேன்.
அந்தச் சமயத்துல ஜூபிடர் பிக்சர்ஸ்ல நிர்வாகியா இருந்த அவர் (எம்.ஜி.ஆர். குறிப்பிட்ட அந்தப் பெயரை இங்கு எழுத நான் விரும்பவில்லை. இப்பொழுது அவர் உயிரோடு இல்லை) என்னைக் கூப்பிட்டு, ‘ராமச்சந்திரா! கேன்டின்லேருந்து டீ வாங்கிட்டு வான்’னு சொல்வாரு. வாங்கிட்டு வந்து கொடுப்பேன்.
பிற்காலத்துல பல வெற்றிப்படங்கள்ள நடிச்சி நான் ஹீரோ ஆகி, எனக்கு ‘மார்க்கெட் மதிப்பு வந்ததுக்கப்புறம் அதே ஜூபிடர் நிர்வாகி எங்கிட்டே வந்து, ‘எம்.ஜி.ஆர்! நான் கஷ்டத்துல இருக்கேன். எனக்கு ஒரு படம் பண்ணிக்குடுங்கன்னு கேட்டாரு. நானும் அதுக்கு மனப்பூர்வமா சம்மதிச்சி கால்ஷீட் கொடுத்து, பூஜை போட்டுத் தொடங்கி கொஞ்ச நாள் ஷூட்டிங் நடந்தப்

புறம் அவரால மேற்கொண்டு படப்பிடிப்பைத் தொடர முடியாம அந்தப்படம் அப்படியே நின்னு போயிடுச்சி’ என்றதும் நான் குறுக்கிட்டு, ‘எனக்கும் தெரியும் அண்ணே! அந்தப்படம்தானே?’ என்று அதன் டைட்டிலைக் குறிப்பிட்டேன்.
அவர்:– ‘ஆமா. அதுவேதான். இன்னும் சொல்றேன் கேளுங்க. என்னை வச்சிப் படம் ஆரம்பிச்சா அது வளராம நின்னு போயிடும். ஏன்னா எம்.ஜி.ஆர். கால்ஷீட் கொடுக்க மாட்டாருங்குற ஒரு வதந்தி உண்டு. அது எனக்கும் தெரியும்.
இப்போ ஒங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்றேன். சில போலித் தயாரிப்பாளருங்க என்னை வச்சிப் பணம் சம்பாதிக்கிறதுக்காக, நான் நடிக்கிறதா சொல்லி பைனான்சியர் கிட்டே பணம் வாங்கி சும்மா பேருக்கு எனக்கு ஒரு சின்ன அட்வான்சைக் கொடுத்து எங்கிட்டே அனுமதி வாங்கிக்கிட்டு பேப்பர்ல விளம்பரம் கொடுப்பாங்க... பூஜை போட்டு ஒருநாள் ரெண்டு நாள் படப்பிடிப்பு நடத்துவாங்க.
அதைப்பாத்து ஏமாந்து ஒரு சில விநியோகஸ்தருங்க, ஏரியாக்கள் பேருல முன் பணம் கொடுப்பாங்க. அவ்வளவுதான். அந்த அட்வான்ஸ் பணத்தை வாங்கிக்கிட்டதோட சரி – அதுக்கப்பறம் எனக்கோ – மத்த நடிகருங்க – கலைஞர்களுக்கோ சம்பளம் கொடுக்காம சாக்குப் போக்கு சொல்லுவாங்க.
அதோடகூட எம்.ஜி.ஆர். கால்ஷீட் கொடுக்க மாட்டேங்குறாரு. அதனால ஷூட்டிங் நடத்த முடியலேன்னு சொல்லி மொத்த பழியையும் எம்மேல போட்டுட்டு தப்பிச்சிக்குவாங்க. அப்படிப்பட்டவுங்கன்னு தெரிஞ்சி, அவுங்களை மாதிரி ஆளுங்களைத் தவிர்க்கிறதுக்காகத்தான் என் ஒப்பந்தப் பத்திரத்துலே கடுமையான நிபந்தனைகளை விதிப்பேன். அந்தக் கடுப்புலதான் என்னைப்பத்தின தவறான வதந்தியை அவுங்க பரப்புவாங்க’.
- நன்றி : தினத்தந்தி , ஆருர்தாஸ் பதிவிலிருந்து .தொகுப்பு ஆறுமுகம் தாரமங்கலம் சேலம்

 

Leave a Reply