• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காஷ்மீர் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும் - இம்ரான் கான்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருக்கும்போது, மத்திய அரசு பாராளுமன்றத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து சட்டம் நிறைவேற்றியது. அதற்கு ஜனாதிபதி ஒப்பதல் வழங்கினார்.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது செல்லும் என தீர்ப்பு அளித்தது. மேலும், சட்டப்பிரிவு 370 தற்காலிகம்தான் எனத்தெரிவித்தது.

இதற்கு ஆதரவு ஒருபக்கமும், எதிர்ப்பு ஒரு பக்கமும் இருந்து வருகிறது. ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக இந்தியா- பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாகவே பிரச்சினை இருந்து வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காஷ்மீர் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கூறியதாக அவருடைய பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாஃப் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், இம்ரான் கான் "சர்ச்சைக்குரிய மற்றும் சட்டவிரோத இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பல தசாப்தங்களாக நிலவி வரும் காஷ்மீர் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்குப் பதிலாக மேலும் சிக்கலை உருவாக்கும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறுவதாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply