• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரு பூவின் ஆயுள் போலவே திரையுலகில் சந்திரபாபு என்ற பெரும் கலைஞனும் பொசுக்கென்று பூத்து உதிர்ந்துவிட்டான்.

சினிமா

ஒரு பூவின் ஆயுள் போலவே திரையுலகில் சந்திரபாபு என்ற பெரும் கலைஞனும் பொசுக்கென்று பூத்து உதிர்ந்துவிட்டான். தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற தயாரிப்பாளராக இருந்த ஏ.எல்.சீனிவாசனின் கன்னத்தில் சந்திரபாபு முத்தம் பதிக்க முயலும் இந்தப் புகைப்படத்தை, ஏ.எல்.எஸ்ஸின் மருமகள் ஜெயந்தி கண்ணப்பனிடம் காட்டினோம். அந்தக் கால நினை
வலைகளைப் பகிர்ந்துகொண்டார் அவர்...

‘‘இந்திய-பாகிஸ்தான் போரில் பங்குபெற்ற இந்திய வீரர்களை மகிழ்விப்பதற்காக அப்போதைய பிலிம் சேம்பர் தலைவராக இருந்த என் மாமனார் ஏ.எல்.எஸ் தலைமையில் தமிழ்த் திரையுலகினர் டெல்லி சென்றனர். அங்கு ராணுவ வீரர்களுக்கு தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்பட்டது. எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைக்கச்சேரி நடந்தது. டெல்லியிலிருந்து திரும்பியபோது சென்னை ஏர்போர்ட்டில், அவருக்கு மாலை போட்டு வரவேற்றபோது எடுத்த படம்தான் இது. சந்திர பாபுவுக்கும் ஏ.எல்.எஸ்ஸுக்குமான நட்புறவை நான் பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். இதோ இப்போது வீடாக இருக்கும் இந்த இடம், ஒரு காலத்தில் சாரதா ஸ்டூடியோஸ் அலுவலகமாக பரபரப்புடன் இயங்கியபோது சந்திரபாபு அடிக்கடி வருவார். கண்ணீரோ, புன்னகையோ, கோபமோ, அன்போ... எதுவாக இருந்தாலும் வெளியே கொட்டிவிடுவார். அதுதான் அவரது ப்ளஸ்... மைனஸும் கூட! 

அந்தக் காலத்தில் மிகப் பெரிய தொகையான ஒரு லட்சம் ரூபாயை சம்பளமாக வாங்கியவர் சந்திரபாபு. எங்கள் வீட்டு செட்டிநாடு ஸ்பெஷல் மீன் குழம்பென்றால் அவருக்கு ரொம்பப் பிரியம். உரிமையோடு வந்து சாப்பிடுவார். எங்கள் புரொடக்ஷனில் ‘செந்தாமரை’, ‘சபாஷ் மீனா’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். அவருக்குக் கல்யாணம் நடந்தப்போ தேனிலவுக்காக என் மாமனார் ஒரு பிளைமவுத் காரைக் கொடுத்திருந்தார்.

திருமணமாகி சில மாதங்களிலேயே குடும்பத்தில் புயல் வீசத் தொடங்கி, மனைவியை விட்டுப் பிரிந்தார் சந்திரபாபு. அதன் பிறகு மதுவே அவருக்குத் துணையாகிவிட்டது. அவர் கட்டிய மாளிகை, மாடி மேலேயே கார் போகும் அளவுக்கு பிரமாண்டமானது. ஆனால், அந்தச் சொகுசு வாழ்க்கை கொஞ்ச நாட்களே நீடித்தது. விதியும் குடியும் சேர்ந்து அவரை வாடகை வீட்டுக்குத் தள்ளியது. 

வருமானமே இல்லாதபோதும், என் மாமனாருக்கு போன் பண்ணி உரிமையுடன் செலவுக்குப் பணம் கேட்பார். அந்தப் பணத்தை ‘தண்ணி’யாக செலவு பண்ணிவிட்டு இரண்டு நாளில் மறுபடியும் போன் பண்ணுவார். மது அவரை கொஞ்சம் கொஞ்சமாக மரணத்துக்குள் மூழ்கடித்துவிட்டது!’’

- குங்குமம் , வார இதழ்

Leave a Reply