• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தொலைக்காட்சி நம் நாட்டிற்குள் புகாத பொற்காலம் அது..!

சினிமா

அகில இந்திய வானொலி 
அத்தனை வீடுகளிலும் அரசாட்சி செய்து வந்த நேரம் .
அந்தக் காலத்தில்தான் , அநத கல்லூரிப் பேராசிரியை வானொலியில் பேசிக் கொண்டிருந்தார் .
பேசிக் கொண்டிருந்தார் என்று சொல்வதை விட ...
அடித்து துவைத்து கிழித்துக் கொண்டிருந்தார் என்றே சொல்லலாம் .
கடுமையாக அவர் அப்படி தாக்கிப் பேசிக் கொண்டிருந்தது – கண்ணதாசனை ..!
ஆம் ... அடுக்கடுக்கான ஆதாரங்களோடு அந்தப் பெண் பேராசிரியர் வானொலியில் பேசிக் கொண்டிருந்தார் .
இதோ ..அது பற்றி அந்தப் பேராசிரியப் பெண்ணே சொன்னது :
"ஒரு முறை சென்னை வானொலியில் 'இலக்கியங்களும் திரைப்படப் பாடல்களும்' என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்த என்னை அழைத்திருந்தார்கள். 
நான் உரை நிகழ்த்தியபோது , இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல விஷயங்களை கவிஞர் கண்ணதாசன் எப்படி தன் பாடல்களில் எடுத்துக் கையாண்டிருந்தார் என்பதைச் சொல்லி விளக்கி , கிட்டத்தட்ட கண்ணதாசன் பண்டைய இலக்கியங்களில் இருந்து நிறைய காப்பியடித்துள்ளார் என்கிற ரீதியில் என்னுடைய உரை நிகழ்த்தினேன். ஒலிப்பதிவு செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்து என்னுடைய உரை வானொலியில் ஒலிபரப்பானது.”
அவ்வளவுதான் ..!
அடுக்கடுக்காக போன் கால்கள் ..! 
யார் யாரோ போன் செய்து பாராட்டினார்கள் ..!
“சபாஷ்.. இத்தனை காலம் இதை கண்ணதாசனே சொந்தமாக எழுதி இருக்கிறார் என நினைத்துக் கொண்டிருந்தோம். நீங்கள் எடுத்துச் சொன்ன பிறகுதான் , இலக்கியங்களில் இருந்து இதையெல்லாம் காப்பி அடித்திருக்கிறார் கண்ணதாசன் என்பது தெரிகிறது.. அற்புதமாக பேசினீர்கள்..!”
இந்த தினுசில் பலரது பாராட்டுக்களும் போன் கால்கள் மூலமாக வந்து குவிந்து கொண்டே இருக்க , 
உச்சி குளிர்ந்து போனது அந்தப் பெண்ணுக்கு ..!
மறுபடியும் ஒரு போன் கால் !
“இது யாருடைய பாராட்டோ ..?” என பரவசத்துடன் போனை எடுத்தார் அந்தப் பேராசிரியப் பெண்.
மறுமுனையில் ஒலித்த குரல் : "நான் கண்ணதாசன் பேசுகிறேன்.."
பதறிப் போனார் அந்தப் பெண் . 
அவருக்கு கையும் ஓடவில்லை .. காலும் ஓடவில்லை..!
உலர்ந்து போன உதடுகள் ஒட்டிக் கொள்ள , 
போனைப் பிடித்திருந்த கை நடு நடுங்க “சொல்லுங்க ஸார் ..”
தொடர்ந்து கண்ணதாசன் :
"சற்றுமுன்னர் வானொலியில் உங்களின் உரை கேட்டேன் மிக அருமையாக பேசியிருந்தீர்கள். ஒரு விஷயத்தை உங்களுக்கு தெளிவு படுத்த விரும்புகிறேன். 
பண்டைய இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்பட்டிருக்கும் பல நல்ல விஷயங்கள் , உங்களைப்போன்ற பேராசிரியர்கள், பண்டிதர்கள் மட்டத்தோடு நின்று விடுகின்றன. 
ஆனால் திரைப்படப் பாடல்கள் என்பது நாட்டின் கடைக்கோடியில் குக்கிராமத்தில் , பள்ளிக்கூடமே போகாத , மாடு மேய்க்கும் சிறுவன் வரை சென்றடையக்கூடிய வலிமை பெற்றது. 
அதனால் இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல நல்ல விஷயங்கள் அவர்களையும் சென்று சேர வேண்டும் என்று அவற்றை எளிமைப்படுத்தி தருகிறேன். 
உதாரணமாக , திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத வேத மந்திரங்களில் , கணவன் மனைவிக்கிடையேயான மன ஒற்றுமையை எடுத்துக்காட்ட 
'நான் மனமாக இருந்து நினைப்பேன்... நீ வாக்காக இருந்து பேசு' 
என்று ஒரு வரி வரும். அது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..?
ஆனால் அதையே நான் 
"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்" 
என்று எழுதியபோது பெரும்பாலான மக்களை சென்று அடைந்தது. இது தவறு என்று சொல்கிறீர்களா?" 
ஆல் இந்தியா ரேடியோவில் ஆரவாரமாக பேசிய அந்தப் பெண் , இப்போது அடுத்த முனையில் பேசிக் கொண்டிருந்த கண்ணதாசனுக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார் : “மன்னித்துக் கொள்ளுங்கள் ஸார் ..”
இந்த நிகழ்வை பத்திரிகைகளில் பகிர்ந்து கொண்ட அந்த பேராசிரிய பெண் சொன்ன முத்தாய்ப்பு வார்த்தை :
“கண்ணதாசன் சொன்னதைக் கேட்டது முதல் அவர் மேல் எனக்கிருந்த மதிப்பு பல மடங்கு அதிகரித்து விட்டது". 
இந்தப் பேராசிரியைக்கு கண்ணதாசன் மீது மதிப்பு அதிகரிக்க காரணம் ...
அவர் பேச்சில் இருந்த எளிமை ...உண்மை..!
அடுத்த காரணம் .. 
திரை உலகின் உச்சத்தில் இருந்த காலத்திலும் , இந்தப் பெண்ணுக்கு அவரே போன் செய்து , தன் தரப்பு நிலையை விளக்கிச் சொன்ன பண்பு.. பணிவு..!
ஆம் ..!
“உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால் 
உயிர்கள் உன்னை வணங்கும்”"அவள் பறந்து போனாளே"
*****************************
பொதுவாக டூயட் என்றால் ஒரு காதலனும் காதலியும் ஆனந்தமாக பாடுவது. அல்லது நண்பர்கள் இருவர் நட்பின் சிறப்பை பாடுவது. ஏன், அண்ணன் தம்பிகள் கூட தாங்கள் பார்த்த பெண்களை பற்றி பாடியுள்ளார்கள். ஆனால் காணாமல் போன காதலியை பற்றி காதலனும், அவளது தந்தையும் பாடியது இதுவே முதல் பாடலாக இருக்கும். 
பாடல் - "அவள் பறந்து போனாளே" . 
படம் - பார் மகளே பார்

பாடியவர்கள்: பி பி ஸ்ரீனிவாஸ் - டி எம் சௌந்திரராஜன் ஆகியோர். இசை - மெல்லிசை மன்னர்கள். பாடலை இயற்றியவர் - கவியரசர் கண்ணதாசன்.
பாடல் சோகமான கிடார் மீட்டலுடன் துவங்குகிறது. பொதுவாக கிடார் சிறிது வலிமையாக மீட்டப்படும். ஆனால் பி பி எஸ் குரலில் பாடல் துவங்குவதால் அவரது குரலுக்கு ஏற்ப சிறிது மென்மையாக ஒலிக்கிறது.
அவள் பறந்து போனாளே 
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள் 
இரண்டை கவர்ந்து போனாளே
அவள் பறந்து போனாளே 
என்னை மறந்து போனாளே..
எப்போதுமே பாக்களின் துவக்கத்திலேயே வார்த்தைகளை அழகாக கோர்த்து மாலை சூட்டுவது கவியரசரின் வழக்கம். பறந்து, மறந்து கண்களிரண்டையும் கவர்ந்து சென்ற காதலியையும், மகளையும் பற்றிய பாடல் இது.
சரணத்திற்கு முன் வயலின்களின் இசை, வயலினை வில்லினால் இசைக்காமல் PIZZICATO என்ற முறையில் கையினால் இழுத்து மீட்டி சோகத்தை வெளிப்படுத்தும் விதத்தை எவ்வாறு பாராட்டுவது? வயலின் இசை முடிந்ததும், கிடார் ஸ்ட்ரிங்ஸ் பின்னர், சரணம் 
என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
என் நிழலுக்கும் உறக்கமில்லை
என் நிழலுக்கும் உறக்கமில்லை
காதிற்கு ஒலியாகவும், நாவுக்கு சுவையாகவும், நெஞ்சுக்கு நினைவாகவும் இருந்த காதலி இன்று தன்னோடு இல்லை என்று இவ்வாறு கூறுகிறார் கவியரசர். இதனால் தனது நிழல் கூட உறங்கவில்லை என்கிறார்.
சரணத்திற்கு தாள வாத்தியமாக பாங்கோஸ். மெல்லிசை மன்னர்களின் பல சோக பாடல்களுக்கும் பாங்கோஸ்தான் தாள வாத்தியம். என் நிழலுக்கும் உறக்கமில்லை எனுமிடத்தில் TRIPLET BEAT கொடுத்து முடிப்பது மெல்லிசை மன்னர்களுக்கு சர்வ சாதாரணம்.
பி பி எஸ் பாடி முடித்ததும் டி எம் எஸ் சிவாஜிக்காக பாடுகிறார். டி எம் எஸ் குரலில் காணப்படும் அழுத்தம், சிவாஜியின் பாத்திரத்திற்கு ஏற்றாற்போல் ஆணித்தரமாக ஒலிக்கின்றது. சிவாஜியும் இவ்வளவு சோகமான சூழ்நிலையிலும் தனது மிடுக்கு துளியும் குறையாமல் நடித்திருப்பது, எவ்வளவு தூரம் அவர் பாத்திரத்தோடு  ஒன்றிப்போயிருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.
இந்த வீட்டுக்கு விளக்கில்லை
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை
என் அன்புக்கு மகளில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை..
டி எம் எஸ் சிவாஜிக்காக பாடும்போது பின்னணி இசையிலும் ஒரு அழுத்தம் இருக்கும்.அன்பு மகள் இல்லாது போனதால், வீடு விளக்கின்றி ஒளியிழந்து இருப்பதாகவும், குயில் தனது சொந்தக் கூட்டிலில்லாமல் பறந்து போனதாகவும் தந்தையின் சோகத்தைப் பற்றி எழுதுகிறார் கவியரசர். தனது சோகத்தை போக்க ஆறுதல் மொழி கூறவும் எவருமில்லை என்கிறார்;
அவள் பறந்து போனாளே 
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள் 
இரண்டை கவர்ந்து போனாளே..
இங்கும் மூன்றாவது சரணத்திற்கு முன் முதல் சரணத்தை  போன்றே இடையிசை. மூன்றாவது சரணம் காதலன் முத்துராமனுக்காக பி பி எஸ் பாடுகிறார்.
என் இதயத்தில் பூட்டிவைத்தேன்
அதில் என்னையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே
தன் சிறகை விரித்தாளே..
காதலியை மனம் என்னும் சிறையில் அன்பினால் பூட்டிவைத்து, அவளுக்கு அல்லும் பகலும் காவலிருந்தும், அவள் அந்த அன்பின் கதவை உடைத்து தனது சிறகை விரித்துச் சென்றாள் என்று பாடுகிறார். இங்கு கவியரசரின் நயம்.. தன சிறகை விரித்தாளே என்று முடித்தவுடன், அவள் பறந்து போனாளே என்று பல்லவி தொடர்வதில் ஒரு தொடர்ச்சி தெரிகிறது!
அவள் எனக்கா மகளானாள்
நான் அவளுக்கு மகனானேன்
என் உரிமை தாயல்லவா
என் உயிரை எடுத்துச் சென்றாள்
என் உயிரை எடுத்துச் சென்றாள்.
மீண்டும் சிவாஜிக்கான வரிகளில் ஒரு தந்தையின் மனநிலையை கவியரசர் விவரித்திருப்பார்.  பெரும்பாலான தந்தையர், தனக்கு ஒரு மகள் பிறந்ததும், அவளுக்கு தான் மகன் என்று மகளை அன்னையின் இடத்தில் வைத்து மகிழ்வர். அதையே கவியரசர், எனக்கு அவள் மகளில்லை, நானல்லவோ அவளுக்கு மகன், சகல உரிமைகளையும் உடைய எனது தாயல்லவா அவள், அதனால் உரிமையுடன் என் உயிரை  தன்னோடே எடுத்து சென்று விட்டாள்  என்று சொல்கிறார்.
அவள் பறந்து போனாளே 
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள் 
இரண்டை கவர்ந்து போனாளே..!
இறுதி பல்லவி இருவரும் இணைந்து பாடுவதாக பாடல் நிறைவு பெறுகிறது. இந்த  பாடல், கவியரசருக்கும், சிவாஜிக்குமே முழு சொந்தம் என்பதை அறிந்தும், தாங்கள் அவர்களுக்கு சற்றும் இளைத்தவர்களல்ல என்று மெல்லிசை மன்னர்கள்  சிறப்பானதொரு இசையை வழங்கியுள்ளனர். முத்துராமனிடம் எப்போதும் போல் அளவான அமைதியான நடிப்பு. இத்தகைய சிறப்புகள் நிறைந்த பாடலை அதன் சிறப்பு சிறிதும் குன்றாமல் நமக்கு வழங்கியுள்ள திருவாளர்கள் பி பி எஸ், டி எம் எஸ் அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லையே. இறுதியில் நம் மனதிலும் காதிலும் ஒலித்துக் கொண்டிருப்பது அவர்களின் குரலல்லவா!இணையத்திலிருந்து சேகரிக்கப்பட்டவை

 

ஆறுமுகம் தாரமங்கலம் சேலம்
 

Leave a Reply