• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை

சினிமா

ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.
குடும்பச் சிக்கல்களை மையமாக கொண்ட படங்கள் எடுப்பதில் வல்லவர், இயக்குனர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
இவர், 1964ல் சிவாஜி, சாவித்திரி நடிக்க, கை கொடுத்த தெய்வம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில், சாவித்திரிக்கு, வெகுளிப் பெண் கதாபாத்திரம்.
படத்தில் சிவாஜி, அந்த வெகுளிப்பெண் கதாபாத்திரத்தை புகழ்ந்து பாடுவது போல, காட்சி அமைக்கப்பட்டிருந்தது. பாடல் எழுதிய கண்ணதாசன், சாவித்திரியின் உண்மை குணங்களை அப்படியே அந்தப் பாடலில் எழுதியிருந்தார். 'ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ, உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ...' என்ற அப்பாடலை இன்று கேட்டாலும், சாவித்திரி தான் நம் மனக்கண்ணில் தோன்றுவார்.
நடிகையர் திலகமாக போற்றப்பட்டாலும், தலைக்கனம் இல்லாத நடிகை, சாவித்திரி. படப்பிடிப்புத் தளங்களில், சாவித்திரி இருந்தால், 'உம்'மென்று இருப்பவர்கள் கூட, கலகலப்பான மன நிலைக்கு மாறி விடுவர். அவ்வளவு ஜாலியாக, எல்லாருடனும் கலகலப்பாக இருப்பார். லைட் பாயிலிருந்து இயக்குனர் வரை, சரிசமமாக மதித்து பழகுவார்.
தன் திறமை மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்; யாரையும் குறைவாக மதிப்பிட மாட்டார். சிவாஜி, பி.புல்லையா, ஏ.எல்.சீனிவாசன், ஆரூர்தாஸ் மற்றும் பீம்சிங் போன்றோர் சாவித்திரியின் நல்ல குணத்தால், நட்புகளாக மாறி, உறவுகளாகக் கை கோர்த்தனர்.
சாவித்திரியை, தன் தங்கை பத்மாவதியாகத் தான் பார்த்தார், சிவாஜி. அத்துடன், அவர் நடிப்பு மீதும் அவருக்கு அலாதி பிரியம்.
'சகோதரி சாவித்திரியுடன் நடிக்கும் போது, சற்று எச்சரிக்கையாகத் தான் நடிப்பேன்; நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகளில் கண்டிப்பாக நடிப்புப் போட்டி இருக்கும்...' என, சாவித்திரியின் நடிப்பை பற்றி, உயர்வாகப் பேசுவார் சிவாஜி. அன்பு காட்டுவதில் கூட, சாவித்திரிக்கு நிகர் சாவித்திரிதான்.
சிவாஜி மற்றும் சாவித்திரி குடும்பத்தினருக்கிடையே நெருக்கமான உறவு உண்டு. சிவாஜி வீட்டு விசேஷங்களுக்கு சாவித்திரியும், சாவித்திரி வீட்டு விசேஷங்களுக்கு சிவாஜியும் முன் நிற்பர்.
சிவாஜியை விட ஜெமினி, எட்டு வயது மூத்தவர்; ஆனாலும், இருவருக்குமிடையில் அப்படியோர் நட்பின் நெருக்கம்.
இயக்குனர், பி.ஆர்.பந்துலு, தன் பத்மினி பிக்சர்ஸ் சார்பில், சிவாஜி நடிக்க, வீரபாண்டிய கட்ட பொம்மன் படத்தை, 1958ல் தயாரித்தார்.
அப்படத்தில், வெள்ளைய தேவன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார், ஜெமினி கணேசன்.
அப்போது, நிறைமாத கர்ப்பிணி, சாவித்திரி. அவர் அருகில் இருந்து ஜெமினி கவனித்துக் கொண்டிருந்ததால், தான் நடிக்கயிருந்த படங்களுக்கு கொடுத்திருந்த தேதிகளை, வேறு தேதிகளுக்கு மாற்றியிருந்தார்.
கட்டபொம்மன் படப்பிடிப்பு தடங்கல் இன்றி நடைபெற வேண்டுமாயின், சாவித்திரியின் உதவியை நாடுவதுதான் சரியென பட்டது சிவாஜிக்கு!
தொலைபேசியில் சாவித்திரியைத் தொடர்பு கொண்டு, கட்டபொம்மன் படப்பிடிப்பிற்கு ஏற்பட்ட சிக்கல்களைச் கூறினார்.
'அண்ணன் உதவின்னு கேட்டுட்டார்; இச்சூழலில் அவருக்கு நாம உதவலேன்னா யார் உதவுவார்... எனக்கு குழந்தை பிறக்க இன்னும் நாள் இருக்கு; நீங்க ஜெய்ப்பூர் போய், அண்ணனுக்கு உதவி செய்யுங்க கண்ணா...' என்றார் சாவித்திரி.
விருப்பம் இல்லாமல், சாவித்திரியின் கட்டாயத்திற்காக, கட்டபொம்மன் படத்தில் நடிக்க ஜெய்ப்பூர் கிளம்பினார் ஜெமினி. இக்கட்டான சூழலிலும், தன் உடன் பிறவா சகோதரனுக்கு ஒரு பிரச்னை என்றவுடன், உதவிய சாவித்திரியின் அன்பு, உடன் இருந்தவர்களுக்குத் தான் புரியும்.

மனைவியை நிறைமாத கர்ப்பிணியாய் விட்டு விட்டு, கட்டபொம்மன் படப்பிடிப்பிற்குச் சென்ற ஜெமினிக்கு நிம்மதி இல்லை.
என்ன ஆச்சோ, ஏதாச்சோ என துடித்தவாறு இருந்தார்.
சிவாஜியின் வேண்டுகோளை ஏற்று, ஜெமினிக்கான காட்சிகளை, முதலில் எடுத்து, அவரை விரைவாக ஊருக்கு அனுப்பி வைத்தார், பி.ஆர்.பந்துலு.
ஜெமினி வந்த பின்தான், சாவித்திரிக்கு பெண் குழந்தை பிறந்தது.
ஜெமினிக்கு எல்லையில்லா ஆனந்தம். அன்று, தன் வீட்டு வேலைக்காரர்கள் அனைவருக்கும், கையில் காசுகளை அள்ளித் திணித்தார். சிக்கனகாரர் என்று பெயர் பெற்ற ஜெமினியை, ஒருநாள் வள்ளல் ஆக்கிய பெருமை, சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீசுவரிக்கு மட்டுமே உண்டு.
சாவித்திரியின் திரை வாழ்க்கையில், எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும், பாசமலர் படம் இன்றி நிறைவு பெறாது.
நெப்டியூன் ஸ்டுடியோ பரபரப்பாகவே காணப்பட்டது. திரையுலகின் பிரபல நட்சத்திரங்களாகக் கருதப்பட்ட அனைவரும் அங்கு குழுமியிருந்தனர். பல படங்களில் ஜோடியாக நடித்த சிவாஜியும், சாவித்திரியும், முதன் முதலாக அண்ணன் - தங்கையாக நடிக்கும், பாசமலர் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு அது!
பீம்சிங் முதன் முதலாக இயக்கிய படம், அம்மையப்பன். அதன்பின், சிவாஜியுடன் கூட்டணி வைத்து, 'பா' வரிசைப் படங்களை இயக்கி, மாபெரும் வெற்றி கண்டார். பிரபல மலையாள எழுத்தாளர் கொட்டாரக்கரா, அண்ணன் - தங்கை உறவைப் பற்றிய கதை ஒன்றை, இயக்குனர் பீம்சிங்கிடம் சொன்னார்.
குடும்ப உறவுகளின் மேன்மைகளை படங்களில் காட்டி, குடும்ப இயக்குனராக உயர்ந்திருந்தார் பீம்சிங்.
கொட்டாரக்கரா சொன்ன கதையில் இருந்த உயிர்த் துடிப்பு, பீம்சிங்கிற்கு பிடித்துப் போக, சிவாஜியிடம் அக்கதையைப் பற்றி விவாதித்தார்; சிவாஜிக்கும் அக்கதை பிடித்துப் போனது.
தன் நண்பர்களான, எம்.ஆர்.சந்தானம் மற்றும் 'மோகன் ஆர்ட்ஸ்' மோகன் ஆகியோர்களை தயாரிப்பாளர் ஆக்கி, ராஜாமணி பிக்சர்ஸ் சார்பில், இப்படத்தை தயாரிக்க முடிவு செய்தார்.
நெப்டியூன் ஸ்டுடியோவில், கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டத்துடன் ராஜாமணி பிக்சர்ஸ் தயாரித்த, பாசமலர் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு ஆரம்பமானது.
முதல் காட்சியில், ஜெமினியுடன், சாவித்திரி நடிக்கும் காட்சியை படமாக்கினார் பீம்சிங்.
சிறிய வீடு போன்ற செட்.
அந்த வீட்டில் தனியாக இருப்பார், சாவித்திரி. கையில் மல்லிகைப்பூவுடன் வருவார், ஜெமினி. இது தான் முதல் காட்சி.
சாவித்திரிக்கு இயற்கையிலேயே மல்லிகைப் பூ என்றால் உயிர். முதல் காட்சி மல்லிகைப்பூவுடன் ஆரம்பித்ததால், சாவித்திரிக்கு சென்டிமென்டாக அது உள்ளத்தைத் தொட்டது.
சாவித்திரியின் பரிந்துரையால், முதன் முதலாக சிவாஜிக்கு வசனம் எழுதும் வாய்ப்பைப் பெற்றிருந்தார், ஆரூர்தாஸ்.
பாசமலர் படத்தின் இறுதிக்கட்டக் காட்சி எடுக்க வேண்டிய நாள். படப்பிடிப்புத் தளமே அமைதியாகக் காட்சியளித்தது. கடைசி காட்சியில் இயற்கையாக தன் தோற்றத்தில் சோகம் தெரிய வேண்டும் என, இரண்டு இரவுகள் தூங்காமல், படப்பிடிப்பிற்கு வந்திருந்தார், சிவாஜி.
சிவாஜியின் கண்ணைச் சுற்றிக் கறுப்பு வளையம்; வறுமையில் விழுந்தவனுக்கு, இயற்கைக் கொடுக்கும் பரிசு போல இருந்தது. சிவாஜி செய்த அதே யுக்தியை, தங்கையாய் நடித்த சாவித்திரியும் பின்பற்றியிருந்தார்.
படத்தின் கதைப்படி, அண்ணனாக நடிக்கும் சிவாஜி மட்டும் இறப்பதாக முதலில் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், படப்பிடிப்பு நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன், கேரளாவில் ஒரு துயர நிகழ்வு நடந்தேறியது. அண்ணன் இறப்பைத் தாங்காத தங்கை ஒருத்தி, அதே இடத்தில் உயிரை விட்ட சோகம்!
'இந்த முடிவை, பாசமலர் படத்திற்கு வைத்தால் நன்றாக இருக்குமே...' என பீம்சிங்கிடம் சொன்னார் சிவாஜி. ஆரூர்தாசுக்கும், கொட்டாரக்கராவிற்கும் இந்த முடிவு சரியெனப்பட்டது.
படப்பிடிப்பு ஆரம்பமானது; கேமரா சுழலத் துவங்கியது. 'நாம இரண்டு பேரும் சின்னக் குழந்தையா இருந்திருக்கக் கூடாதா...' என சிவாஜி வசனம் பேசி, நடிப்பின் உச்சாணியைத் தொட, அதற்கு இணையாக சாவித்திரியும் நடித்து, தன்னை நடிகையர் திலகமென மெய்ப்பித்தார்.
சாவித்திரியைத் தவிர, வேறு எந்த நடிகையாக இருந்தாலும், சிவாஜியின் சுனாமி நடிப்பில், காணாமல் போயிருப்பார்.
படம், மே 27,1961ல் சென்னையில் சித்ரா, கிரவுன் மற்றும் சயானி உட்பட தமிழகம் எங்கும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
சாவித்திரிக்கு, பெண்ணின் பெருமை படத்தில் துவங்கி, பதிபக்தி, வணங்காமுடி, காத்தவராயன், கர்ணன், பாசமலர், படித்தால் மட்டும் போதுமா, கை கொடுத்த தெய்வம், நவராத்திரி, திருவிளையாடல், சரஸ்வதி சபதம் மற்றும் ரத்தத் திலகம் வரை, சாதனை படங்களாகவும், அவரின் நடிப்பை கூறும் படங்களாகவும் அமைந்தன.
நடிகையர் திலகத்தின் பிறந்தநாள் இன்று.

Leave a Reply