• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இளைஞர்கள் விவசாயத்துறையில் ஆர்வம் காட்ட வேண்டும் - அமைச்சர் மஹிந்த அமரவீர

இலங்கை

இளைஞர் சமுதாயத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இளைஞர்கள் விவசாயத்தை விட்டுத் தூரமாகியுள்ளமை எமக்குள்ள பாரிய பிரச்சினையாகும்.

வருமானம் போதாமை உட்பட இன்னும் பல்வேறு காரணங்களினால் இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபடுவதில்லை.

எனவே அவர்களை விவசாயத்தின் பக்கம் ஈர்க்க அவசியமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். இதற்காக விவசாய நவீனமயப்படுத்தல் பணிகளை மேலும் வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அனைத்து துறைகளினதும் ஒத்துழைப்புடனும் தற்போது எமது அமைச்சு முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை கண்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு 04 வகையான பயிர்களை முதன்மைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். நெல் தற்போது வெற்றிகரமான நிலையை அடைந்துள்ளது.

அதனுடன் சோளம், மிளகாய், உருளைக் கிழங்கு ஆகியவற்றை பயிரிடுவதற்கு மக்களைத் தூண்டுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

அதற்காக நாம் ஏற்கனவே ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். கடந்த காலங்களில் முட்டை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

அது தொடர்பில் நாம் விசேட வேலைத்திட்டமொன்றை தயாரித்துள்ளோம். அடுத்த வருடம் முதல் முட்டை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது.

அதேபோன்று கோழி இறைச்சி இறக்குமதி செய்ய அனுமதி கோரப்பட்டாலும் கூட நாம் அதற்கு அனுமதி வழங்கவில்லை” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply