• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தில்லானா மோகனாம்பாள் 

சினிமா

''தில்லானா மோகனாம்பாள்'' படத்தில் உண்மையாக நாதஸ்வரம் வாசித்தவர்கள் மதுரையைச் சேர்ந்த நாதஸ்வர வித்வான்களான எம்.பி. என். சேதுராமன், பொன்னுசாமி சகோதரர்கள்.
அவர்களில் இளையவரான பொன்னுசாமியை  சந்தித்தபோது எடுத்த பேட்டியிலிருந்து சில பகுதிகள்:
''தில்லானா மோகனாம்பாள் ' படத்திற்கு நாங்கள் தான் நாதஸ்வரம் வாசிக்கப் போகிறோம் என்று முடிவானதும் ஒன்றைத் தீர்மானமாகச் சொன்னார். ''நாதஸ்வர இசை ரிக்கார்டிங் நான் இல்லாம நடக்கக் கூடாது'' என்று சொல்லிவிட்டு கே.வி.மகாதேவன் குழுவோடு ரிக்கார்டிங் நடக்கும்போது கூடவே இருப்பார் சிவாஜி. நாதஸ்வரத்தை
நாங்கள் வாசிக்கிறபோது எங்களுடைய முகபாவங்கள், அழுத்தம் கொடுக்கிற விரலசைவு, நாதஸ்வரத்தை நாங்கள் தாங்கிப் பிடிக்கிற போக்கு இவற்றையெல்லாம் நுணுக்கமாகக் கவனித்துக் கொண்டிருந்தார். படத்தைப் பிறகு பார்த்தபோது தான் அவருடைய கவனிப்பின் அர்த்தம் புரிந்தது.

சென்னையில் இருபது நாட்களுக்கு மேல் ரிகர்சல் நடந்தது.
ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் ரிக்கார்டிங். நகுமோ, தில்லானா, ஆயிரம் கண் போதாது, நலந்தானா என்று பலவற்றை எடுத்திருந்தோம்.
ஒரு சமயம் ரிகர்சல் ஒரு பக்கம் நாங்கள். இன்னொரு புறம் சிவாஜி, ஏ.விஎம்.ராஜன்,பாலையா, சாரங்கபாணி குழுவினர்.
நாங்கள் வாசிக்க எதிரே அவர்கள் வாசிக்கிற மாதிரி அபிநயிக்க வேண்டும்.
''எப்படி இருக்கு?'' என்று எங்களிடம் கேட்டார் சிவாஜி.
'' நீங்க தான் ஒரிஜினல். வாசித்த நாங்கள் நகல்ன்னு சொல்ற அளவுக்கு நீங்க நடிச்சிட்டீங்க'' என்று நாங்கள் சொன்னதும் சிவாஜிக்கு மகிழ்ச்சி.
பிளாட்டிங் பேப்பர் மாதிரி எங்களுடைய முகபாவங்களைப் பார்வையிலேயே உறிஞ்சிவிடுவார். நாதஸ்வரத்தை அழுத்தி வாசிக்கும்போது கழுத்து நரம்பு புடைப்பதைக் கூட அழகாகப் பண்ணியிருப்பார்.
பாலையா அண்ணன் எங்கள் குழுவில் இருந்த தவில்காரரிடம் வாசிக்கவே கற்றுக் கொண்டு தவிலை எங்களுக்கு வாசித்தே காண்பித்தார். படத்திலும் அமர்க்களப்படுத்திவிட்டார்.
அவ்வளவு அற்புதமான கலைஞர்கள்!''
நன்றி மணா, என்.சொக்கன் .

Leave a Reply