• Welcome to TamilsGuide
செய்திகள் 1

போர் நிறுத்தத்திற்கு பிறகு, போர் முடிவடையாது - இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு சொல்கிறார்

ஹமாஸ்- இஸ்ரேல் இடையே கடந்த மாதம் 7-ந்தேதியில் இருந்து போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென நடத்திய தாக்குதலில் 1,400 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் காசாவின் வடக்கு பகுதி சீர்குலைந்துள்ளது. அமெரிக்கா பலமுறை போர் நிறுத்தத்திற்கு முயற்சி செய்தது. ஆனால் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்ற 240 பேரை உயிருடன் மீட்க வேண்டிய நிலையில் இஸ்ரேல் உள்ளது. அதேவேளையில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கவும் திட்டமிட்டுள்ளது.

ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும். அதேவேளையில் இஸ்ரேலில் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவிக்க வேண்டும். இதற்கு அமெரிக்காவுடன் இணைந்து கத்தார் மத்தியஸ்தரராக செயல்பட்டு வருகிறது.

இதன் பயனாக ஹமாஸ்- இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை ஹமாஸ் தலைவர் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் போர் நிறுத்தத்திற்கு பிறகு ஹமாஸ்க்கு எதிராக போர் நிறுத்தப்படாது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது "நாங்கள் போரில் இருக்கிறோம். போரை தொடருவோம். எங்களுடைய அனைத்து இலக்குகளையும் அடையும் வரை போர் தொடரும்.

போர் நிறுத்த நேரத்தில் உளவுத்துறை முயற்சிகள் பராமரிக்கப்படும், இது ராணுவத்தை அடுத்த கட்ட போருக்கு தயார்படுத்த அனுமதிக்கும். காஸா இஸ்ரேலை அச்சுறுத்தும் வரை போர் தொடரும்" என்றார்.

240 பிணைக்கைதிகளில் 50 பேரை விடுவிக்க ஹமாஸ் அமைப்பினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதற்கு பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வௌயாகி உள்ளது.
 

Leave a Reply