• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இஸ்ரேல் பிரதமருடன் ஜோபைடன் அவசர ஆலோசனை - மனிதாபிமான முறையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தல்

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே போர் தொடங்கி 32 நாட்கள் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகர் மீது வான், கடல் மற்றும் தரை வழியாக மும்முனை தாக்குதலை இஸ்ரேல் படை தீவிரப்படுத்தி உள்ளது.

காசாவில் உள்ள மருத்துவமனைகள், அகதிகள் முகாம்கள், தேவாலயங்கள், பொதுமக்கள் வாழ்விடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் இஸ்ரேல் சரமாரியாக குண்டுகளை வீசி வருகிறது. இந்த அதிரடி தாக்குதலில் கட்டிடங்கள் இடிந்து விழுவதோடு மட்டுமல்லாது அப்பாவி பொது மக்களும் உயிர் இழந்து வருகின்றனர். இஸ்ரேல் தாக்குதலால் காசா நகரமே உருக்குலைந்துவிட்டது.

இந்த சண்டையில் காசாவில் 4,104 குழந்தைகள் உள்பட 10 ஆயிரத்து 22 பேர் இறந்து விட்டதாக ஹமாஸ் சுகாதார இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த போரில் அப்பாவி குழந்தைகள், பொதுமக்கள் பலியாகி வருவதால் போரை உடனே நிறுத்த வேண்டும் என பல உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. போரை நிறுத் தக்கோரி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்காவும் போரை உடனே நிறுத்துவதற்கான முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால் நிரந்தர போர் நிறுத்தத்துக்கு பிடி கொடுக்காமல் இஸ்ரேல் பேசி வருகிறது.

அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஆண்டனி பிளிங்கனும் 2 முறை இஸ்ரேல் சென்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்து பேசினார். ஆனாலும் இஸ்ரேல் போரை வைவிட மறுப்பு தெரிவித்து தொடர்ந்து முப்படைகளின் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் தினமும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசர ஆலோசனை நடத்தியதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. காசாவில் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வரை காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்தை இஸ்ரேல் பின்பற்ற வேண்டும் என ஜோபைடன் இஸ்ரேல் பிரதமரிடம் வலியுறுத்தினார்.

மேலும் இரு தலைவர்களும் ஹமாஸ் அமைப்பினர் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகளை பாதுகாப்பாக மீட்பது குறித்தும் விவாதித்தனர். பிணைக்கைதிகளாக இருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாட்டவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துமாறும், காசாவிற்கு செல்லும் மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கப்பட்டதை வரவேற்பதாகவும் ஜோபைடன் தெரிவித்தார்.

ஆனால் போர் நிறுத்தத்தை ஏற்க இஸ்ரேல் தொடர்ந்து நிராகரித்து வருகிறது. இது உள்ளூர் போர் அல்ல, உலக அளவிலான போர் என்றும் ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்துள்ளார். இதனால் போர் தொடரும் சூழ்நிலை நிலவி வருகிறது.

போர் காரணமாக படுகாயம் அடைந்தவர்களுக்கு போதிய சிகிச்சை அளிக்க வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர். உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் போரை உடனே முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என சர்வதேச அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

காசாவில் உச்சக்கட்ட போர் நடந்து வருவதால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக காசா எல்லைப்பகுதிகளில் உடமைகளுடன் திரண்ட வண்ணம் உள்ளனர்.

போரில் உயிர் இழந்தவர்களுக்காக ஜெருசேலத்தில் இஸ்ரேலியர்கள் மெழுகு வர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
 

Leave a Reply