• Welcome to TamilsGuide
செய்திகள் 1

70களில் இருந்த கமல்ஹாசன் எப்படிப்பட்டவர் தெரியுமா ...?

சினிமா

70-களின் கமலுக்கு அதிகபட்ச வயதே 25 தான். ஆனால், அந்த வயதில் கமல் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட அனுபவங்கள்தான் அவரை இன்றுவரை முன்னோக்கி செலுத்திக்கொண்டிருக்கிறது.

இந்தத் தலைமுறைக்கு கமல்ஹாசன் எப்படி அறிமுகமாகிறார் என்பதே என்னைப்போன்ற கமல்ஹாசன் ரசிகர்களுக்கு ஷாக்கிங்காக இருக்கிறது. ஒரு அப்பா தன்னுடைய மகனுக்கு, ``பிக்பாஸ்ல வருவார்ல அவர்தான் கமல்ஹாசன்'' என அறிமுகப்படுத்துவதைப் பார்த்தபோது கொஞ்சம் திகைப்பாகத்தான் இருந்தது.

உலக நாயகனாக நடிப்பின் உச்சத்தில் இருக்கும் இந்த கமல்ஹாசனை எவ்வளவு பிடிக்குமோ அதே அளவுக்கு 70-களில் இருந்த கமல்ஹாசனை எனக்கு ரொம்பவே பிடிக்கும். 1980-கள், தொண்ணூறுகள், இரண்டாயிரத்திலெல்லாம், அவரின் படைப்புகள் தொடர்ந்து மெருகேறிக்கொண்டே வந்திருக்கின்றன. ஆனால், என்னை இன்றும் வசீகரிப்பது என்னவோ, அந்த எழுபதுகளின் கமல்தான்.

70-களின் கமலுக்கு அதிகபட்ச வயதே 25 தான். ஆனால், அந்த வயதில் கமல் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட அனுபவங்கள்தான் அவரை இன்றுவரை செலுத்திக்கொண்டே இருக்கிறது.

கமல் கதாநாயகனாக அடியெடுத்து வைத்தபோது, எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் இருவருமே தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களாக இருந்தார்கள். எம்.ஜி.ஆர் 1972-ல் அ.தி.மு.க-வை தொடங்கிவிட்டதால், குறைவான படங்களிலேயே நடித்துக்கொண்டிருந்தார். சிவாஜி, ஆண்டுக்கு ஐந்து முதல் ஏழு படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். ஜெமினி கணேசன், தன் நாயகத்தன்மையை இழந்திருந்தார். ரவிச்சந்திரன், முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார் என இரண்டாம் வரிசை நாயகர்களின் படங்கள்தான் அப்போது வெளியாகிக்கொண்டிருந்தன.

அந்தச் சமயத்தில்தான், புதுப்புனலென பொங்கிப் பிரவாகமெடுத்தார் கமல்ஹாசன். அவ்வளவு இளமையான நாயகன், தனித்தன்மையான நடிப்புத்திறனுடன்கூடியவர் தமிழ்சினிமாவுக்கே புதிது. அதற்கு முன் நாயகர்களாக வந்தவர்கள் எல்லாம் நாடகப் பின்புலத்திலிருந்து வந்தவர்கள். நன்கு நடனம் ஆடக்கூடிய, சிறப்பாக முக பாவங்களை வெளிப்படுத்தக்கூடிய நாயகனாக அப்போதைய இயக்குநர்களுக்குக் கிடைத்தார் கமல்ஹாசன்.

70-களின் முற்பகுதி வரை தமிழ் சினிமாவின் கதைக்களம் பெரும்பாலும் புராணக் கதைகள், காதல் கதைகள். குடும்பச் சிக்கல் கதைகள், பழிவாங்கும் ஆக்‌ஷன் கதைகள் என்றே இருந்தன. மகேந்திரன், பாரதிராஜா, பாலுமகேந்திரா போன்றோரின் வருகைக்குப் பின்னரே அவரவர் வாழ்வியல் அனுபவங்களைப் பிரதிபலிக்கும் கதைகள் தமிழ்த்திரையில் உருவாகத் தொடங்கின. இந்த நேரத்தில், கமல்ஹாசன் மலையாளத் திரைத்துறையிலும் குறிப்பிடத்தக்க நட்சத்திரமாக மாறத் தொடங்கினார்.

தமிழ்சினிமாவில் வர்த்தக ரீதியாக கமலின் படங்கள் வெற்றி பெற்றாலும், அவருக்கு அது திருப்தி அளிக்கவில்லை. அப்போது இருந்த நாயகப் பஞ்சத்துக்கும், கமர்ஷியல் இயக்குநர், தயாரிப்பாளர்களின் பழக்கத்துக்கும் அவர் தொடர்ந்து வணிக ரீதியான படங்களிலேயே இயங்கியிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. அவருக்குள் இருந்த தேடல் அவரை அதிலிருந்து அவரை வெளியே வரத் தூண்டியது.

அப்போதைய மலையாளத் திரையுலகத்தை உன்னிப்பாகக் கவனித்தார் கமல். தகழி சிவசங்கரன் பிள்ளை, எம்.டி. வாசுதேவன் நாயர் அவர்களின் நாவல்கள் திரைப்படமாவதைக் கண்டார். இங்கும் அதுபோன்ற மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என நினைத்தார்.

எனவே, மகேந்திரன், ஆர்.சி.சக்தி, ருத்ரய்யா போன்றோரின் படங்களுக்கு ஆதரவளித்தார். சுஜாதாவின் `கரையெல்லாம் செண்பகப்பூ', புஷ்பா தங்கதுரையின் `ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது', உமா சந்திரனின் `முள்ளும் மலரும்' என நாவல்கள் திரைப்படமாவதை ஆதரித்தார். அதுவே, புது கதைக்களங்கள் உருவாகும் வழி என்று அறிந்திருந்தார். அதனால்தான், ரா.கி. ரங்கராஜன் போன்றோரைக்கூட உங்களுக்கான களம் இப்போது திறந்திருக்கிறது, ஆட வாருங்கள் என்று அழைத்தார். ஆனால் அவரோ, 15 ஆண்டுகள் கழித்து `மகாநதி'க்குத்தான் வந்தார்.

கமலின் ஆழ்வார்பேட்டை வீடு, உதவி இயக்குநர்கள், கதாசிரியர்கள் விவாதிக்கும் இடமாக அப்போது இருந்தது. பெரிய தயாரிப்பு நிறுவனங்களின் கதை இலாகா போல வழக்கமான கதைகளை எப்படி மீண்டும் சுவாரஸ்யமாகக் கொடுப்பது என்று யோசிக்காமல், நாவல்களை எப்படி திரைக்கதையாக மாற்றுவது என விவாதிக்கும் இடமாக அது இருந்தது. தன் நடிப்புக்குத் தீனி போடும் வேடங்கள் உருவாக, வலுவான கதாசிரியர்கள் தமிழ்த்திரையில் வேண்டுமென்பது கமலின் எண்ணமாக இருந்தது.

இத்தனை யோசனை, இத்தனை முன்னேற்பாடுகள், அவற்றை சாத்தியமாக்கியது எல்லாம் அவரின் 25 வயதுக்குள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் நல்ல திரைப்படங்களைக் கொடுத்த நடிகராக அவர் தன் 25 வயதிற்குள்ளேயே அறியப்பட்டிருந்தார்.

தனக்கான இரையை தானே தேடிக்கொள்ளும் சிங்கமாகவே அவர் அப்போது வலம் வந்தார். இத்தனைக்கும் அவர், ஏதும் யோசிக்காமலேயே களம் கொடுக்க கே.பாலசந்தர் தயாராக இருந்தார். அவரின் உடலமைப்பு, முக லட்சணம் கண்டு, அவருக்கு வாய்ப்பளிக்க பல தயாரிப்பாளர்கள் இருந்தார்கள். தாங்கள் மனதில் நினைப்பதைத் திரையில் பிரதிபலிக்கக்கூடியவன் இவன்தான், இவனுக்காக கதை பண்ணலாம் என்று விருப்பம் கொண்ட பாரதிராஜா, பாலுமகேந்திரா இருந்தார்கள். மலையாள இயக்குநர்கள் காத்திருந்தார்கள். ஆனால், கமல்ஹாசன் எளிதாக இதில் நடித்துவிட்டுப்போகாமல், இத்தனையையும் மீறி புது கதைக்களங்கள் உருவாகத் தன்னையும் பலரையும் தயார்ப்படுத்திக்கொண்டிருந்தார்.

இப்போது, மூன்று நாள்கள் ஒரு படம் ஓடுவதற்கு, ஓராண்டு வரை முன்னோட்டம் கொடுக்கப்படுகிறது. நாயகன் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடுவது தொடங்கி, முக்கிய ஆட்களை ஒப்பந்தம் செய்வது வரை விளம்பரப்படுத்தப்படுகிறது. பின்னர் டீஸர், சிங்கிள், இசை வெளியீட்டு விழா, டிரெய்லர் எனத் தொடர்ந்து இப்படி ஒரு படம் வரப்போகிறது என விளம்பரம் வந்து கொண்டே இருக்கின்றன. பெரும்பாலான ரசிகர்கள் அந்தப் படத்தின் தகவல்களுடன் தயாராக இருக்கிறார்கள். எல்லாம் படம் வெளியான மூன்றே நாள்கள்தான். பின்னர் அப்படம், அதுபற்றி எந்தவித ஆக்கபூர்வமான விவாதங்களையும் ஏற்படுத்தாமல் மறைந்து விடுகிறது.

ஆனால் எழுபதுகளில், ஒரு படம் வெளியாகும்போது வரும் விளம்பர சுவரொட்டி மூலமே அப்படி ஒரு படம் வருகிறது என்பதே பெரும்பாலானோர்க்குத் தெரியவரும். அப்படி வெளியான படங்களே இன்றுவரை பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

`'16 வயதினிலே', `சிகப்பு ரோஜாக்கள்', `மரோசரித்ரா', `அவள் அப்படித்தான்', `கோகிலா', `மன்மத லீலை' என 40 ஆண்டுகள் கழித்தும் பேசப்படும் பல படங்களை அவர், 70-களில் கொடுத்திருக்கிறார்.

கமலின் எண்பதுகளின் படங்கள், தொண்ணூறுகளின் படங்கள், 2000-ங்களின் படங்களோடு ஒப்பிட்டால், கமலின் 70-கள் சாதாரணமாகத் தெரியக்கூடும். ஆனால், அவருக்குள் ஒரு தேடலை விதைத்தது அந்த 70-கள்தான். அடுத்த 40 ஆண்டுகள் வெற்றிகரமாக இயங்குவதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்ததும் 70-கள்தான்.

உலக நாயகனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.
முரளி கண்ணன்
விகடன் கட்டுரை ..2019

Leave a Reply