• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அரசுக்கு எதிராகத் திரண்ட யாழ் பல்கலைகழக மாணவர்கள்

இலங்கை

மாணவர்களைக்  கைது செய்ததன் மூலம்  இலங்கை அரசானது ஜனநாயகத்தையும் மக்களின் கருத்து சுதந்திரத்தை கைது செய்து கூட்டில் அடைத்துள்ளதாக யாழ் பல்கலைகழக மாணவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மட்டு ஊடக மையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே  அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து  யாழ் பல்கலைகழக மாணவர்கள் தெரிவித்துள்ளதாவது” நீண்டகாலமாகக் காணப்படும் மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின்  பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காத காரணத்தினால்  பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்  யாழில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு பண்ணையாள் போராட்ட இடத்துக்கு வந்திருந்தோம்.

அங்கு கிழக்கு பல்கலைகழக மாணவர்களும் இணைந்து அமைதியாக  ஜனநாயக ரீதியாக பொது போக்குவரத்துக்கு இடையூறுகள் எதுவும் விளைவிக்காத நிலையில் எமது உரிமை போராட்டத்தில் ஈடுபட்டோம்.

பின்னர் பண்ணையாளர்களுடன் உரையாடிவிட்டு கிழக்கு பல்கலைகழத்திற்கு பஸ்வண்டியில் சென்று யாழ் நோக்கி திரும்பும் போது சந்திவெளி பொலிஸார்  எமது பஸ்வண்டியை வழிமறித்து எங்களில் 6 மாணவர்களை கைது செய்து இழுத்துச் சென்றனர்.

ஜனநாயகரீதியாக போராடிய மாணவர்களாகிய எங்களை  இலங்கைப்  பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்த செயலை நாம் வன்மையாகக்  கண்டிக்கின்றோம்.

அதேவேளை எங்கள் நிலங்கள் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படுகின்ற ஜனநாயத்துக்கு முரணான செயல்களில் இருந்து விடுதலை பெறுவதற்கு தொடர்ந்து குரல்கொடுப்போம்” இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply