• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிரிக்கெட்சபை விவகாரத்தை நாடாளுமன்றில் அறிவிக்க வேண்டும் - சஜித்

இலங்கை

இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெறும் ஊழல், மோசடி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் இவ்வாரத்திற்குள் நாடாளுமன்றுக்கு அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், இடைக்கால நிர்வாகக் குழவை ஆராய நியமிப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவுக்கும் எதிர்ப்பினை வெளியிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை கிரிக்கெட் சபையை ஊழல், மோசடிகளில் இருந்து மாற்றுவழிக்கு கொண்டு செல்ல விளையாட்டுத்துறை அமைச்சர் ஒரு சில நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

முதற்கட்டமாக இடைக்கால நிர்வாகக்குழுவொன்று அவரால் நியமிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால குழுவொன்றை நியமிப்பது மட்டுமன்றி, விளையாட்டுத்துறை அமைச்சர் இங்குள்ள பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்றுக்கு அறிவிக்க வேண்டும்.

பாடசாலை, சங்கம், கிராமம், மாவட்டம் மற்றும் மாகாண மட்டத்தில் கிரிக்கெட் போட்டியை இன்னமும் வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தையும் நாடாளுமன்றுக்கு அவர் அறிவிக்க வேண்டும்.

இடைக்கால நிர்வாகக் குழு சரியா- தவறா என்பதை ஆராய, அமைச்சரவை உபகுழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இது கேலிக்குரிய விடயமாகும்.

விளையாட்டுத்துறை அமைச்சர் ஒரு மாற்றத்திற்கான வழிமுறைகளை கையாண்டுள்ளார்.

இதுதொடர்பாக பலரிடம் விமர்சனங்கள் இருந்தாலும், கிரிக்கெட் பற்றி நன்கு தெரிந்த, ஊழல் அல்லாத நபர்கள்தான் கிரிக்கெட் சபையில் இருக்க வேண்டும்.

இந்த நிலையில், அமைச்சரவை உபகுழுவொன்று ஏதற்கு? சரியாக இருந்தால், கிரிக்கெட்டில் இடம்பெறும் மோசடிகளை ஆராயத்தான் குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஜனாதிபதி ஒரு பக்கத்திலிருந்தும் விளையாட்டுத்துறை அமைச்சர் இன்னொரு பக்கத்திலிருந்தும் இந்த விடயத்தை இழுத்துக் கொண்டிருந்தால், மீண்டும் பிரச்சினைகள்தான் ஏற்படும்.

எனவே, ஜனாதிபதி இந்த விடயங்களை தவிர்க்க வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply