• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒருதலைராகம் படம் 1980 ஆம் ஆண்டு தமிழகம் முழுக்க ஒரு முப்பது தியேட்டர்களுக்கு உள்ளாகவே வெளியானது. 

சினிமா

படத்தின் தயாரிப்பாளரில் இருந்து, இயக்குநர், இசை அமைப்பாளர், நடிகர், நடிகைகள் என எல்லோருமே  ஏறக்குறைய புதுமுகங்கள். 
 படம் ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே இது ஒரு புதுமாதிரியான படம் எனப் புரிந்து கொண்டார்கள். 
மயிலாடுதுறை ரயில் நிலையம், புகழ்மிக்க ஏவிசி கல்லூரி, மாயவரம் தெருக்கள் என தமிழ் சினிமா ரசிகர்களுக்கே,இந்த இடங்கள் புதுசுதான். மயிலாடுதுறையின் அழகை அற்புதமாகக் காட்டியிருப்பார்கள்.
இதில் சிறுநகரம் சார்ந்த கல்லூரியை முதன்முதலாக தமிழ்சினிமாவில் காட்டி இருந்தார்கள்.
இந்தப் படம் முதலில் வசீகரித்தது கல்லூரி மாணவர்களை. நம்ம காலேஜ அப்படியே எடுத்துருக்காண்டா என கூட்டம் கூட்டமாகச் சென்று பார்த்தார்கள், 
பின்னர் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என எல்லோரையும் தியேட்டர்களுக்கு வரவழைத்தது. திரையிட்ட இடங்களில் எல்லாம் வெற்றி. 
பெரிய ஊர்களில் 200 நாட்களைக் கடந்து ஓடியது. அதுவரை தமிழ்சினிமாவில் கல்லூரி என்றாலே மாணவர்கள் கூட கோட்சூட் அணிந்து செல்வார்கள் என்னும் அளவுக்கு நிஜத்தில் இருந்து விலகியே இருக்கும். 
பெரும்பாலும் 40வயதைக் கடந்த கதாநாயகர்கள் கல்லூரி மாணவர்களாகத் தோன்றுவார்கள், ஆனால் நாம் கண்முன்னால் பார்க்கும் கல்லூரியை. மாணவர்களை, 
அவர்களின் இயல்பான நடை,உடை,பாவனைகளுடன் உலவவிட்டது ஒருதலை ராகம்.
படிக்காத அந்த நாட்களில் திரைப்படங்கள் மூலமே பல வார்த்தைகள் கிராமம் மற்றும் சிற்றூர் பகுதிகளில் உள்ளே வந்தன. 
அப்படிப்பார்த்தால் கல்லூரி மாணவர்களிடையே சகஜமாகப் புழங்கும் மச்சி, மாமூ போன்ற வார்த்தைகள் இந்தப்படத்தின் மூலமாகவே கிராமப்புறங்களில் கூட நுழைந்தன.
காதலியைத் தொடாமல்,பேசாமல் காதலன் காதலித்த முதல் படம் இதுதான். 
ஒரு வகையில் இதயம் திரைப்படத்துக்கு முன்னோடி.   
காதலி குடும்பச்சூழல் மற்றும் அவள் சந்தித்த ஆண்களின் மீதான வெறுப்பு காரணமாக காதலிக்க மறுக்கிறாள்.
உற்சாக உருவாய் வளையவந்த காதலன் மனதுடைந்து நோய் வாய்ப்படுகிறான்.
காதலி மனம்மாறும் தறுவாயில் இறந்து விடுகிறான்காதலன்
எப்போதும் குடித்துக்கொண்டிருந்தாலும் சந்திரசேகர் சொல்லும் குருவிக்கதைக்கு, மொத்த தியேட்டரும் கைதட்டி, கண்ணீர் விட்டு, கண்ணீரைத் துடைத்துக் கொள்ள மனமின்றி பிரமையற்றிருக்கும்.
இந்தப் படத்தில் இருந்துதான் நாயகனுக்கு அவன் சமவயதிலேயே ஒரு நண்பர் கூட்டம், அதில் ஒரு காமெடியன், இறுக்கமான மனதுடையவன் ஒருவன் மற்றும் ஜாலியான இருவர் என்ற பார்முலாவும் தமிழ்சினிமாவுக்கு கிடைத்தது.
தொடர்ந்து குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் கல்லூரி சார் படங்கள் தமிழில் வெளிவர ஒருதலை ராகம் ஒரு  காரணமாக அமைந்தது.  

இந்தப் படத்தின் ஒளிப்பதிவு ராபர்ட் –ராஜசேகரன்.  இவர்கள் அடுத்த ஆண்டிலேயே குறைந்த முதலீட்டில் பாலைவனச் சோலை படத்தை எடுத்து அதை மிகப்பெரும் வெற்றிப்படமாக்கினார்கள்.
1980களில் சிறு நகர கல்லூரி எப்படி இருக்கும்? மாணவர்கள் என்ன மாதிரி ஆடை அணிவார்கள்? அவர்கள் கையில் என்னென்ன உபகரணங்கள் இருக்கும் எனத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஒரு தலை ராகம் படத்தைப் பாருங்கள்
கூடுதலாக காதலிக்க அத்தனை தகுதிகள் இருந்தும், காதலைச் சொல்ல முடியாமல், அதைச் சொன்னாலும் ஏற்க மறுக்கும் ஒரு பெண்ணை காதலித்தவனின் வலியையும் தெரிந்து கொள்ளலாம்.
டி ராஜேந்தர் இயக்கியது, ஆனால் இப்ராஹிம் என்பவர் பெயரில் வெளியானது என்று சொல்வார்கள். இசை பாடல்கள் டி ராஜேந்தர் தான்.
 சங்கர், ரூபா ரவீந்தர்,   தியாகு, சந்திரசேகர்   உஷா (பின்னாளில் டி ஆரின் மனைவியானார்), ஆகியோர் நடித்தது.
ஒருதலை ராகத்தின் கதை, கதை நடக்கும் களம் போலவே இன்னொரு ஆச்சரியம் கொடுத்தது அந்தப் படத்தின் பாடல்கள். 
அப்போது ஓரளவு வசதியான ஆட்கள் மட்டுமே டேப் ரிக்கார்டர் வைத்திருப்பார்கள். எனவே ஒரு பாடல் நன்றாக இருக்கிறதென்றால் இப்போது போல எல்லோரும் நினைத்த உடன் கேட்டுவிட முடியாது. 
வானொலியில் எப்போதாவது ஒலிபரப்பினால்தான் உண்டு. தியேட்டருக்குச் சென்றுதான் கேட்க முடியும். எனவே ஒரு தலை ராகத்தின் பாடல்களைக்கேட்க மக்கள் திரும்ப திரும்பச் சென்று பார்த்தார்கள்.
கல்லூரி மாணவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
மன்மதன் ரட்சிக்கனும் இந்த மன்மதக்காளைகளை
வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது
கொக்கரக்கோழி கூவுற வேளை
இது குழந்தை பாடும் தாலாட்டு
கடவுள் வாழும் கோவிலிலே
நான் ஒரு ராசியில்லா ராஜா
என் கதை முடியும் நேரமிது.
இதில் இது குழந்தை பாடும் தாலாட்டு பாடலில் வரும் எல்லா வரிகளும் எதிர்உவமையாக அமைந்திருக்கும்
நடை மறந்த கால்கள் தன்னில்
தடயத்தைப் பார்க்கிறேன்
வடமிழந்த தேரது ஒன்ரை
நாள்தோறும்இழுக்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை
வானத்தில் பார்க்கிறேன்
நான் ஒரு ராசியில்லா ராஜா பாடலை டி எம் எஸ் பாடினார். 
மேலும் அப்போது டிடிகே மற்றும் சோனி கம்பெனிகளின் கேசட் மட்டும்தான் கிடைக்கும். 
அவற்றின் விலை அதிகம். 
தியேட்டர் பால்கனி டிக்கட் மூன்று ரூபாய்க்குள் இருந்த காலத்தில்
அந்த கேசட்டுகளின் விலை 45 ரூபாய் என்றால் அதைப் புரிந்து கொள்ளலாம். 
குல்சன்குமார் டி சீரிஸ் கேசட்டுகளை சகாய விலைக்கு தயாரித்து விற்க ஆரம்பித்த உடன் தான் அதிக அளவில் மக்கள் கேசட்டுகளை வாங்கத்துவங்கினார்கள். 
அதற்கு அடுத்தபடியாக 90களின் ஆரம்பத்தில் 10 ரூபாய்க்கு கேசட் கிடைக்க ஆரம்பித்த உடன் மக்கள் இன்னும் அதிகமாக வாங்கத் துவங்கினார்கள். 
அந்த சமயத்தில் எந்த ஹாஸ்டல் ரூமுக்குள் நுழைந்தாலும் ஒரு பாடல் கேசட் நிச்சயம் இருக்கும். அது ஒருதலைராகம் படத்தின் கேசட். 
அதனுடன் காம்போவாக இரயில் பயணங்களிலும் சேர்ந்து பதியப்பட்டிருக்கும். பல ஆண்டுகள் முன் வந்த ஒரு படத்தின் பாடலுக்கு இப்படி ஒரு ரசிகர் கூட்டமா என்று நினைத்த்துண்டு. 
ஆனால் இன்று வரை  அந்தப் படத்தின் பாடல்களுக்கு மவுசு இருந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்தப் படத்தின் இயக்குநர் டி ராஜேந்தர்தான் என்பதை தன் அடுத்தடுத்த படங்களில் அவர் நிரூபித்துவிட்டார்.

Leave a Reply