• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நிர்மலா சீதாராமன்  கலந்துகொள்ளும் நிகழ்வுக்கு என்னை அழைக்காதது வேதனையளிக்கிறது

இலங்கை

இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொள்ளும் ”நாம்-200″ என்ற விழாவுக்கு என்னை அழைக்காதது வேதனையளிக்கின்றது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்  மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”  எனது மாவட்டம் தலைநகர் கொழும்பில் நடைபெறும், “நாம்-200” என்ற விழா சிறப்புற வாழ்த்துகிறேன். எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதால் விழாவில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன். இன்று நண்பகல், இதுபற்றி அறிந்துக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, “நான் என் கையெழுத்தில், உடனடியாக அழைப்பு கடிதம் அனுப்புகிறேன். கலந்துக்கொள்ளுங்கள்”. என்று கூறினார்.

“உங்கள் அரசாங்க கட்சிகள் விழாவாக இது நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை நன்கு விளங்குகின்றது. ஆகவே, அங்கே வந்து அதில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட நான் காரணமாக இருக்க விரும்பவில்லை. ஆகவே நான் கலந்துக்கொள்ள வில்லை” என ஜனாதிபதியின் கருத்தை நாகரீகமாக நான் மறுத்து விட்டேன்.

பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் ஒரு விசேட குழுவை, இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பில் அமைத்தமை தொடர்பில் அதிகாரபூர்வமாக அறிவிப்பதாகவும், “அக்குழுவில் பங்கு பெற்று உங்கள் யோசனைகளை முன் வையுங்கள்” என ஜனாதிபதி விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார். உங்கள் அரசாங்கம் மக்கள் தொடர்பில் செய்யும் நல்ல காரியங்களை நாம் எப்போதும் வரவேற்போம் என பதிலளித்தேன்.

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், கொழும்பு மாவட்ட எம்பி என்ற முறைகளில் எனக்கு அழைப்புகள் தரப்படாவிட்டாலும்கூட, இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்ட இந்திய, தமிழக அரசியல் தலைவர்களை “வருக, வருக”  என இலங்கை நாட்டுக்கும், தலைநகர் கொழும்புக்கும் வரவேற்கிறேன்”  இவ்வாறு  மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply