• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சித்தா,பெற்றோர்களும் பெண்குழந்தைகளும் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்.

சினிமா

வரிவிலக்கு கொடுத்து எல்லோரையும் பார்க்க வைப்பதற்கான தகுதியான திரைப்படமும் கூட.
Chance கிடைச்சாதான் Sachin tendulkar என்று சொல்வது போல இதுவரையில் சித்தார்த் நடித்த படங்களிலேயே இதுதான் பெருமைக்குரிய படம் என உறுதியாக சொல்லலாம்.
இந்தப் படத்தை இவர் தயாரித்து வெளியிட்டதிலிருந்தே சினிமாவின் மீது இவர் கொண்ட நேசத்தை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.
எனக்குப் பிடித்த இன்றைய இளம் நடிகர்களில் சித்தார்த்தும் ஒருவர்தான்.ஜீவாவுக்கும் இவருக்கும் சொல்லிக்கொள்ளும் படியான படங்கள் அமைய மாட்டேங்கிறதே என இவர்களுடைய படங்களை பார்த்துவிட்டு வரும் போதெல்லாம் நினைப்பதுண்டு.
'சித்தா',படத்தின் மூலம் தயாரிப்பளாராகவும் நடிகனாகவும் நல்லதொரு வெற்றியை அடைந்துள்ளார்.சிறப்பான நடிப்பையும் கொடுத்துள்ளார்.
Spoiler alert:ஈஸ்வரன்(சித்தார்த்)பழனி நகராட்சி அதிகாரி.இவருடைய அண்ணன் காலமானதால் அவருடைய பெண்குழந்தை எட்டு வயதான சுந்தரி (சஹஸ்ரா)யை தாய் போல் பாதுகாக்கிறார்.அண்ணியும் (அஞ்சலி நாயர்)இவருடனே வசிக்கிறார்.
இவருடைய நெருங்கிய நண்பன் வடிவேல் காவல் துறையில் உதவி ஆய்வாளராக இருக்கிறார்.நண்பனின் அக்கா மகளும்,சுந்தரியும் பள்ளித்தோழிகள்.
ஒரு நாள் சுந்தரியின் பள்ளித் தோழி காணாமல் போகிறாள்.சந்தர்ப்பச் சூழல் இவரை குற்றவாளிக்குகிறது.நண்பனின் குடும்பத்தால் அவமானப்படுத்தப்படுகிறார்.நண்பனே சந்தேகப்பட்டு அடிக்கிறான்.அண்ணியும் சந்தேகப்படுகிறாள்.
வாழ்க்கையே வெறுத்துப் போகும் வேளையில் இவன் குற்றவாளியில்லை என்பது நிரூபணம் ஆகிறது.இதிலிருந்து மீண்டு வருவதற்குள் சுந்தரியும் காணாமல் போகிறாள்.
இதை யார் செய்தது?என போலீஸ் ஒரு பக்கமும்,இவனும் நண்பர்களும் தேடுவதும் என கதை நகர்கிறது.
சித்தார்த் அதிகாரியாக வேலை பார்க்கும் அதே நகராட்சியில் இவருடைய பள்ளித்தோழியான நிமிஷா சஜயன் தூய்மை பணியாளராக பணியாற்றுகிறார்.
இவர்கள் இருவரும் பள்ளிவாழ்க்கையோடு பிரிந்து போனதற்கு வலுவான காரணம் ஒன்று சொல்லப்படுகிறது.
நிமிஷா சஜயன் இக்கதாபாத்திரத்தில் மிகப் பிரமாதமாக நடித்துள்ளார்.
தூய்மை பணியாளர் ஒருவர் அவமானப்படுத்தப்படும் காட்சியில் சுயகௌரவத்தோடு இவர் பேசும் அந்தக் காட்சியில் மிக சிறப்பாக நடித்திருப்பார்.

Pre climax-ல் சித்தார்த்துக்கும் நிமிஷா சஜயனுக்கும் நடக்கும் உரையாடல் காட்சியிலும் சிறப்பான நடிப்பை கொடுத்திருப்பார்.
மலையாள நடிகையான நிமிஷா சஜயனுக்கு நாயகியாக தமிழில் இதுதான் முதல் படம் என நினைக்கிறேன்.
சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த நடிகருக்கு காலத்திற்கும் நிற்கும்படியான எதிர்மறை கதாபாத்திரம் இத்திரைப்படத்தில் கிடைத்திருக்கிறது.சிறுமிகளை கடத்தும் அக்கதாபாத்திரத்திற்கு அவர் அப்படியே பொருந்திப் போனார்.
பார்வையாளருக்கு அவனை காண்பித்து விட்டு கதாபாத்திரங்களுக்கு பூச்சாண்டி காட்டும் காட்சிகளை எல்லாம் மிக சிறப்பாக கையாண்டிருப்பார் இயக்குநர் S.U.அருண்குமார்.
குறிப்பாக வாகனங்களை சோதனை செய்யும் காட்சியில் சுவாரஸ்யப்படுத்தியிருப்பார்.இவன் மாட்ட வேண்டுமே என நாம் பதைபதைக்கும் வகையில் காட்சியை வடிவமைத்திருப்பார்.
சித்தார்த்தின் நண்பனாக வரும் வடிவேலுவும்(பாலாஜி) மற்றும் ஒரு நண்பராக வருபவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
சுந்தரி கதாபாத்திரத்தை ஏற்று நடித்த சஹஸ்ராவிற்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.
பெண் காவல் ஆய்வாளராக நடித்தவரை, 'இவர் யார் ',என கேட்கும் வகையில் நடிப்பு மிக யதார்த்தமாக இருந்தது.
ஒளிப்பதிவு இயக்குனராக பணிபுரிந்த பாலாஜி சுப்ரமணியத்தின் பங்களிப்பை பல காட்சிகளில் ரசித்தேன்.
இசையமைப்பாளர்கள்:திபு நினன்தாஸ்-விஷால் சந்திரசேகர்.இதுமாதிரியான படங்களுக்கு பின்னணி இசைதான் மிக முக்கியம்.அதை உணர்ந்து மிக சிறப்பாகவே செய்துள்ளனர்.
கவிஞர் யுகபாரதியின் வரிகளில் உருவான,"கண்கள் ஏதோ",எனும் பாடல் அருமையான மெலோடியாக அமைந்துவிட்டது.Montages பாடலாக உருவாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்கள்.படத்தில் அந்த ஒரே ஒரு பாடல்தான்.
படத்தின் கதை அங்குமிங்கும் அலைபாயாமல் ஒரே நேர்கோட்டில் செல்லுமாறு பார்த்துக் கொண்டார் இயக்குனர்.
மருத்துவமனை செட்,நகராட்சி அலுவலகம் செட் -ஆகிய இரண்டையும் தத்ரூபமாக வடிவமைத்திருக்கிறார் கலை இயக்குநர் C.S.பாலச்சந்தர்.
படத்தை பார்ப்பதற்கு முன்பு இந்தப் படத்தின் டைட்டிலே எனக்கு பிடிக்காமல்தான் இருந்தது.அதென்ன சித்தா?சித்த மருத்துவத்தைப் பற்றி பேசி நமை கொன்னு கொலையறுத்துருவாங்களோ என்றுதான் நினைத்தேன்.
படத்தைப் பற்றி பலரும் பாசிட்டிவாக பேசிய காரணத்தால் இந்தப் படத்தைப் பார்ப்பதற்கே, நான் முன்னுரிமை அளித்தேன்.
சித்தப்பாவை சித்தா என அந்தக் குழந்தை அழைப்பதால் இந்த டைட்டில்.சித்தார்த் எனும் பெயருக்கும் பொருத்தமாகத்தான் அமைந்து விட்டது.
படத்தில் குறைகளே இல்லையா?இருக்கு.
ஒரு நல்ல படத்தின் நோக்கத்திற்காக அதையெல்லாம் தவிர்க்கிறேன்.
தியேட்டர் கமெண்ட்ஸையும் சொல்லாமல் இருக்க முடியுமா?
படத்தின் 1st half முடிந்தவுடன்,நான் வெளியில் சென்று உள்ளே நுழையும் வேளையில் திரையரங்கின் தூய்மை பணியாளர் சக பணியாளரிடம் கதையை ஆர்வமாக விவரித்து சொல்லுவதைக் கண்டவுடனேயே இத்திரைப்படம் எல்லோரையும் சென்று அடையும் என்கிற நம்பிக்கையும் பிறந்தது.
அவசியம் இந்தப் படத்தை தியேட்டரில் பாருங்கள்.

நன்றி,
CREDITS : சே மணிசேகரன்

Leave a Reply