• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சார் எங்க வீட்டுக்கு காபி சாப்பிட வருவேளா?

சினிமா

சாமி-1 படத்தின் படப்பிடிப்பு எங்கள் ஊரில் நடந்து வந்தது.
"சார் எங்க வீட்டுக்கு காபி சாப்பிட வருவேளா?" வெள்ளந்தியா எங்கள் தெருவில் ஒருவர் நடிகர் விவேக்கிடம் கேட்டார்.
அட, அவ்வளவு தானே? வாங்க போவோம் என்று அடுத்த தெருவிலிருந்து கிளம்பி விட்டார்.
கூப்பிட்டவருக்கு குப்புனு வேர்த்து விட்டது. ஏனெனில் வந்தவரை அமர வைக்க ஒரு நாற்காலி கூட இல்லாத நிலை. தினமும் போண்டா, பஜ்ஜி செய்து ஊரெங்கும் விற்று வருவது தான் அவர் தொழில்.
சகஜமாக அவர் வீட்டில் இருந்த ஒரு காலி எண்ணெய் டின்னில் அமர்ந்து கொண்டு ஒரு காபியும், ரெண்டு பஜ்ஜியும் சாப்பிட்டு விட்டு ஆட்டொகிராப் போட்டு விட்டு சென்றுவிடவில்லை.

"வறுமையிலும் செம்மையாக உங்கள் விருந்தோம்பல் பண்புக்கு நான் விசிறியாகி விட்டேன், உங்களோடு ஒரு போட்டோ எடுத்துக்கலாமா?" என்று அழைத்தவருடன் ஒரு போட்டோ எடுத்து அனுப்பி வைத்தார்.
அடுத்த நாட்களில் படப்பிடிப்பு குழுவினருக்கும் சிற்றுண்டி அளிக்க இவருக்கு காண்டிராக்ட் வாங்கி தந்தார்.
சினிமாவுலகில் எந்த வலுவான பின்புலமும் இல்லாத சாமானியர்களும் திறமையிருந்தால் நுழைய முடியும், தாக்கு பிடித்து வெற்றி பெறலாம் என்று இன்னமும் துளிர் விட்டுக் கொண்டு இருக்கும் நம்பிக்கை விதையை விவேக் தொண்ணுறுகளின் ஆரம்பத்தில் விதைத்தவர்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கிலம் பயின்றவர். வகுப்பில் அடிக்காத லூட்டியில்லை.
மதுரை மக்களுக்கே உரிய லந்து, டைமிங் சென்ஸ் இவரிடமும் இருந்தது, கொஞ்சம் அதிகமாகவே..
சரியாக K.பாலசந்தரிடம் சென்று அடைக்கலம் ஆனார்.
கவுண்டமணியும் செந்திலும் கொடி கட்டி பறந்த காலம்.
Intellectual Comedy என்பது மக்களுக்கு தெரியாத நிலையில், மெல்ல மெல்ல ஒரு நகைச்சுவை கலைஞன் மனம் தளராது முயற்சி செய்து கொண்டே இருந்தான்.
சுற்றுசூழலை பாதுகாக்க, ஒரு கோடி மரங்கள் நடுவதை இலக்காக கொண்டு தீவிரமாக இயக்கம் நடத்தி வந்தார்.
கலாமின் தீவிர ரசிகர். கலாமுடன் இவரது பேட்டி மிகவும் கேஷுவலாக இருக்கும்.
சாலமன் பாப்பையா, பரவை முனியம்மா, பட்டிமன்றம் புகழ் ராஜா போன்றவர்கள் திரை துறையில் நுழைய ஒரு காரணியாக இருந்தார்.
நாகேஷ், மனோரமா, விவேக் இவர்களுக்குள் என்ன ஒற்றுமை தெரியுமா?
தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றிய கவலை தான்.
பிற நடிகர்கள் தங்கள் முக தோற்றத்துக்கு மேக்கப் போடுவார்கள்.
நகைச்சுவை கலைஞர்கள் மட்டும் தங்கள் மனசுக்கு மேக்கப் போட்டுக் கொண்டு தங்கள் சோகங்கள் வெளியே தெரியாதவாறு பிறரை மகிழ்விப்பார்கள்.
துக்கம் சில நேரம் பொங்கி வரும் போது
மக்கள் மனம் போலே பாடுவேன் நானே!
என் சோகம் என்னோடு தான்!
டெங்கு காய்ச்சலில் தன் அருமை மகனை வாரி கொடுத்து விட்டு, அதிலிருந்து மீண்டவர் போல தம்மை காட்டிக் கொண்டார்.
"எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்?"
இவர் சொன்னது வெறும் நகைச்சுவை வசனமல்ல. ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்தவை.
பொது வெளி என்றும் பாராமல் இவர் மகன் இறப்புக்கு வந்திருந்த அஜித் கதறி அழுதார். சில விஷயங்களை சிலரால் தான் உணர முடியும்.
"இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்" - வாழ்க்கையின் நிதர்சனத்தை ஒரு வரியில் சொன்ன வசனம் இது.
இவர் நடத்தி வந்த மரம் நடும் இயக்கத்தை தொடர்ந்து நடத்தி வருவதே நாம் இவர்க்கு செலுத்தும் உண்மையான மரியாதை.

 

Ananth_J

Leave a Reply