• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மலையக மக்களுக்கு உதவ மலையக அரசியல்வாதிகள் அனுமதிப்பதில்லை - முத்தையா முரளிதரன் 

சினிமா

மலையக மக்களுக்கு தன்னார்வமாக உதவிகளை செய்ய மலையக அரசியல்வாதிகள் இடமளிப்பதில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் குற்றச்சாட்டியுள்ளார்.

முத்தையா முரளிதரனின் வாழ்கை வரலாறு தொடர்பாக வெளியான 800 திரைப்படத்தில் நடித்த இலங்கை கலைஞர்களுடனான சந்திப்பொன்று கொழும்பில் நேற்றிரவு (11) நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது, மலையகத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தும் திட்டங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இலங்கையில் வறுமை கோட்டின் கீழ் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, தனது அமைப்பின் ஊடாக உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் ஆனால் மலையகத்தில் அவ்வாறான உதவிகளுக்கு அரசியல்வாதிகள் அனுமதிப்பதில்லை எனவும் குற்றச்சாட்டியுள்ளார்

இது குறித்து அவர் தெரிவித்ததாவது, “ஒரு மைதானத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்றால், பாடசாலைகளுக்கு கல்வி பணிப்பாளர்கள் இருப்பார்கள். அவர்களின் அனுமதி வேண்டும். அனுமதி இல்லாமல் நடக்காது.

அனுமதி கொடுக்க தயாராக இருக்க மாட்டார்கள். அந்த பணிப்பாளர்கள், பாடசாலைகளிலுள்ளவர்கள் எல்லாம் அரசியலுடன் தொடர்புப்பட்டவர்கள்.

மைதானங்களை எடுத்துக் கொண்டால், அது மாநகர சபைக்கு சொந்தம். மாநகர சபை அரசாங்கத்திற்கு சொந்தம். அதில் ஏதாவது செய்யப் போனால், அவர்களின் அனுமதி வேண்டும். அனுமதி கிடைக்காது.
ஒவ்வொரு இடங்களில் முயற்சி செய்து பார்த்தோம். கிடைக்கவில்லை. நுவரெலியாவின் குதிரை பந்தய திடலில் முயற்சி செய்தோம். அதிலும் கிடைக்கவில்லை.

மற்ற இடங்களில், அதாவது யாழ்ப்பாணத்தில் எல்லாம் செய்துள்ளோம். யாழ்ப்பாணம் ஜோன்ஸ் கல்லூரியில் விக்கெட் எல்லாம் நாங்கள் தான் செய்துகொடுத்தோம்.

சிமெண்ட் விக்கெட் நாடு முழுவதும் 60 முதல் 80 வரை செய்துகொடுத்துள்ளோம். இந்த மாதிரி உதவி செய்துள்ளோம். இந்த மாதிரி மலையகத்தில் செய்ய போகும் போது, அனுமதி கிடைக்கவில்லை.” என முத்தையா முரளிதரன் குறிப்பிட்டார்.

அதேவேளை, நாடு முழுவதும் ஆண்டொன்றுக்கு பல நூறு மில்லியன் ரூபா செலவில் தனது அமைப்பு மக்களுக்கு உதவிகளை வழங்கி வருவதாகஅவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

Leave a Reply