• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவாஜி சார் சொன்ன அந்த விஷயத்தை நான் மறக்க மாட்டேன்

சினிமா

"சிவாஜி சார் சொன்ன அந்த விஷயத்தை, என் வாழ்க்கையில் எப்போதுமே நான் மறக்க மாட்டேன்" என்று மன நெகிழ்வோடு சொன்னார் ரஜினி.
அப்படி என்னதான் சொன்னார் சிவாஜி ?
சொல்கிறார் ரஜினி.
"அது அண்ணாமலை படம் ரிலீஸ் ஆகியிருந்த நேரம்.
படம் சூப்பர் டூப்பர் ஹிட்.
அந்த நேரத்திலே கோயம்புத்தூர்ல ஒரு முக்கியமான நிகழ்ச்சி.
அதுல கலந்துகொள்வதற்காக நான் விமானத்தில போய்கிட்டு இருக்கேன். சிவாஜி சாரும் அதே ஃபிளைட்ல வந்துகிட்டு இருக்கார்.
கோயம்புத்தூர் வந்தது.
விமானத்திலிருந்து இறங்கி வெளியே போவதற்காக நானும் சிவாஜி சாரும் ஒண்ணா வந்துக்கிட்டு இருக்கோம்.
ஏர்போர்ட்டுக்கு வெளியே பெரிய கூட்டம். 
நான் ஒரு நிமிஷம் தயங்கி நின்னேன். ஏன்னா கூட்டத்திலிருந்த எல்லாரும் 'ரஜினி வாழ்க, ரஜினி வாழ்க' அப்படின்னு கோஷம் போடறாங்க. 
எனக்கு தர்மசங்கடமா ஆகிடுச்சு. அவ்வளவு பெரிய நடிகர் என் பக்கத்தில் இருக்கும்போது எல்லோரும் என்னை வாழ்த்தி கோஷம் போடுவது எனக்கு தர்ம சங்கடத்தைத் தந்தது.
தயங்கியபடியே சிவாஜி சார் முகத்தை பார்த்தேன். அவர் சிரித்தபடி என்னை பார்த்தார்.
"என்னப்பா ரஜினி, ஏன் தயங்குற ?
இது உன்னுடைய காலம். தயங்காமல் போ. உன்மேல் உயிரையே வச்சிருக்கிற ரசிகர்கள் உனக்கு இருக்காங்க. அவங்களுக்கு நல்ல படங்களை நீ கொடு. 
எங்களுக்கும் இதைப்போல ஒரு காலம் இருந்தது. நாங்களும் எங்களால் முடிந்த அளவு நல்ல படங்களை கொடுத்தோம்
இது உனக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் காலம். போய் உன்னோட ரசிகர்களை சந்தோஷப்படுத்து."
சிவாஜி இப்படி சொன்னதை நெகிழ்வோடு குறிப்பிட்டுவிட்டு  ரஜினி சொன்னார். 
"சிவாஜி சாரின் அந்த அணுகுமுறை எனக்கு ஆச்சரியத்தை தந்தது. 
காலத்தின் சக்தியை, 

அது கொடுக்கும் தீர்ப்பை எவ்வளவு பணிவோடும் பெருந்தன்மையோடும் ஏற்றுக் கொள்கிறார். அதனால்தான் அவர் நீண்ட நெடுங்காலம் திரை உலகில் நீடித்து நின்றிருக்கிறார். நிறைய வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார்."
தொடர்ந்து ரஜினி சொன்னார். "அதற்கு சில வருடங்கள் கழித்து அதே கோயம்புத்தூர் ஏர்போர்ட். வேற ஒரு நிகழ்ச்சிக்காக நான் அங்கே போய் இருந்தேன். விமானத்திலிருந்து இறங்கி வெளியே வர இருந்த என்னை என்கூட வந்தவர்கள் தடுத்து நிறுத்தினார்கள். என்னன்னு கேட்டேன்.
ஒரு முக்கியமான நடிகரின் பெயரை சொல்லி, 'அவர் வந்துகிட்டு இருக்காரு. அவரை எதிர்பார்த்து நிறைய ரசிகர்கள் ஏர்போர்ட்டுக்கு வெளியே கூட்டமா காத்துக்கிட்டு இருக்காங்க. அவங்க போகட்டும். அதற்கு பிறகு நீங்க வாங்க' அப்படின்னு சொன்னாங்க."
இதைச் சொல்லிவிட்டு சற்றே பேச்சை நிறுத்தி மென்மையாக சிரிக்கிறார் ரஜினி. அதன் பின் தொடர்ந்து சொல்கிறார்.
"எனக்கு சிவாஜி சார் சொன்னதுதான் ஞாபகம் வந்தது. அன்றைக்கு எனக்கு ஒரு காலம் இருந்ததைப் போல, இப்போது இன்னொருவருக்கு அந்தக் காலம் வந்திருக்கிறது.
என்னதான் திறமை உழைப்பு நம்மிடம் இருந்தாலும் அது எல்லாமே இரண்டாம் பட்சம்தான்.
காலம் மாறும்போது எல்லாமே மாறும். காலத்தின் சக்தியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்."
இதைச் சொல்லும்போது ரஜினியின் குரலில் பணிவும் இருந்தது. பக்குவமும் இருந்தது.
சிவாஜியிடம் இருந்த அதே பக்குவம்...
ஆம். காலம் என்பது இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு மாபெரும் சக்தி. 
காலத்தை நாம் மதித்தால் 
காலம் நம்மை மதிக்கும்.
சிவாஜி காலத்தை மதித்தார்.
அதனால்தான் காலமும் அவரை மதித்து பதில் மரியாதை செய்தது. முதல் மரியாதை தந்தது.
அவருடைய கடைசி காலத்தில் 
முதல் மரியாதை, தேவர் மகன், படையப்பா போன்ற படங்கள் அவருக்கு கிடைத்தன.
இந்த அருமையான படங்களை காலம் சிவாஜிக்கு கொடுத்ததால்தான், இன்றைக்கும் இளைய தலைமுறையினர் கூட சிவாஜியை புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
காலத்தை வெல்ல ஒரே வழி,
சிவாஜி சொன்னதைப் போல,
காலத்தை மதித்து நாம் நடப்பதே..!

 

John Durai Asir Chelliah 

Leave a Reply