• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாலைதீவின் எதிர்காலம் எதனை நோக்கி?

மாலைதீவில் நடபெற்று முடிந்த அரசுத் தலைவர் தேர்தலில் தலைநகர் மாலியின் மாநகர முதல்வரான முகம்மட் மூசூ வெற்றி பெற்றுள்ளார். அப்துல்லா யாமீன் அவர்களின் ஆட்சியின் கீழ் கட்டுமானத் துறை அமைச்சராகப் பதவி வகித்த 45 வயது நிரம்பிய மூசூ ஒரு பொறியியலாளர் ஆவார். செப்டம்பர் முப்பதாம் திகதி நடைபெற்ற இரண்டாவது சுற்றுத் தேர்தலில் 54 விழுக்காடு வாக்குகளைப் பெற்று நடப்பு அரசுத் தலைவர் முகம்மட் சொலிஹ் அவர்களைத் தோற்கடித்த மூசூ நவம்பர் 17ஆம் திகதி உத்தியோகபூர்வமாகப் பதவியை ஏற்க உள்ளார்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவுகளால் ஆன மாலைதீவில் 5 இலட்சம் மக்களே வசிக்கின்றனர். உல்லாசப் பயணத் துறைக்குப் பெயர் போன இந்தச் சிறிய நாட்டில் நடைபெற்று முடிந்த அரசுத் தலைவர் தேர்தல் இன்று உலகின் முக்கிய பேசு பொருளாக மாறியிருக்கிறது. காரணம் தேர்தலில் வெற்றியைத் தழுவியவர் சீன ஆதரவாளர். தோல்வி அடைந்திருப்பவர் இந்தியாவின் ஆதரவாளர்.

உலகின் மிகப் பெரிய பொருளாதார வல்லரசு என்ற இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் சீனாவுக்கு இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் போட்டியாக உள்ள வல்லரசு இந்தியா. இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பனிப் போரில் தற்போது மாலைதீவு சிக்கிக் கொண்டுள்ளது. தற்போதைய தேர்தல் வெற்றியின் பின்னர் நிலைமை என்ன ஆகுமோ என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பண்டைக் காலம் முதல் மாலைதீவுடன் கலாசார அடிப்படையிலான தொடர்புகளைக் கொண்டுள்ள இந்தியா பன்னெடுங் காலமாக மாலைதீவுடன் நட்பு அடிப்படையிலான உறவைப் பேணி வந்துள்ளது. அண்மைக் காலமாக பொருளாதார அடிப்படையிலும், படைத் துறை அடிப்படையிலும் உறவுகளை மேம்படுத்திக் கொண்டுள்ளது. தற்போதைய நிலையில் நூறு வரையான இந்தியப் படையினர் மாலைதீவில் நிலைகொண்டு உள்ளனர். அந்த நாட்டுக்கு வழங்கப்பட்ட ஒரு விமானம் மற்றும் இரண்டு உலங்கு வானூர்திகள் என்பவற்றின் பராமரிப்புக்காகவே தனது படையினர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. அது மாத்திரமன்றி பாரிய பொருளாதார உதவிகளையும் மாலைதீவுக்கு இந்தியா வழங்கி உள்ளது.

இத்துணை தூரம் இந்தியாவுடன் உறவைப் பேணிய மாலைதீவு தற்போது இந்தியாவை வெளியேற்றும் முடிவை நோக்கிச் செல்வது கவலையுடன் நோக்கப்பட வேண்டிய விடயமே.

நடந்து முடிந்த தேர்தலில் ஆகப் பெரிய சுவாரசியம் என்னவெனில் தேர்தலில் தற்போது வெற்றி பெற்றுள்ள மூசூ, தேர்தல் பரப்புரைகளின் போது "இந்தியாவை வெளியேற்றுதல்" என்ற கோசத்தையே முன்வைத்திருந்தார். நடப்பு அரசுத் தலைவரான சொலிஹ் வெளிப்படையாக இந்தியாவை ஆதரிப்பவராக இருந்தார். ஒரு வகையில் பார்க்கும் போது நடைபெற்று முடிந்த தேர்தல் மாலைதீவின் எதிர்காலம் இந்தியாவை நோக்கியா அல்லது சீனாவை நோக்கியா என்பதைத் தீர்மானிக்கும் ஒன்றாகவே இருந்தது எனலாம்.

தற்போது தேர்தல் முடிவுகளின் பின்னர் மாலைதீவின் எதிர்காலம் சீனா சார்பாகவே அடுத்து வரும் 4 வருடங்களுக்கு இருக்கப் போகின்றது எனத் தெளிவாகத் தெரிந்து விட்டது. இந்நிலையில் தனது செல்வாக்கு அந்த நாட்டில் சரிவதை இந்தியா எவ்வாறு சரிசெய்யப் போகின்றது என்ற கேள்வி எழுகின்றது. அதேவேளை, உலகளாவிய அடிப்படையில் உருவாகி வரும் சீன எழுச்சியை அடக்கிவிடத் துடிக்கும் மேற்குலகம் இந்தத் தேர்தல் முடிவை எவ்வாறு கையாளப் போகின்றது என்ற கேள்வியும் எழுகின்றது.

உலகம் ஒரு பூகோளக் கிராமமாக உருமாறியுள்ள இன்றைய காலகட்டத்தில் எந்தவொரு நாடாக இருந்தாலும் அங்கு நடைபெறும் தேர்தல்களின் முடிவுகள் ஒட்டுமொத்த உலகிலும் அதிர்வுகளை ஏற்படுத்தும் ஒன்றாகவே இருந்து வருகின்றது. பனிப்போர் முடிவுக்கு வந்து பல பத்தாண்டுகள் கடந்த பின்னரும் பனிப்போர் ஏதோவொரு வடிவில் தொடரவே செய்கின்றது என்பதை உக்ரைன் - ரஸ்ய யுத்தத்தின் பின்னான உலகச் சூழல் துல்லியமாக வெளிக்காட்டி வருவதை அவதானிக்கலாம். இந்தப் பின்னணியில் மாலைதீவுத் தேர்தலையும் அணுகுவதே புத்தசாலித்தனமாகும்.
 
அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை என்பது மிகப் பிரபலமான ஒரு வாக்கியம். இன்றைய உலகில் நண்பர்கள், எதிரிகள் என்பவற்றைக் கடந்து நலன்களே அனைத்தையும் தீர்மானிப்பவையாக உள்ளன. நலன்கள் தேசத்தின் தேவைகளை, மக்களின் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றனவா அல்லது ஆட்சியாளர்களதும், அவர்களது அடிவருடிகளதும் நலன்களை மையமாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றனவா என்பது வேறு விடயம். ஆனால் அரசியலில் பிரதான பங்கு வகிப்பது ஏதோ ஒருவகை நலனே.

மாலைதீவு அரசியலில் யாருடைய நலன் இதுவரை பிரநிதித்துவம் செய்யப்பட்டது? இனிவரும் காலத்தில் யாருடைய நலன் பிரதிநிதித்துவம் செய்யப்பட இருக்கின்றது என்பவை ஆய்வுக்கு உட்பட்ட விடயம். "இந்தியாவை வெளியேற்றுவேன்" என்னும் கோசத்துடன் ஒருவர் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைக் கைப்பற்றும் நிலை இருக்குமானால் அந்த நாட்டுக்கு, அல்லது அந்த நபர் சார்ந்த கட்சிக்கு விரோதமாக அந்த நாடு செயற்பட்டிருக்க வேண்டும். அது எது? உண்மையில் மாலைதீவு மக்களுக்கு எதிராக, அல்லது மூசூவின் கட்சிக்கு எதிராக இந்தியா செயற்பட்டதா? தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கின்றதா? என்ற கேள்விகள் எழுகின்றன.
 
1988 நவம்பர் 3ஆம் திகதி தமிழீழ மக்கள் விடுதலைக் கழக உறுப்பினர்களின் துணையோடு மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை அப்போதைய இந்தியத் தலைமை அமைச்சராக இருந்த ராஜீவ் காந்தி படைகளை அனுப்பி முறியடித்தார். அன்றைய தருணத்தில் இந்தியப் படைகளின் தலையீடு இல்லாமல் போயிருந்தால் மாலைதீவில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தே இருக்கும் என்பது நிச்சயம்.

கால மாற்றம் இன்றைய நிலையை சாத்தியமாக ஆக்கியிருக்கின்றது என எடுத்துக் கொள்வதா? உலக ஒழுங்கு எனப் புரிந்து கொள்வதா? எதுவாக இருந்தாலும் மாலைதீவில் புதிய தலைமை அமைச்சரின் ஆட்சி இலகுவாக அமையப் போவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள பெரிய அரசியல் அறிவு எதுவும் தேவை இல்லை.
 
மாலைதீவு அரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த மக்கள் என்னவோ தங்களுக்கு வளமான எதிர்காலம் கிட்டக் கூடும் என நினைத்து வாக்களித்திருக்கலாம். ஆனால், உலக அரசியல் சதுரங்கத்தில் தமது நாடு பகடைக்காயாகப் பயன்படுத்தப்படும் என்பதை அவர்கள் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள் என்பதே நிச்சயமான உண்மை.

சுவிசிலிருந்து சண் தவராஜா

Leave a Reply