• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நெஞ்சில் நிறைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள்!

சினிமா

திரையிசைப் பாடல்கள் மூலம் பாட்டாளிகளின் குரலாய் ஒலித்தவர்.
29 வயதிற்குள் ஐந்தே வருடங்களில் 57 திரைப்படங்களின் மூலமாக 182 பாடல்கள் மட்டும் எழுதி பாட்டாளி மக்களின் மனங்களில் நிரந்தர இடம் பிடித்தவர்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் சீடர்.அவருடைய குயில் பத்திரிகையில் பணியாற்றியுள்ளார்.கட்சியையும் பத்திரிகையையும் இருகண்களாக பாவித்தவர்.
சினிமா வாய்ப்பு வந்து, வந்த வாய்ப்பை சரியாக பற்றி தமிழ்சினிமாவில் ஆழமாக தடம் பதித்தவர் திரு.கல்யாண சுந்தரம் அவர்கள்.
எம்ஜிஆர் அவர்கள் சூப்பர்ஸ்டாராக உயர்வதற்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களும் கூட அடித்தளம்தான்.அதனால்தான்,அவர் முதலமைச்சராக பதவியேற்றப் பொழுது ,"என்னுடைய முதல்வர் நாற்காலியின் மூன்று மட்டுமே என்னுடையது.மற்றொன்று பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திற்குரியது",என்றார்.
மிக எளிமையான வார்த்தைகளில் சாமான்யனின் மனதிலும் ஆழப்பதியும் படியான பாடல்களை புனைந்தவர்.
'அறிஞனைப் போல் சிந்தித்து, சாமான்யனைப் போல் வெளிப்படுத்து',என்று சொன்ன அரிஸ்டாட்டிலின் தத்துவத்தை அப்படியே தன்னுடைய பாடல்களின் மூலம் வெளிப்படுத்தினார்.
எத்தனையோ கவிஞர்கள் வரலாம்,போகலாம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் இடத்தை எவராலும் நிரப்பவே முடியாது.
நாடோடி மன்னன் திரைப்படத்தில் இடம் பெற்ற,
'காடு வெளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலும்தானே மிச்சம்",
       என்ற பாடல் வரிகள் விவசாயிகளின் பிரச்னையை தோலுரித்துக் காட்டுகிறதா?இல்லையா?
'வேப்ப மர உச்சியில் நின்னு 
பேயொன்னு ஆடுதுன்னு 
விளையாடப் போகும்போது 
சொல்லி வைப்பாங்க-உன்
வீரத்தை கொழுந்திலேயே 
கிள்ளி வைப்பாங்க',
            என்று எழுதி சிறுவர்களுக்கே பகுத்தறிவு சிந்தனயை ஊட்டினார்.
'வசதி படைத்தவன் தர மாட்டான்
வயிறு பசிக்கறவன் விட மாட்டான்',
          இந்த வரிகளில் பொதுவுடைமை சிந்தனையை போதித்த பட்டுக்கோட்டையார் படித்ததோ வெறும் இரண்டாம் வகுப்பு.
அவர் பார்க்காத தொழில் இல்லை.அதனால்தான் எளிய மக்களின் வாழ்வை அவரால் எளிமையாக புனைய முடிந்தது.
நாடகத்திலேயே தன்னுடைய பாடல் வரிகள் மூலம் பாட்டாளிவர்க்கத்தின் நிலையை படம்பிடித்துக் காட்டினார்.
'தேனாறு பாயுது
செங்கதிரும் சாயுது
ஆனால்,
மக்கள் வயிறு காயுது'.
     இந்த பாடல் வரிகள் மூலம்தான் அவர் பிரபலம் ஆனார்.
இசையமைப்பார் MSV அவர்களை வசீகரித்த பாடல் வரிகள்!
'குட்டி ஆடு தப்பி வந்தா குள்ள நரிக்குச் சொந்தம்
குள்ள நரி மாட்டிக்கிட்டா குறவனுக்குச் சொந்தம்
தட்டுக்கெட்ட மனிதருக்கு கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படி பாக்கப்போனா எட்டடிதான் சொந்தம்.'

ஒரு முறை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் இசையமைப்பாளர் MSV அவர்களை சந்திக்க சென்றிருக்கிறார்.MSV அவர்கள் பாசவலை படத்தின் பாடல் கம்போஸிங்கில் இருந்த நேரமது.அதனால்,அவர் கவிஞரை சந்திக்க மறுத்து விட்டார்.
கவிஞர் அவர்கள் அவருடைய பாடல் ஒன்றை மட்டும் எழுதி, MSV அவர்களின் உதவியாளரிடம் கொடுத்து,'இந்தப் பாடலை மட்டும் படிக்கச் சொல்லுங்கள்,நான் வருகிறேன்,'என்று சொல்லி கிளம்பி விட்டார்.அந்தப் பாடலைப் படித்துப் பார்த்த MSV அவர்களுக்கு மிகச்சிறந்த கவிஞனை,சிந்தனையாளனை அவமானப்படுத்தி விட்டோமே எண்ணி அன்றைய ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமலேயே மனதளவில் புழுங்கியிருக்கிறார்.மறுநாளே கவிஞரை வரச்சொல்லி பாசவலை படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார்.அந்தப் பாடல்தான் மேலே குறிப்பிட்டுள்ளது.அந்தப்பாடல் பட்டிதொட்டியெங்கும் தமிழர்கள் கொண்டாடிய பாடல் அது.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் குறுகிய காலமே வாழ்ந்தாலும், தன்னுடைய படைப்புகளின் மூலம் மக்களின் மனதில் என்றும் வாழ்வார்.
பாட்டாளி மக்களைப் பற்றி மட்டுமே சிந்தித்த மகத்தான மக்கள் கவிஞன்.
அவருடைய நினைவைப்(64-ஆம் ஆண்டு நினைவு நாள்) போற்றுவோம்.என்றென்றும் நெஞ்சில் நிலைநிறுத்துவோம்.

 

சே மணிசேகரன்
8.10.2023

Leave a Reply