• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிங்கர் உமா ரமணன் பர்சனல் ஷேரிங்

சினிமா

கணவர்கிட்ட வாங்கின முதல் சம்பளம்... 30 ரூபாய்!” சிங்கர் உமா ரமணன்.

“ 'உங்களை ரொம்பவே மிஸ் பண்றோம். முன்பு மாதிரி சினிமா சார்ந்த உங்க பங்களிப்பு அதிகமாகணும்'னு ரசிகர்கள் பலரும் கேட்கிறாங்க. நானும் கணவரும் சினிமாவில் வொர்க் பண்ண எப்பயுமே தயார்தான்" - புன்னகையுடன் பேச ஆரம்பிக்கிறார் உமா ரமணன். 80, 90-களில் பின்னணிப் பாடகியாக சினிமாவிலும் தன் கணவர் ரமணனுடன் இணைந்து மேடைக் கச்சேரிகளிலும் கலக்கியவர்.

“சின்ன வயசுலேருந்து இசை ஆர்வமுண்டு. காலேஜ் கல்ச்சுரல் நிகழ்ச்சிகள்ல பாடி நிறைய பரிசு வாங்குவேன். எம்.ஏ முடிச்ச பிறகு, ஏர்ஹோஸ்டஸாக ஆசைப்பட்டேன்.

1972-ல் ஒருநாள் ரமணனைச் சந்திச்சப்போ, தன்னோட 'மியூசியானோ' இசைக்குழுவுல பாடக்கேட்டார். நானும் பாடினேன். 30 ரூபாய் சம்பளம் கொடுத்தார். அந்த நினைவுகள் எல்லாம் மனசுல பசுமையா பதிஞ்சிருக்குது.

தொடர்ந்து நாலு வருஷம் அவரின் இசைக்குழுவுல தனியாகவும் அவரோடு சேர்ந்தும் நிறைய கச்சேரிகள்ல பாடினேன். திடீர்னு ஒருநாள், `நாம ரெண்டு பேரும் கல்யாணம் செய்துக்கலாமா'னு கேட்டார். நானும் சம்மதம் சொல்ல, நண்பர்களான நாங்க 1976-ல் தம்பதியானோம்.

80, 90-கள்ல நாங்க ரொம்ப பிஸியா கச்சேரிகள் செய்தோம். ஒரே நாள்ல பல கச்சேரிகள் செய்த அனுபவமும் உண்டு. அந்தச் சமயத்துல எங்களுக்குப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்துச்சு. ரொம்ப பிஸியாவும் சந்தோஷமாவும் வொர்க் பண்ணிட்டிருந்தோம். இதுவரை 6,000-க்கும் அதிகமான கச்சேரிகள் செய்திருக்கிறோம்.

மேடைக் கச்சேரிகள்ல மட்டுமே பாடிட்டிருந்த நான், கணவரின் இசையமைப்பில் வெளியான 'நீரோட்டம்' படத்தில் பின்னணிப் பாடகியா அறிமுகமானேன். பிறகு, பல இசையமைப்பாளர்கள்கிட்டேருந்து பாடுறதுக்கு நிறைய வாய்ப்புகள் வந்துச்சு.

இளையராஜா சார் மியூசிக்ல 'இன்னும் சில பக்கங்கள்' படத்துல முதல்ல பாடினாலும், 'நிழல்கள்' பட 'பூங்கதவே தாழ்திறவாய்' பாட்டுதான் பெரிய ரீச் கொடுத்துச்சு. தொடர்ந்து ராஜா சார் மியூசிக்ல பல நூறு பாடல்களைப் பாடினேன்.

'ஆகாய வெண்நிலாவே', 'நீ பாதி நான் பாதி', 'பூபாளம் இசைக்கும்', 'ஆனந்த ராகம்'னு ராஜா மியூசிக்ல பாடின நிறைய பாடல்கள் சூப்பர் ஹிட்டாச்சு. அதனால அந்தக் காலத்துல 'ஹிட் லிஸ்ட் சிங்கர்'னு எனக்குப் பெயர் வெச்சுட்டாங்க. 'பூங்கதவே தாழ்திறவாய்', 'கண்ணும் கண்ணும்தான் (திருப்பாச்சி)' பாடல்கள் என் ஃபேவரைட்.

கணவர் ரமணன், சில படங்கள்ல நடித்தும், இசையமைத்தும், பின்னணிப் பாடல்கள் பலவும் பாடியுமிருக்கிறார். ஆனா, தொகுப்பாளராதான் அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். சன் டி.வி 'சப்த ஸ்வரங்கள்' நிகழ்ச்சியின் தொகுப்பாளரா 10 வருஷங்கள் சிறப்பா பணியாற்றினார். நூற்றுக்கணக்கான சிங்கர்ஸை உருவாக்கினதுல இவரின் பங்கு அதிகம்.

வீட்டில் இருக்கிறப்போ இசை சார்ந்தும், கச்சேரி சமயங்கள்ல மத்த விஷயங்கள் பற்றியும் விவாதிக்க மாட்டோம். வீட்டில் நாங்க இசைப்பயிற்சி எடுத்துக்கிட்டதுமில்லை. ஆன் தி ஸ்பார்ட்லதான் பாடுவோம்.

தம்பதினு சொல்லறதைவிட, நாங்க நல்ல நண்பர்கள். 2000-ம் வருஷத்துக்குப் பிறகு, எங்களுக்கு சினிமா வாய்ப்புகள் குறைஞ்சுடுச்சு. ஆனா, தொடர்ந்து இப்போவரை மேடைக் கச்சேரிகள்ல பாடிட்டிருக்கிறோம். சினிமா வாய்ப்புகள் வந்தால் ஆக்டிவா வொர்க் பண்ண நாங்க தயார். 'வீ ஆர் ஸ்டில் இன் தி ரேஸ்' என்று புன்னகைக்கிறார் உமா ரமணன்.

Prashantha Kumar

Leave a Reply