• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இவரை கவிஞர் என்பதை விட புலவர் என அழைக்கலாம். 

சினிமா

கவிதை எழுதுபவர்கள் வேறு; சினிமாவுக்கு எழுதுகிற பாடலாசிரியர்கள் வேறு. புலமையுடன் எழுதுபவர்கள் மற்றொரு ரகம். ஆனால் சினிமாவுக்கு பாட்டெழுத வந்தவர், புலவராகவும் இருந்துவிட்டால், அவரிடமிருந்து வருகிற பாட்டுகெளல்லாம் மா, பலா, வாழை என முக்கனியின் சுவையுடன்தானே இருக்கும். கவிஞர் வாலியின் பல பாடல்களை கண்ணதாசன் பாடல்கள் என்று குழம்பிப்போவோம். கங்கை அமரன் பாடல்கள் சிலவற்றை வைரமுத்து பாடல்கள் என நினைத்துக்கொள்வோம். ‘இந்தப் பாட்டே புதுவிதமா இருக்கே... யாருய்யா எழுதினது?’ என்று கேட்பார்கள். ‘வேற யாரு... புலமைப்பித்தன்யா’ என்றதும் ‘அதானே பாத்தேன்’ என்று சொல்லிக்கொள்வார்கள். அப்படியொரு தனி ரகம்... அவருடைய பாடல்கள்!
கோயம்புத்தூர்க்காரரான புலமைப்பித்தன், 1935-ம் ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி பிறந்தார். பிறந்ததும் அவருக்கு ராமசாமி என்றுதான் பெயர் வைத்தார்கள். வளர வளர, கூடவே வருடன் சேர்ந்து தமிழும் வளர்ந்து, வளர்த்தது. தமிழின் மீதும் தமிழ்ப் புலமையின் மீது காதல் கொண்டவர், தன் பெயரை புலமைப்பித்தன் என்று மாற்றிக்கொண்டார். ‘எப்படியாவது சினிமாவுக்குப் பாட்டெழுத வேண்டும்’ என்று ஆசைப்பட்டார். ஆனால், ‘இப்படித்தான் எழுத வேண்டும்’ என்பதில் மிக உறுதியாக இருந்தார்.
1964-ல் சென்னைக்கு வந்தவருக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் கதவு திறந்தது. அப்படி கோடம்பாக்கத்து ரிக்கார்டிங் தியேட்டர் கதவைத் திறந்துவிட்டவர் எம்ஜிஆர். ‘குடியிருந்த கோயில்’ படத்தில் ரோஷ்னாரா பேகம் எனும் கவிஞரையும் புலமைப்பித்தனையும் அறிமுகப்படுத்தினார். ‘நான் யார் நீ யார்’ என்கிற பாடல்தான் சினிமாவில் இவர் எழுதிய முதல் பாடல்.
எம்ஜிஆரை யாருக்குத்தான் பிடிக்காது? ஆனால் எம்ஜிஆருக்கு ஒருவரைப் பிடிப்பதென்பது லேசுப்பட்ட காரியமல்ல. தன் வசீகரப் புலமையாலும் தமிழாலும் எம்ஜிஆரையே தன் பக்கம் இழுத்தார் புலமைப்பித்தன். ‘’இந்தப் படத்துல இந்தப் பாட்டை புலமைப்பித்தனுக்குக் கொடுத்துருங்க’’ என்று எம்ஜிஆர் இயக்குநரிடமும் இசையமைப்பாளரிடமும் சொல்லிவிடுவார். பிறகு மறுபேச்சுக்கே இடமில்லை.

அதேபோல், ’’புலமைப்பித்தன் பாட்டு கொடுத்துட்டாரா?’’ என்று கேட்டுக்கொண்டே இருப்பார் எம்ஜிஆர். கொடுத்தது தெரிந்ததும், பாடல் வரிகளைச் சுடச்சுட அறிந்துகொள்ளும் ஆவலுடன் அதைக் கேட்டு ரசிப்பார்.
'பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்
தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணரமாட்டாயோ
அந்த நிலையில் அந்த சுகத்தை நான் உணரக்காட்டாயோ’ என்கிற ‘ஆயிரம் நிலவே வா’ பாடல் வரிகளைக் கேட்டுச் சொக்கிப் போனது நாம் மட்டுமா? எம்ஜிஆரும்தான்!
‘எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலாய் ஓடிவா’ என்று இலக்கியத்தையும் இலக்கணத்தையும் சேர்த்துக் குழைத்து, சாதாரண தமிழ் சினிமாப் பாடலாகக் கொடுக்கிற வித்தை புலவருக்கு மட்டுமே உரித்தானது. ’நீ என்னென்ன செய்தாலும் புதுமை / உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை’ என்று காதலர்கள் கொஞ்சுவதிலும் புலமைச் சுகம் கூட்டினார். ’பொன்னந்தி மாலைப் பொழுது / பொங்கட்டும் இன்ப நினைவு’ என்று அந்த குளுகுளுக் காட்சிக்கேற்ப வரிகளைப் போட்டு நம்மை அவர் வசமாக்கிவிடுகிற தமிழ் வாத்தியார் அவர்!
பல்லாண்டு வாழ்க’ எனும் படத்தில், ’சொர்க்கத்தின் திறப்புவிழா / புதுச்சோலைக்கு வசந்தவிழா / பக்கத்தில் பருவநிலா இளமை தரும் இனிய பலா / இன்று பார்க்கட்டும் இன்ப உலா’ என்று தமிழில் விளையாடுவார் புலமைப்பித்தன். ’பாடும்போது நான் தென்றல் காற்று பருவமங்கையோ தென்னங்கீற்று நான் வரும்போது ஆயிரம் ஆடல் ஆட வந்ததென்ன நெஞ்சம் ஆசை கொண்டதென்ன’ என்கிற ‘நேற்று இன்று நாளை’ படத்தின் பாடலில், ’மெல்லிய பூங்கொடி வளைத்து, மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து, இதழில் தேனைக் குடித்து, ஒரு இன்ப நாடகம் நடித்து’ என்று எழுபதுகளின் எம்ஜிஆரை, தன் வசீகர வரிகளால் இளமை நாயகனாக்கியிருப்பார் புலமைப்பித்தன்.
அதேசமயத்தில், ‘ஓடிஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்’ எனும் வாழ்வியல் தத்துவத்தை மிக எளிமையாக ‘நல்ல நேரம்’ படத்தில் சொல்லியிருப்பார். ஊனமுற்ற தங்கைக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டுமே எனும் கவலையுடன் பட்டணத்துக்கு வருபவனின் கண்களில் திருமண ஊர்வலம் படும். அப்போது, அந்த இசைக்கலைஞன், ’பூமழைத்தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது - எழில் பொங்கிடும் தங்கையின் நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது மங்கலக் குங்குமம் சிரிக்கின்றது’ என்று ‘குங்குமம் சிரிக்கின்றது’ என்பதில் ஒரு கவித்துவத்தைக் குழைத்துத் தீட்டியிருப்பார். ’பிள்ளைத்தமிழ் பாடுகிறேன் பிள்ளைக்காகப் பாடுகிறேன்’ என்று எழுதினார்.
இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவினில் தொட்டிலைக் கட்டிவைத்தேன் / அதில் பட்டுத்துகிலுடன் அன்னச்சிறகினை மெல்லென இட்டுவைத்தேன்’ என்று ஆராரோ பாடியிருப்பார்.
’நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால் / என் கேள்விக்கு பதிலைத் தரட்டும் நேர்மைத் திறமிருந்தால்’ என்று எம்ஜிஆருக்கு எழுதினார் புலமைப்பித்தன். அதில், ’உழைப்போர் அனைவரும் ஒன்று அந்த உணர்வினில் வளர்வது இன்று, வளியோர் ஏழையை வாட்டிடும் கொடுமை இனியொரு நாளும் நடக்காது’ என்று கம்யூனிஸமும் பாடியிருப்பார். ’தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று தமிழ்க்கவி பாரதி பாடிய பாட்டினை நடைமுறையாக்கிடுவோம்’ எனப் பாடிய புலமைப்பித்தனை எம்ஜிஆர் விடவே இல்லை. எனும் சினிமாப் பாடல்களுக்குள்ளேயே சங்கதிகளையும் சேதிகளையும் இலக்கண இலக்கியங்களையும் ஒன்றாக்கி, ஒரு குவளைக்குள் அடைத்து பாட்டுப்பாட்டாகக் கொடுத்த புலமைப்பித்தனின் எழுத்தில் சொக்கிப்போன அரியணைக்கு வந்த பின்னரும் கூட எம்ஜிஆர் அவரை விட்டுவிடாமல் அரசவைக் கவிஞராக்கினார்.
உன்னால் முடியும் தம்பி’ படத்தில் புலமைப்பித்தன் இப்படி எழுதினார்...
’ஆற்றுக்குப் பாதை இங்கு யாரு தந்தது
தானாகப் பாதை கண்டு நடக்குது
காற்றுக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது
தானாகப் பாட்டு ஒண்ணு படிக்குது
எண்ணிய யாவும் கைகளில் சேரும்
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
காலையில் தோன்றும் சூரியன் போலே பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே
சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா
கங்கையும் தெற்கே பாயாதா காவிரியோடு சேராதா
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா?’ என்று பாட்டுக்குள் தேன் வரிகளையும் தேள் வரிகளையும் சூட்டி கனாக் கண்ட நவீன புலவன்... புலமைப்பித்தன்.
 புலமைப்பித்தன் அவர்கள், சிறந்த பாடலாசிரியராக இருந்தாலும், கண்ணதாசன், வாலி, வைரமுத்து போல, பலதரப்பட்ட கதைச்சூழல்களுக்கேற்ப, விதவிதமான மொழிநடையில் பாடல்கள் புனையும்திறன் பெற்றவரில்லை. காதல் அல்லது தத்துவப் பாடல்களில், இலக்கியநயம் மேலோங்க, குறிப்பிட்ட கதைச்சூழல்களுக்கேற்ப மட்டுமே, அவரால் பாடல் புனைய முடிந்தது. இதனால்தான், அவரால் திரையுலகில் பெரிய அளவிலான புகழைப் பெற இயலவில்லை. தவிர, அனைவருடனும் சுமூகமாகப் பழகும் பாங்கும், அவரிடம் பெரியஅளவிலிருந்தது கிடையாது. இது அவர், பெரியஅளவில் பிரபலமடையாமல் போனதற்கான இரண்டாவது காரணமாகும்.
பக்தி, தத்துவம், சோகம், நகைச்சுவை உள்ளிட்ட பலதுறை பாடல்களிலும் கலக்கிய கண்ணதாசனால், "மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்", "ஜிஞ்சினுக்கா சின்னக்கிளி", "அடி என்னடி ராக்கம்மா" பாடலையும் எழுதி, அடித்தட்டு மக்களின் ரசனையையும் கவர முடிந்தது. "ஜனனி! ஜனனி" பாடலை எழுதிய வாலியால், "வா வாத்யாரே வூட்டாண்ட" , "அண்ணாத்த ஆடுறார்" பாடல்களையும் எழுதி, அடித்தட்டு மக்களின் ரசனையையும் கவர முடிந்தது. இலக்கிய நயம்மிக்க பாடல்களைத் தந்த வைரமுத்துவால், "ராஜாவுக்கு ராஜா நான்டா", "தண்ணித் தொட்டி தேடிவந்த கன்னுக்குட்டி நான்" பாடலையும் எழுதி, புகழ்பெற முடிந்தது.
புலமைப்பித்தன் பாடல்களை எடுத்துக் கொள்ளுங்கள். மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க ரசனைகளைத் தாண்டி, அவரால் அடித்தட்டு மக்களுக்கான நடையில், பாடல்களைப் புனைய இயலவில்லை. அனைத்து தரப்பு மக்களின் ரசனைகளையும் கவர்பவர் மட்டுமே, பெரிய பாடலாசிரியராகத் திகழ முடியும். புலமைப்பித்தனால், தமது புலமை வட்டத்தை விட்டு வெளிவராத நிலையில், அவர் பிரபலப் பாடலாசிரியராவதில், பின்னடைவு நேரிட்டது. இது அவரைக் குறைகூறுவதாகாது. அவருடைய பாட்டெழுதும் பாங்கு அப்படி. மற்றபடி குறைவான பாடல்களே எழுதினாலும், நிறைவான இலக்கியநயம் மிக்க பாடல்களை எழுதியவகையில், புலமைப்பித்தன் சிறந்த பாடலாசிரியரே ஆவார்.
1935 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6_ஆம் பிறந்த புலமைப்பித்தன் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி அவரது 87-ம் வயதில் மறைந்தார்

 

Muthammal Rammohan

Leave a Reply