• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈஸ்டர் தாக்குதல் - நாடாளுமன்றத்தில் சஜித் தெரிவித்த கருத்தால் பரபரப்பு

இலங்கை

தாஜ் ஹொட்லில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  இன்றைய தினம்  நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது” ஈஸ்டர் தாக்குதல்  தொடர்பாக சனல் 4 கருத்து வெளியிடும்முன்னரே நாம், தான் பின்னணியில் உள்ளவர்கள் யார், மூலக்காரணம் என்ன என்பது தொடர்பாக பல தகவல்களை வெளியிட்டிருந்தோம்.

மலல்கொட அறிக்கையை அரசாங்கம் ஒழித்துக் கொண்டிருந்தது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக தான் இது வெளியே வந்தது.தெரிவுக்குழுவின் அறிக்கையில் பகுதி ஒன்றை மட்டும்தான் எமக்கு பார்க்க முடியும். இரண்டாம் பாகத்தைப் பார்க்க வேண்டுமெனில் நாடாளுமன்ற நூலத்திற்கு செல்ல வேண்டும்.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமன்றில், ஒட்டுமொத்த மக்களுக்கும் இந்த உண்மை மறைக்கப்பட்டுள்ளது. முதுகெலும்பு உள்ள ஓர் அரசாங்கமாக இருந்தால், மலல்கொட அறிக்கை, நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை, ஜனாதிபதி தெரிவுக்குழுவின் அறிக்கைகளின் பரிந்துரைகளை நிறைவேற்றிக் காட்டுங்கள்.

தாஜ் ஹொட்லில் தாக்குதல் நடத்த வந்த ஜமீல் எனும் பயங்கரவாதி, தனது பையுடன் முச்சக்கரவண்டியொன்றில் ஏறி, தெஹிவலை, ரொப்பிக்கல் இன் எனும் ஹொட்டலுக்கு செல்கிறார். அங்கு அவர் கொண்டுவந்த பையை வைத்துவிட்டு, அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு செல்கிறார்.

பள்ளிவாசலில் வைத்து, அங்குள்ள முன்னாள் பொலிஸாரான பாதுகாப்பு அதிகாரி, ஜமிலிடம் விசாரணை செய்கிறார்.
இதன்போது, தனது மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளதாகவும், சமயக்கிரியைகளில் ஈடுபடவே பள்ளிக்கு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

வேண்டுமெனில் மனைவிடம் தொலைப்பேசியில் கேட்டுமாறும் அவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அதிகாரியும், ஜமீலின் மனைவியுடன் பேசியபோதும், ஆம் எனது கணவர் சண்டையிட்டுக் கொண்டுதான் வந்துள்ளார் என்றும் தற்போது வீட்டுக்கு இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளும் வந்துள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர், ஜமீல் தொடர்பான சந்தேகம் இல்லாமல் போனமையால், அவரை விடுவித்த பாதுகாப்பு அதிகாரி, தானும் தனது கடமைகளை முடித்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். இந்த நிலையில், 10 நிமிடங்கள் கழித்து ஜமீலின் மனைவியின் வீட்டுக்கு வந்த, பாதுகாப்பு அதிகாரிகள் எனக்கூறுவோர், குறித்த பாதுகாப்பு அதிகாரிக்கு தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டு, தாங்கள் வரும்வரை ஜமீலை அனுப்ப வேண்டாம் என கூறியுள்ளனர்.

ஆனால், ஜமீலை தான் அனுப்பி விட்டதாக பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரொப்பிக்கல் இன் ஹொட்டலுக்கு சென்ற ஜமீல், அங்கே குண்டை வெடிக்க வைத்து உயிரிழக்கிறார். இந்தச் சம்பவம் 1.30 மணியளவில் நடக்கிறது. 3.30 மணியளவில் மீண்டும் குறித்த பாதுகாப்பு அதிகாரிக்கு தொலைப்பேசியில் அழைப்பு விடுத்த பொலிஸார், வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளார்கள்.

அவரும் 5 மணியளவில் பொலிஸ் நிலையம் சென்றபோது, ஜமீலின் வீட்டில் இருந்ததாகக் கூறப்படும் அந்த பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு இருந்துள்ளனர். இதன்போது, முன்னாள் பொலிஸ் அதிகாரியான குறித்த பாதுகாப்பு அதிகாரிக்கு, அங்கிருப்பது புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் என தெரிய வந்துள்ளது.

ஜமீல் குண்டை வெடிக்க வைக்கும் முன்னர், ஜமீலின் மனைவியின் வீட்டுக்கு எப்படி இந்த இராணுவப்புலனாய்வுப் பிரிவினர் சென்றார்கள்? அத்தோடு, குறித்த புலனாய்வுப் பிரிவினர் கதைத் தொலைப்பேசி இலக்கமானது, சிலோன் சிப்பிங் எலைன்ஸ் எனும் நிறுவனத்தினால் பதியப்பட்டுள்ளது. இலக்கம் 83, பௌத்தாலோக மாவத்தை, கொழும்பு 3 எனும் பொய்யான விலாசத்தில் தான் இந்த சிம் காட் பதியப்பட்டுள்ளது.

அதாவது, திருட்டுத்தனமாகத்தான் இந்த சிம் காட்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த சிம் காட்டை பயன்படுத்திதான் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கீத் நொயால், பிரகீத் ஹெக்நெலிகொட, உபாலி தென்னகோன் உள்ளிட்டவர்களை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட சிம் காட்களும், இந்த பொய்யான விலாசத்தில்தான் பதியப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் விசாரணையில் தெரியவந்த உண்மைகளாகும்.

இதனால்தான் சாட்சிகள் அடங்கிய அறிக்கையை நாடாளுமன்ற நூலகத்தில் இவர்கள் ஒழித்து வைத்துள்ளார்கள்.
இதனை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். இனியும் மக்களிடமிருந்து மறைத்து வைத்திருக்க முடியாது.
நான் இங்கு கூறுவது உண்மையா- பொய்யா என்பது தொடர்பாக விசாரணை நடத்துங்கள்.

பயங்கரவாதி சஹ்ரானுக்கு மேலாக ஒருவர் உள்ளார். அபு ஹிம் என்பவர் தொடர்பாக நிச்சயமாக விசாரணை நடத்த வேண்டும்.
சஹ்ரானுக்கு மேலாக இருப்பவர் நௌபர் மௌலவி என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஆனால், ஏன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு நௌபர் மௌலவியை அழைத்து விசாரணை செய்யவில்லை?
அத்தோடு, சாரா ஜஸ்மின் தொடர்பாக 3 டி.என்.ஏ. பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

முதல் இரண்டிலும் டி.என்.ஏ. ஒத்துப்போகாத நிலையில், வருடங்கள் சென்று மேற்கொள்ளப்பட்ட மூன்றாது டி.என்.ஏ. பரிசோதனையில் தான் அவரது மரணம் உறுதி செய்யப்பட்டது. ஆனால், சாய்ந்தமருது குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடத்தில் அவரது உடல் இருக்கவில்லை. யாரை ஏமாற்ற இவ்வாறு செய்ய வேண்டும்?

கோட்டாபய ராஜபக்ஷ நவம்பர் 18 ஆம் திகதி ஜனாதிபதியாகி, 22 ஆம் திகதி தான் பிரதமரை நியமிக்கிறார்.
எனினும், பிரதமரை நியமிக்கும் முன்னரே ஷானி அபேசேகரவை அவர் மாற்றுகிறார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்த 31 அதிகாரிகளையும் கோட்டாபய ராஜபக்ஷ மாற்றியுள்ளார்.

700 சி.ஐ.டி. அதிகாரிகளுக்கு வெளிநாட்டுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. இது அனைத்தும் உண்மையான தகவலாகும்.
ஏன், கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு செய்ய வேண்டும்? இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதன் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளிவர வேண்டும்.

Leave a Reply