• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈஸ்டர் தாக்குதல் - உண்மை என்ன என்பதைத் தெரிந்துக் கொள்ள வேண்டும்

இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக  ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளை, அரசாங்கம் உடனடியாக மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக எமக்கு உண்மைகளைத் தெரிந்துக் கொள்ள வேண்டும். இதற்காக பக்கச்சார்பற்ற சுயாதீனமான விசாரணையொன்று அவசியமாகும்.

இத்தாக்குதலின் பின்னணியின் உள்ளவர்கள் யார் என்பதை வெளியே கொண்டுவர வேண்டும். இதனால், நாம் நாடாளுமன்றில் அடுத்த வாரம் 2 நாட்கள் விவாதமொன்றை கோரியுள்ளோம். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி தெரிவுக்குழுவின் முழுமையான இரண்டு அறிக்கைகள் உள்ளன.

ஆனால், எதிர்க்கட்சித்தலைவரான எனக்கு இதனை வழங்க அரசாங்கம் தயக்கம் காட்டுகிறது. 2 ஆவது தொகுப்பின், 2 மற்றும் மூன்றாம் பாகங்களின் பிரதிகளை வழங்க முடியாது என அரசாங்கம் கூறியுள்ளது. இதற்கான உரிமை எதிர்க்கட்சித் தலைவருக்கு இல்லையா? கோட்டாபயராஜபக்ஷவும் அன்று இதனை வழங்க முடியாது என்றே கூறினார்.

அவரின் வழியில்தான் இந்த அரசாங்கமும் செயற்படுகிறது. எனக்கு மட்டுமல்ல. 225 உறுப்பினர்களுக்கும் பிரதிகளை வழங்க அரசாங்கம் தயங்குகிறது. வேண்டுமெனில், நாடாளுமன்ற நூலகத்திற்கு சென்று அவற்றை வாசித்துக் கொள்ளுங்கள் என அரசாங்கம் கூறுகிறது.

கொழும்பு பேராயர் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களும் இதன் உண்மைகள் வெளிவர வேண்டும் என கோரிவரும் நிலையில், அரசாங்கமோ உண்மைகளை தொடர்ச்சியாக மூடி மறைக்கவே முற்படுகிறது. உண்மையில், இது மக்கள் ஆணையுடன் நாடாளுமன்றுக்குத் தெரிவான எமது வரப்பிரசாதங்களை மீறும் செயலாகும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply