• Welcome to TamilsGuide
செய்திகள் 1

400 பேருக்கு பணத்தை திருப்பி கொடுத்த ஏ.ஆர்.ரகுமான் - ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்தார்

சினிமா

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் கடந்த 10-ந் தேதி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை ஆன்லைனில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இதையொட்டி நிகழ்ச்சி நடந்த அன்று மைதானத்துக்கு ஏராளமானோர் வாகனங்களில் குடும்பத்துடன் திரண்டு வந்தனர். முன்னேற்பாடுகள் சரிவர செய்யப்படாத காரணத்தால் குளறுபடியாகி போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் டிக்கெட் எடுத்து நிகழ்ச்சியை காண வந்த ஏராளமானோர் நிகழ்ச்சிக்கு செல்ல முடியாமல் குழந்தைகளுடன் நெரிசலில் சிக்கி தவித்தனர்.

இந்த நெரிசலில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாகனமும் சிக்கியது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஏராளமான ரசிகர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும், ஏ.ஆர்.ரகுமானையும் விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டனர். ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக பல திரைப்பிரபலங்கள் கருத்து தெரிவித்திருந்தனர். பணத்தை திருப்பி அனுப்பினார். இந்த சம்பவத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் மன்னிப்பு கேட்டதுடன் நிகழ்ச்சியை காண முடியாமல் ஏமாந்து சென்ற ரசிகர்கள் டிக்கெட்டை இமெயிலில் அனுப்ப கூறியும், அதை பரிசீலனை செய்து அவர்களுக்கு டிக்கெட்டுக்குரிய பணத்தை திரும்ப தருவதாகவும் கூறி இருந்தார். இதையொட்டி மின்னஞ்சலில் சுமார் 4000 பேர் பணத்தை திருப்பிக் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். இந்தநிலையில் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து முதற்கட்டமாக சுமார் 400 பேருக்கு டிக்கெட் கட்டணத்தை ஆன்லைன் மூலம் ஏ.ஆர்.ரகுமான் திருப்பி அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply