• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாராளுமன்றத்துக்குள் புகுந்து போராட்டம் நடத்தியவர்களுக்கு மன்னிப்பு- வேட்பாளர் விவேக் ராமசாமி

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்க இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி முடிவு செய்தார். அக்கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுப்பதற்கான பிரசாரத்தில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தான் அதிபராக வெற்றி பெற்றால் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 6-ந்தேதி அமெரிக்க பாராளுமன்றத்துக்குள் புகுந்து போராட்டம் நடத்திய முன்னாள் அதிபர் டிரம்பின் ஆதரவாளர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, அமெரிக்காவில் இப்போது இரண்டு அடுக்கு நீதி அமைப்பு உள்ளது. சில கலகக்காரர்கள் சுதந்திரமாக சுற்றி திரிகின்றனர். அதே வேளையில் ஜனவரி 6-ந்தேதி போராட்டத்தை அமைதியான முறையில் நடத்தியவர்கள் ஜாமீன் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அதிபர் ஜோபைடனின் அநீதித்துறையானது, போராட்டத்தில் தொடர்புடைய வன்முறையற்ற குற்றங்களுக்காக 1000-க்கும் மேற்பட்ட கைதுகளை நிறைவேற்றியுள்ளது. இது நமது சட்ட அமைப்பின் அடிப்படை கொள்கைகள் மீது இருண்ட நிழலை ஏற்படுத்தியது. நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் உரிய நடைமுறை மறுக்கப்பட்ட அனைத்து அமெரிக்கர்களையும் மன்னிக்க உறுதியளிக்கிறேன். இதில் ஜனவரி 6-ந்தேதி நடைபெற்ற போராட்ட மற்றும் வன்முறையற்ற எதிர்ப்பாளர்களும் அடங்குவர் என்றார்.

Leave a Reply