• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் குப்பையோடு குப்பையாக வீசப்பட்ட தங்க நகைகள்

இலங்கை

யாழில் திருடர்களுக்குப்  பயந்து குப்பைகளோடு குப்பையாக வைத்திருந்த 8 பவுன் பெறுமதியான தங்க நகைகள்  எதிர்பாராத விதமாக வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாவகச்சேரி மண்டுவில் வட்டாரப் பகுதியேிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது வீட்டில் உள்ள சுமார் 8 பவுன்  பெறுமதியான நகைகளை கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில் பழைய துணி ஒன்றில் கட்டி குப்பைகள் போல வீட்டிலேயே பாதுகாத்து வந்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் அவரது வீட்டை சுத்தம் செய்த போது எதிர்பாராத விதமாக குறித்த நகைகளும் குப்பைகளோடு குப்பைகளாக  வீதியில் கொட்டப்பட்டுள்ளன.

இதனையடுத்து  வீட்டிலிருந்த நகைகள் காணாமல் போனதையடுத்து நிலைமையை உணர்ந்த உரிமையாளர் குப்பைகளோடு நகைகளும் வீதியில் கொட்டப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வீதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கெமராக்களை சோதனையிட்டுள்ளார்.

அப்பொழுது இன்று காலை அப்பகுதியில் நகராட்சி மன்ற கழிவகற்றும் வாகனம் மூலம் கழிவுகள் அகற்றப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து உடனடியாக சாவகச்சேரி நகராட்சி மன்றத்துக்கு சென்று நகையின் உரிமையாளர் இது குறித்து  தெரியப்படுத்தியுள்ள  நிலையில்   சுகாதார தொழிலாளரான சண்முகம் என்பவரால்  குறித்த நகைகள்  மீட்கப்பட்டு உடனடியாகவே உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நகராட்சி மன்ற சுகாதார ஊழியர்களின்  நேர்மை குறித்து அப்பகுதி மக்கள் தமது  பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
 

Leave a Reply