• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாகப்பிரிவினை தமிழ் திரை....

சினிமா

நடிகர்கள்: சிவாஜி, சரோஜாதேவி, எம்.ஆர்.ராதா, எம்.என்.நம்பியார், பாலையா, எம்.வி.ராஜம்மா, எஸ்.வி.சுப்பையா.
படம் வெளியான ஆண்டு: 1959
இயக்கம்: ஏ.பீம் சிங்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
தயாரிப்பு: சரவணா பிலிம்ஸ், ஜி.என்.வேலுமணி
சிறந்த தமிழ் படத்திற்காக, 1960ம் ஆண்டின், தேசிய விருது பெற்ற படம்.
சிவாஜி - பீம்சிங் கூட்டணியில், 'பா' வரிசை படங்கள் கூட காரணமாக இருக்கலாம். பாசமலர், பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும் வரிசையில், பாகப்பிரிவினை, 'மெகா ஹிட்' படமாக அமைந்தது.
சிறு வயதில், மின்கம்பத்தில் மாட்டிய காற்றாடியை எடுக்க செல்லும் சிவாஜி மீது மின்சாரம் பாய்ந்ததில், ஒரு கை, கால் ஊனமாகி விடும். அப்பா, பெரியப்பா என, கூட்டுக் குடும்பமாக வாழும் சிவாஜியை, சரோஜாதேவி காதலித்து மணப்பார்.
பட்டணத்தில் படித்த பெரியப்பாவின் மகன் நம்பியார் மீது, சிவாஜிக்கு அளவு கடந்த பாசம். அவரை சொந்த தம்பி போல் பாவித்து, அன்பு செலுத்துவார். சிவாஜி மீது, பெரியம்மாவுக்கு கடுப்பு. நம்பியார் உறவினரான, எம்.ஆர்.ராதா, தன் சூழ்ச்சியால் சொத்தை பாகப்பிரிவினை செய்கிறார்.
 இறுதியில், சொத்தை அபகரிக்க நினைக்கும், எம்.ஆர்.ராதாவை, குடும்பத்தினர் ஒன்று சேர்த்து வீழ்த்துகின்றனர்.
இதற்கிடையே, மருத்துவம் கொஞ்சம்; சினிமா பாணி கொஞ்சம் என, சிவாஜியின் ஊனமான கை, கால்கள் குணமாகின்றன. இந்தப் படத்தின் கதையை, சோலைமலை எழுதியிருந்தார். சிவாஜிக்கான பாத்திரம் மாமல்லபுரத்தில் உருவானது. கை, கால்கள் ஊனமான நிலையில் சிறுவன் ஒருவன் தன்னிடம் பிச்சை கேட்ட போது, அவனது பாத்திரத்தையே, அப்படியே கதாபாத்திரமாக்கினார்.
இப்படத்திற்கு முன்னதாக, ரத்தக்கண்ணீர் படத்தில், எம்.ஆர்.ராதா நடித்ததை பார்த்து, சரோஜாதேவி பயந்திருந்தார். பாகப்பிரிவினை படத்தில், எம்.ஆர்.ராதாவை அவர் துடைப்பத்தால் அடிக்க வேண்டும். ஏற்கனவே இருந்த பயத்தில், இதுவும் சேர, எம்.ஆர்.ராதா திட்டும் அளவுக்கு, சரோஜாதேவியின் நிலை இருந்தது. இதையடுத்து, எம்.ஆர்.ராதாவே ஒரு ஐடியாவை சொல்கிறார். 'பூட்டிய அறைக்குள் இருந்து நான் அலறியபடியே ஓடி வருகிறேன். பின்னால் நீ துடைப்பத்துடன் ஓடி வா... ரசிகர்கள் நீ அடித்ததாக நினைத்து கொள்வர்' எனக் கூறியுள்ளார். அப்படியே அந்த காட்சியும் படமாக்கப்பட்டது.
 

படத்தில் நிறைய காட்சிகளில், சிவாஜியும், சரோஜாதேவிக்கு உபகாரம் செய்துள்ளார். இப்படத்திற்கு பின் தான், சரோஜாதேவிக்கும் பெரிய அளவில் பெயர் கிடைத்தது. இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் ஹிட். நீண்ட இடைவெளிக்கு பின், கண்ணதாசன், சிவாஜி படத்திற்கு பாடல் எழுதினார்; மூன்று பாடல்கள் இடம் பெற்றன. அப்பாடல்களை கேட்ட சிவாஜி, 'இனி என் படத்திற்கு, கண்ணதாசன் தான் பாடல் ஆசிரியர்' என்றார்
.எம்.ஆர்.ராதாவின் நக்கல் பேச்சு, நையாண்டித்தனம் படத்தின் வெற்றிக்கு படிக்கல். அவரை, சிவாஜி, 'சிங்கப்பூரான்' என, அழைக்கும் பாணி தனிரகம். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற சொல்லுக்கும், அண்ணன், தம்பி உறவுக்கும் இப்படம் சான்று.

ஸ்ரீநிவாஸ்....

Leave a Reply