• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் அவசரத் திருத்தம் - மஹிந்தானந்த

இலங்கை

உள்நாட்டு இறைவரி சட்டத்தை அவசரமாகத் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கமைய பணவீக்கத்தை ஒற்றை இலக்கத்துக்கு கொண்டு வருதல், வெளிநாட்டுக் கையிருப்பை அதிகரித்தல் மற்றும் அரச வரி வருமானத்தை அதிகரித்தல் ஆகிய விடயங்களில், அரசாங்கம் எதிர்பார்க்கும் இலக்குகளுக்கு செல்ல முடியுமா என்பது தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம்
அரச வரி வருமானத்தை அதிகரிப்பதைத் தவிர ஏனைய இலக்குகளில் நாம் ஓரளவு திருப்திகரமான நிலைக்கு வந்துள்ளோம்.

2023 ஆம் ஆண்டில் அரசாங்கம் எதிர்பார்த்துள்ள அரச வரி வருமானம், 3,105 பில்லியன்களாகும்.

ஆனால் இதுவரை, 1,179 பில்லியன்களே கிடைத்துள்ளன. அது அறவிடப்பட வேண்டிய வரியில் 38 வீதமாகும்.
இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் உரிய இலக்குகளை எட்ட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது.

நீதி அமைச்சின் உதவியுடன் உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்புகள் தொடர்பான வரைவு தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது.

வரி செலுத்த வேண்டியவர்கள் பல்வேறு மேன்முறையீடுகளை முன்வைத்து தமது வருமானத்தை சரியாக கணக்காய்வுக்கு உட்படுத்தாமல் வரி செலுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு கிடைக்க வேண்டிய வரி வருமானம், முழுமையாக கிடைக்குமாயின் வெளிநாடுகளிடம் கடன் பெறவேண்டிய நிலை நாட்டுக்கு ஏற்படாது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 08 பில்லியன் ரூபா செலவில் கணனித் தரவுக் கட்டமைப்பு ஒன்றை தயாரித்துள்ளது.

ஆனால், 10 ஆண்டுகளாகியும் இந்தக் கட்டமைப்பை செயல்படுத்த அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

அதனால்தான் டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக அரச பொறிமுறையில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் ஒன்றிணைத்து இவ்வாறு நிகழும் முறைகேடுகளைத் தடுப்பதற்கான பணிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருகின்றார்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply