• Welcome to TamilsGuide
செய்திகள் 1

80, 90 களின் படங்கள் மனித வாழ்வின் அனைத்து பகுதிகளையும் காட்டக்கூடியவையாக இருந்தன.

சினிமா

80, 90 களின் படங்கள் மனித வாழ்வின் அனைத்து பகுதிகளையும் காட்டக்கூடியவையாக இருந்தன. கொண்டாட்டமும் இருக்கும், கோபமும் இருக்கும். காதல், ஊடல், கூடல் என அனைத்தும் உண்டும், நட்பு, உறவு, பிரிவு, துரோகம், சந்தோஷம், அழுகை என அனைத்து உணர்ச்சிகளும் ஒரே படத்தில் இருக்கும். ஒவ்வொரு படம் முடிவதற்குள்  அந்தப் படங்களின் கதாபாத்திரங்களின் வழியாக  ரசிகனானவன் ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்து விடுவான். அப்போது வந்த திரைப்படங்கள் யதார்த்தத்தை மீறியவையாக இருந்தாலும், ஏதேனும் ஒரு வகையில் நம் ஒவ்வொருவரின் வாழ்வோடு தொடர்புபடுத்திக் கொள்ள முடியும். இப்போது பார்க்கையில் நாம் வாழ்ந்த காலத்தை நினைவுபடுத்தும் காலக் கடிகாரம் தான் பழைய சினிமாக்கள். 
 

அப்பொதைய படங்களில் மேற்சொன்ன அனைத்து விதமான உணர்ச்சிகளையும் காட்சிப் படுத்துவது மட்டுமல்லாமல் இசையாலும் உணரவைக்க வேண்டும். இந்த இடத்தில் தான்  இளையராஜா  ஸ்பெஷல் ஆகிறார். பழைய படங்களில் ராஜாவின் இசைக்கென சில மௌனக் காட்சிகள் இருக்கும்.   நடிகர் நடிகைகளுக்கு, வசனங்கள் இல்லாமல் உணர்வுகளை வெளிப்படுத்தி நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது., அந்த இடங்களில் எல்லாம் ராஜாவின் இசை அவர்களுக்கு உதவியாக இருக்கும். எண்ணற்ற படங்களைச் சொல்லலாம். தளபதி படத்தில் தன் காதலி பிரிந்து செல்வதை திரும்பிப் பார்க்கும் அந்த நீண்ட காட்சி. இசை இல்லாவிட்டாலும் அந்தக் காட்சி ரசிகனுக்கு புரிந்து விடும். ஆனால் அந்த கதாபாத்திரத்தின் வலியை எப்படி பார்வையாளனுக்கு  கடத்துவது. அதை ராஜா செய்தார். ஒவ்வொரு காட்சியிலும், ஒவ்வொரு படத்திலும்.  இதயம் படத்தின் பிண்ணனி இசை கேட்கும் போதெல்லாம் நாயகனைப் போல நமக்கும் இதயம் வலித்தது அல்லவா? காதலை உணர வைத்தாரே... இன்னும் 1000 உதாரணங்கள் சொல்லலாம். 

அதே போல் அப்போதைய திரைப்படங்களில் சோகப் பாடல்கள் தவறாமல் இடம்பெற்று விடும். இன்றைக்கு காதல் சோகப் பாடல்கள் என்ற ஜானரே அழிந்து விட்டது. காதல் மட்டும் இல்லாமல், பல்வேறு வகையான உணர்வுகளுக்கும் சோகப்பாடல்கள் இருக்கும்.  சில பாடல்களில் இடையிசை (இண்டர்லூட்) வரும் பொழுது நாயகன் அல்லது நாயகியின் இப்பொதைய சோகத்துக்கு காரணங்கள் அனைத்தும் மாண்டேஜ் காட்சிகளாக விரியும். அப்படியான பாடல்களை இப்போது நாம் கேட்டாலும் மொத்தப்படமும் நம் கண் முன்னே ஓடும். தர்மதுரை படத்தில் வரும் "அண்ணன் என்ன தம்பி என்ன" பாடலின் இடையிசையை கேளுங்கள். நம்பிக்கை துரோகத்தை சந்தித்தவனின் வலி தான் அந்தப் பாடல்.
ஆக்ரோஷமான இசையுடன் இருக்கும் பாடலின் நடுவே அவன் ஏமாற்றப்படுவதை உணர்த்தும் வகையில் மென்மையான புல்லாங்குழலை ஒலிக்க விட்டிருப்பார். அது முடிந்தவுடன் மீண்டும் ஆக்ரோஷம் தொடரும். படமாக பார்க்கும் போது நாயகனின் வலியை உணரும் அதே வேளையில் நம் வாழ்க்கையில் சந்தித்த ஏமாற்றங்களும், துரோகங்களும் நினைவில் வரும். "ஊரை தெரிஞ்சுகிட்டேன்" பாடலும் கிட்டத்தட்ட இதே ரகம். நண்பன் ஒருவன் சரக்கு அடித்துவிட்டு இந்தப் பாடலை ரிபீட் மோடில் ஒலிக்கவிட்டு பாடிக் கொண்டிருப்பான். ஒவ்வொரு முறையும்  "என்னோட வலி உனக்கு எப்படிய்யா தெரிஞ்சுது" என்று ராஜாவிடம் கேட்பானாக இருக்கும். 

அப்படியான இன்னொரு பாடல் ஆனஸ்ட்ராஜ் படத்தில் வரும் "வானில் விடிவெள்ளி மின்னிடும் நேரம்". நண்பனின் துரோகத்தால் குடும்பத்தையே இழந்து சாவில் இருந்து தப்பித்த நாயகன், தான் இழந்த வாழ்வை நினைத்துப் பார்க்கிறான். இதமாகத் தொடங்கும் பாடலின் நடுவே, நாயகனின் வேதனையை உணர்த்தும் ஆக்ரோஷமான இசை. மாண்டேஜ் ப்ளாஷ்பேக் காட்சிகளுக்கு என்றே  அளவெடுத்து செதுக்கிய இடையிசை. ஒரு புறம் ஜானகி தெய்வீகமாக பாட, இன்னொரு புறம் மனோவின் குரலில் நாயகனின் ஆக்ரோஷம், இயலாமை, வெறுமை, பழிவாங்கும் வெறி என அனைத்து உணர்வுகளும் வெளிப்படும். இவை அனைத்தும் ஒரே பாடலில் என்பது கற்பனைக்கெட்டாதது. 

சோகப்பாடல்களுக்கு நடுவில் மட்டுமல்ல,  ஒரு முதலிரவுப் பாடலில் கூட இப்படியான மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறார். திருமதி பழனிச்சாமி படத்தில் " நடு சாமத்துல சாமந்தி பூ" பாடலின் இடையிசையை கேளுங்கள். பாடல் பதிவின் போது இயக்குனர் சொன்ன சூழல் வேறு, படமாக்கப்பட்டது வேறு. எனவே ஆடியோவாக கேட்கும் போது, ஏதோ நடக்கப் போகிறது என்பது போல் சஸ்பென்ஸ் நிறைந்த ஒரு இசைத்துணுக்கு வரும். அதிலிருந்து அப்படியே ஒரு ஜம்ப். மீண்டும் முதலிரவு மூட் வந்து விடும். மேஜிக்... ஆனால் அந்த இசைத்துணுக்கு படத்தில் இல்லை.  பிரம்மா படத்தில் இடம்பெற்ற "எங்கிருந்தோ இளங்குயிலின்" பாடலின் இடையிசை முழுவதும் நமக்கு கதைகள் சொல்லும். 

இது போல எத்தனை எத்தனையோ பாடல்கள். தேடித் தேடி கொண்டாடுவதற்கு இந்த ஒரு ஜென்மம் போதாது. 

 

இளையராஜா.....
மகாதேவன்

Leave a Reply