• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம் தொப்புள் கொடி உறவுகளுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

இலங்கை

இந்திய அரசானது இன்று(15)  தனது 77 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வரும் நிலையில்  ”எம் தொப்புள் கொடி உறவுகளான தமிழக மக்கள் உட்பட அனைத்து இந்தியர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்” என நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்  ’” ஒட்டுமொத்த உலகுக்கும் அஹிம்சையை போதித்த பாரத தேசம் சுதந்திரமடைந்து இன்றோடு 77 ஆண்டுகளாகின்றன.

சுதந்திரத்துக்கு பின்னர் பல சவால்களை சந்தித்திருந்தாலும் இந்தியா இன்று பாரிய பொருளாதார சக்தியாக மாறியுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. 2030 ஆம் ஆண்டாகும்போது உலகில் மூன்றாவது பெரும் பொருளாதார சக்தியாக இந்தியா மாறக்கூடும். இதனால் இலங்கைக்கும் பல நன்மைகள் கிட்டும்.

தெற்காசியாவின் காவலனான இந்தியா, எல்லா சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு கைகொடுத்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, உதவிகளை வழங்கி, இலங்கை மீண்டெழ சுவாசம் தந்ததே இந்தியாதான் என்பதை இந்த மகத்துமான நாளில் நன்றியுடன் நினைவுகூருகின்றேன்.

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் மேம்பாட்டுக்காக மூவாயிரம் மில்லியன்களை இந்தியா வழங்கியுள்ளது. பல்வேறு நெறுக்கடிகளில் இருந்தும் மலையக மக்கள் சுதந்திரம்பெற இந்நிதி பயன்படுத்தப்படும் என்ற உறுதிமொழியையும் இந்த சுதந்திர நாளில் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவு என்பது பூகோள அரசியல் அல்ல. மாறாக அது உணர்வுடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான ஓர் உறவு பாலமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயற்பட்டு வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

எம் தொப்புள் கொடி உறவுகளான தமிழக மக்கள் உட்பட அனைத்து இந்தியர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply