• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மனைவியை கொன்று உடல் மறைப்பு - எதுவும் நடக்காததுபோல் உறவினர்களுடன் சேர்ந்து தேடிய ராணுவ வீரர்

அமெரிக்காவின் வடக்கில் உள்ளது அலாஸ்கா மாநிலம். இங்கு வசித்து வரும் 21-வயதான ஜேரியஸ் ஹில்டாபிராண்ட், ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் மனைவி ஸரியா ஹில்டாபிராண்ட் (21). ஸரியா அலாஸ்கா தேசிய பாதுகாப்புப்படையில் காவலராக தேர்ச்சியடைந்தவர். இவர் ப்ரெட் அண்ட் ப்ரூ அலாஸ்கா எனும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இத்தம்பதிகள் சமீபத்தில்தான் திருமணமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது வீடு மிட்டவுன் பகுதியில் மாக்கிங் பர்ட் டிரைவ் பகுதியில் உள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 6-ம் தேதியிலிருந்து ஸரியா திடீரென காணாமல் போனார்.

பதட்டமடைந்த இவர் கணவர் ஜேரியஸ் பல இடங்களில் அவரை தேடினார். பிறகு காணாமல் போன மனைவியை குறித்து தகவல் பெற முகநூலில், மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு அவரை தேடிவந்தார். இவருடன் ஸரியாவின் உறவினர்களும், நண்பர்களும் அவரை குறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்கள் ஆங்காங்கே மக்களிடையே ஸரியாவின் புகைப்பட அடையாளங்களை வெளியிட்டு இது சம்பந்தமான துண்டு பிரசுரங்களையும் கொடுத்து தேடிவந்தனர். இந்நிலையில் ஸரியாவின் உடல் ஒரு மழைநீர் கால்வாயில் காணப்பட்டது. உடனே தகவல் தரப்பட்டு அங்கு வந்த காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.

வேலைக்கு செல்வதற்காக வீட்டைவிட்டு நடந்து சென்ற ஸரியாவை கடைசியாக பார்த்தது ஜேரியஸ்தான் என புலன் விசாரணையில் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து ஜேரியஸ் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார். காவல்துறையினரின் விசாரணையில் இறுதியில் ஜேரியஸ் தன் மனைவியை கொன்றதாக ஒப்புக்கொண்டார். மனைவியை சுட்டு கொன்றதாகவும், அவர் உடலை யாருக்கும் தெரியாமல் மழைநீர் காலவாயில் பதுக்கியதாகவும், பிறகு மனைவி காணாமல் போனதாக நாடகமாடி அனைவரின் உதவியுடன் தேடி வந்ததாகவும் உண்மையை ஒப்புக்கொண்டார் ஜேரியஸ். சுமார் ரூ.4 கோடி ($5,00,000) பிணையில் வெளியே வரும் வகையில் அவர் மீது ஆன்கரேஜ் காவல்துறை மனைவியை கொலை செய்தது மற்றும் தடயங்களை மறைத்தது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருக்கிறது. "அவளை அவனே கொன்றுவிட்டு ஒரு அக்கறையுள்ள கணவன்போல் எங்களுடன் சேர்ந்து மணிக்கணக்காக ஸரியாவை தேடினான். எனக்கு எதையும் நம்ப முடியவில்லை"என இச்சம்பவம் குறித்து ஸரியாவின் தாயார் மெரிடித் பார்னே கூறியிருக்கிறார். இதுவரை கொலைக்கான காரணம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Leave a Reply