• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இளம் பெண்ணின் கருப்பைக்குள் தவறுதலாக செலுத்தப்பட்ட அமிலம் - மருத்துவரின் அலட்சியத்தால் விபரீதம்

அமெரிக்காவில் கருவுறுதல் மருத்துவர் ஒருவர் இளம் பெண் ஒருவரின் கருப்பைக்குள் தவறுதலாக அமிலத்தை(Acid) உட்செலுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவில் 33 வயதான கிறிஸ்டின் என்ற இளம் பெண் தன்னுடைய ஃபலோபியன் குழாயில்(fallopian tubes) அடைப்பு உள்ளதா என்பதை பரிசோதிப்பதற்காக பென்சில்வேனியாவில் உள்ள மெயின் லைன் கருவுறுதல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.  

அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர் அலிசன் ப்ளூம், கிறிஸ்டினுக்கு உப்புக் கரைசலுக்கு(saline) பதிலாக ஊசி வாயிலாக டிரைகுளோரோ அசிட்டிக் அமிலத்தை(Trichloroacetic acid) அவருடைய கருப்பையில் உட் செலுத்தியுள்ளார்.

இந்த டிரைகுளோரோ அசிட்டிக் அமிலம் மிக மிக குறைந்த அளவில் பிறப்புறுப்புகளில் ஏற்படும் மருக்களை குணமாக்க பயன்படுத்தப்படுகிறது.

இந்த சம்பவத்துக்கு பிறகு சிறிது நேரத்திலேயே கிறிஸ்டினின் தொடை மற்றும் கால் பகுதிகளில் சிவப்பு நிற மருக்கள் தோன்றவே, அவர் உடனடியாக முதல் மற்றும் இரண்டாம் உட்புற மற்றும் வெளிப்புற அமில எரிச்சல் காயங்களுடன் சிகிச்சைக்காக அருகில் உள்ள உள்ளூர் எரிப்பு காய மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனங்களுடன் பாதிக்கப்பட்ட கிறிஸ்டின் பகிர்ந்து கொண்ட தகவலில், “அப்போது உடலின் உள்ளே எரிவதை உணர்ந்தேன் மற்றும் உடனடியாக எதோ சரியில்லை என்று மருத்துவரிடம் தெரிவித்தேன்,” என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தால் தன்னுடைய பிறப்புறுப்புகள் பலத்த படுகாயமடைந்து இருப்பதாகவும், உட்காரும் போதும் வலியை உணர்வதாக கிறிஸ்டின் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தனக்கு இப்போது குழந்தை பிறக்குமா என்று தெரியவில்லை என்றும் கிறிஸ்டின் குறிப்பிட்டுள்ளார். வெளியான மருத்துவ அறிக்கை இந்த சம்பவம் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 19ம் திகதி நடைபெற்றுள்ளது.

வெளியான மருத்துவ அறிக்கையில் உட்செலுத்தப்பட்ட அமிலமானது 85 சதவீத செறிவுடன் இருந்தாக தெரியவந்துள்ளது. இது மிக அதிகமான எரிச்சலை ஏற்படுத்த கூடியது மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் வாய்ப்பு கொண்டது.

இதனிடையே உட்செலுத்த அமிலத்தின் நீண்ட கால விளைவுகள் என்னவென்றும் தெரியவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிறிஸ்டினுக்கு ஏற்பட்ட இந்த நிகழ்வுக்கு மருத்துவர் அலிசன் ப்ளூம் மற்றும் மெயின் லைன் கருவுறுதல் நிலையமும் பொறுப்பேற்க வேண்டும் என்று கிறிஸ்டினின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 

Leave a Reply