• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சாணக்கியனை போடா என்று கூறிய அமைச்சர் சந்திரகாந்தன் - அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் சர்ச்சை

இலங்கை

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனை நோக்கி, ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தகாத வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்தியமையால் அங்கு சர்ச்சை ஏற்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுகூட்டம் இன்று பலத்த பாதுகாப்புக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான், அமைச்சர் ஹாபீஸ் நசீர் ஹகமட், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அத்தோடு, அரச அதிகாரிகள், பாதுகாப்புப் பிரதானிகள் உள்ளிட்டவர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கருத்துக்கள் வெளியிடப்பட்ட நிலையில், அண்மையில் பொலன்னறுவை, மன்னம்பிட்டிய பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்து விவகாரம் குறித்தும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

குறித்த தனியார் பேருந்து சேவைக்கு இரண்டு அனுமதிப் பத்திரங்கள் மாத்திரம் இருக்கும் நிலையில், சட்டவிரோதமான முறையில் பல வழித்தடங்களில் இது இயங்குவதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

விபத்துக்குள்ளான வழித்தடத்தில் பயணிக்க குறித்த தனியார் பேருந்து சேவைக்கு அனுமதி இல்லாத நிலையில், நேற்று இரவும், குறித்த பேருந்து சேவைக்கு சொந்தமான பேருந்தை பொலன்னறுவை பகுதியில் வைத்து தான் கண்டதாகவும் சாணக்கியன் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரங்கள் தொடர்பாக அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், தன்னால் வழங்கப்பட்ட காணொளியொன்றை ஒளிபரப்புமாறு அதிகாரிகளிடத்தில் கோரினார்.

இதன்போது குறுக்கிட்ட ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சிவநேசதுரை சந்திரகாந்தன், அவ்வாறு காணொளிகளை ஒளிபரப்ப முடியாது என்று எதிர்ப்பினை வெளியிட்டார்.

எனினும், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் காணொளியொன்றை ஒளிபரப்ப முடியுமானால் தனக்கும் அந்த உரிமையை வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தொடர்ந்தும் குரல் எழுப்பிய நிலையிலேயே இந்த முரண்பாடு ஏற்பட்டது.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினரான சிவநேசதுரை சந்திரகாந்தன் சாணக்கியனை நோக்கி, ஒறுமையில் பேசியதுடன் தகாத வார்த்தைப் பிரயோகத்தையும் பயன்படுத்தினார்.

இதனால் இரு உறுப்பினர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டதுடன், அமர்விலும் சலசலப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில், மக்களின் சில பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டதுடன், தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

Leave a Reply