• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விசா விதிகளை தளர்த்தும் பிரித்தானியா

பிரித்தானியாவில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், வெளிநாட்டு ஊழியர்களை ஈர்க்கும் பொருட்டு விசா கட்டுப்பாடுகளை தளர்த்த உள்விவகார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. பிரித்தானிய உள்விவகார அமைச்சகம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள தகவலில், கட்டுமான தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், விசா விதிகளை தளர்த்த இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
  
மேலும், கட்டுமான பணியிடங்களில் குறிப்பிட்ட பணிகளுக்கு பற்றாக்குறை இருப்பதாக நிறுவனங்கள் பட்டியலிட்டுள்ளது. இதனையடுத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கும் வகையில், விசா விதிகளை தளர்த்த அமைச்சர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் புலம்பெயர் மக்கள் தொடர்பில் கடுமையான முடிவுகளை எடுத்துவரும் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த விவகாரம் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்றே கூறுகின்றனர்.

2022 டிசம்பர் முடிய பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை 606,000 என தெரியவந்துள்ளது. இந்த நிலையில், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு என விசா விதிகளை தளர்த்துவதற்கு பதிலாக நம் நாட்டின் தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கலாம் என்ற கோரிக்கையை கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர்.

ஆனால் கடந்த மே மாதம், இதேப்போன்ற ஒரு சூழலில் பிரித்தானிய தொழிலாளர்களுக்கு ஏன் போதிய பயிற்சி அளிக்கப்படவில்லை என்ற கேள்விக்கு, உரிய பதிலளிக்க உள்விவகார செயலர் சுயெல்லா பிரேவர்மேன் மறுத்துள்ளார்.

லொறி சாரதிகள், கசாப்புக் கடைக்காரர்கள் உள்ளிட்ட மூன்று வகை தொழிலாளர்களுக்கான விசா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், அப்போதும் பயிற்சி தொடர்பில் கேள்வி முன்வைக்கப்பட்டது.

தற்போது கட்டுமான தொழிலாளர்களுக்கு விசா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதுடன், விசா விண்ணப்ப கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மொழி அறிவு சோதனை முன்னெடுக்கப்படும் என்றே தெரிவித்துள்ளனர். 
 

Leave a Reply