• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கருங்கடல் ஒப்பந்தத்திலிருந்து ரஷியா விலகல்

கோதுமை, சோளம் உட்பட பல தானியங்களை பெருமளவில் ஏற்றுமதி செய்யும் நாடு உக்ரைன். உலகின் பல நாடுகள் உக்ரைனின் தானியங்களை பெரிதும் நம்பியிருக்கின்றன.

ரஷிய-உக்ரைன் போரில் உக்ரைனின் துறைமுகங்கள் ரஷியாவால் கைப்பற்றப்பட்டது. இதனால் தானிய ஏற்றுமதி குறைந்து மிக பெரிய உணவு நெருக்கடி உருவாகியது. இதனையடுத்து, கடந்த வருடம் ஜூலை மாதம், ஐ.நா. மற்றும் துருக்கியின் முயற்சியால், ரஷியாவுடன் "கருங்கடல் தானிய ஒப்பந்தம்" (Black Sea Grain Deal) என்ற உடன்படிக்கை செய்யப்பட்டது. இதன்படி ஆயுதங்கள் ஏதும் இல்லையென பரிசோதித்து உறுதி செய்த பின் உக்ரைனின் 3 துறைமுகங்களிலிருந்து தொடர்ந்து தானிய ஏற்றுமதி நடைபெறுவதற்கு ரஷியா சம்மதித்தது. இந்த ஒப்பந்தம் காலாவதியாகி மீண்டும் 2 முறை புதுப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று அந்த ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டிய கடைசி நாள். ஆனால், இம்முறை ரஷியா இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக தெரிவித்தது. இதனால், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து பல்லாயிரக்கணக்கான டன் தானிய ஏற்றுமதி பாதிக்கப்படும் அபாயம் உருவாகியிருக்கிறது. அதன் மூலம் பெரும் உணவு பஞ்சம் ஏற்படலாம் என அச்சம் உருவாகியுள்ளது. ரஷியாவின் சொந்த விவசாய ஏற்றுமதிகளுக்கு உதவும் வகையில் பணம் செலுத்துதல், காப்பீடு மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றை அனுமதிக்கும் ஒரு இணையான ஒப்பந்தத்தை, மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகள் தடுத்து வைத்திருப்பதாகவும், இதனால் ரஷியாவிற்கு பெரும் சிரமங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் ரஷியா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தது.

"கருங்கடல் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது. இனி இதற்கு ரஷியா ஒத்துழைக்காது. ரஷியா சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டவுடன், ரஷியாவும் கருங்கடல் ஒப்பந்தத்தில் மீண்டும் பங்கேற்கும்" என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார். இது வரை இந்த ஒப்பந்தம் மூலம் சென்ற ஆகஸ்ட் மாதம் தொடங்கி உக்ரைனின் துறைமுகங்களில் இருந்து கடல் வழியாக சுமார் 32.9 மில்லியன் மெட்ரிக் டன் உணவு தானியம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவை வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவையாகும். தற்போது இந்த ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகுவதாக அறிவித்திருப்பது பயனாளி நாடுகள் அனைத்தையும் பெரிதும் கவலை கொள்ள செய்திருக்கிறது.
 

Leave a Reply