• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எதிர்காற்று

சினிமா

கடந்த 1990ம் ஆண்டு இறுதியில் வெளிவந்த படம் எதிர்காற்று. முக்தா பிலிம்ஸ் தயாரித்திருந்த இப்படத்தை திரு.முக்தா சுந்தர் அவர்கள் இயக்கி இருந்தார்கள். அந்த நேரத்தில் தினத்தந்தி வெள்ளிமலரில் எதிர்காற்று படத்தின் கார்த்திக், கனகா புகைப்படம் வெளியாகி இருந்தது இன்னும் ஞாபகமாக உள்ளது. 

சந்தனக்காற்று என்ற விஜயகாந்த் படம் அதற்கு சில மாதங்களுக்கு முன் தான் வெளியாகி இருந்தது. அந்த நேரத்தில் எதிர்காற்று படத்தின் புகைப்படத்தை பார்த்த உடன், இப்போதான் சந்தனக்காற்று வந்தது அதற்குள் எதிர்காற்றா என அந்த தினத்தந்தி புகைப்படத்தை பார்த்து நினைத்தது மனதில் நிழலாடுகிறது.

வருசம் 16, கிழக்கு வாசல் என முன்னணியில் கார்த்திக் இருந்த காலக்கட்டத்தில் இந்த படம் வெளியானது, அதே நேரத்தில் கரகாட்டக்காரன், பெரிய வீட்டு பண்ணக்காரன் என கிராமத்து படங்களாக நடித்துக்கொண்டிருந்த கனகாவுக்கு படித்த ஜர்னலிஸ்டாக நகரத்து பெண்ணாக மாடர்ன் உடையில் தோன்றும் பெண்ணாக இப்படம் அடையாளம் காட்டியது. படம் வெளிவந்து அடுத்த வருடமே அதாவது 91ம் ஆண்டே இப்படம் தூர்தர்ஷனில் ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் ஒளிபரப்பானது. 

நான் இருக்கும் ஊரில் இஸ்லாமியர்களும் இஸ்லாமிய கல்வி நிறுவனங்களும் அதிகம் அந்த காலக்கட்டத்தில் வெள்ளிக்கிழமை எங்களுக்கு பள்ளி விடுமுறை அதற்கு பதில் ஞாயிற்றுக்கிழமை பள்ளி இருப்பது நடைமுறையாக இருந்தது. தூர்தர்ஷனில் எதிர்காற்று படம் ஒளிபரப்புகிறார்கள் என அறிந்து ஆஹா இந்த படத்தை முழுமையாக பார்க்க முடியாதே என காலையில் இருந்தே கவலை என்னை தொற்றிக்கொண்டது. காரணம் என்னனா அன்று ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக 5 மணிக்கு மேல் ஒளிபரப்பாகிற படம் அன்றைய தினம் கிரிக்கெட் என்பதாலோ என்னவோ சற்று சீக்கிரமே ஒளிபரப்பானதாக ஞாபகம். நான் ஸ்கூல் முடிந்து டியூசன் முடிந்து வருவதற்குள் முக்கால்வாசி படம் முடிந்து விட்டிருந்தது க்ளைமாக்ஸ் காட்சியை மட்டும்தான் பார்க்க முடிந்தது நன்றாக நியாபகம் உள்ளது. அதற்கு பின் இப்படத்தை யூ டியூபில் தான் பார்த்தேன்.

வாழ்க்கையே பிடிக்காமல் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்ய செல்லும் ராம் நரேந்திரனாக வரும் கார்த்திக் , அதே தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலைக்கு முயற்சிக்கும் ஜனா வாக வரும் ஆனந்தபாபுவை காப்பாற்றுகிறார்.

வில்லன் ஆனந்தராஜ் கும்பலால்  ஆனந்த்பாபு குடும்பம் துன்புறுத்தலுக்குள்ளாகிறது, வீணான கொலைப்பழியிலும் ஆனந்த்பாபு சிக்குகிறார் அதனால் தற்கொலையை நாடுகிறார் , இதை பார்க்கும் கார்த்திக் ,நீ வாழ வேண்டியவன், நான் தற்கொலை செய்யப்போகும் அனாதை, எனவே அந்த கொலையை தான் செய்ததாக ஏற்றுக்கொள்ளும் கார்த்திக் ஆனந்த்பாபுவை தற்கொலையிலிருந்து காப்பாற்றுகிறார். எனினும் அடுத்தடுத்து துன்புறுத்தும் வில்லன் ஆனந்தராஜ் கும்பல் ஆனந்த்பாபுவையும் கொன்று அவர்களது குடும்பத்தை தொடர் சித்ரவதைக்குள்ளாக்குகிறார்.

ஜெயிலில் இருக்கும் கார்த்திக் நேர்மையான வக்கீல் வி.கே.ஆர் உதவியுடன் பரோலில் வருகிறார். ஆனந்த்பாபு கொலைக்கு காரணமான வில்லன் ஆனந்தராஜ் கும்பலை பழிவாங்குகிறார். ஆனந்தராஜ் பொதுவாக பல படங்களில் காமெடி கலந்துதான் வில்லனாக நடித்திருப்பார். கொஞ்சமாவது நக்கல் நையாண்டியுடன் தான் டயலாக் பேசுவார். இந்த படத்தில் ராவான வில்லனாக கொடூர வில்லனாக நடித்திருந்தார் அவருக்கும் உதவும் வில்லனாக அக்காலக்கட்டத்தில் ரஞ்சன் என அழைக்கப்பட்ட லிவிங்ஸ்டன் நடித்திருந்தார்.

படத்தில் நிறைகள் அதிகம் இருந்தன குறைகள் குறைவுதான் , வித்தியாசமான கமர்ஷியல் படமாகவும் இது இருந்தது. ஆனால் பெரிய எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. படம் ஜனரஞ்சகமாக இருந்தாலும்  காமெடி, மற்றும் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் இல்லாமலும் இருந்தது.

முக்கியமாக கதாநாயகனுக்கும் கதாநாயகிக்குமான டூயட் பாடல் படத்தில் இல்லை. ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான் என்ற அற்புதமான அருண்மொழி, உமாரமணன் பாடிய பாடல் ஆடியோ கேசட்டில் இருந்தாலும் படத்தில் அப்பாடல் இடம்பெறாமல் போனது ரொம்பவும் வருத்தம்தான். இங்கு இருக்கும் காலம் வரைக்கும் என்ற உமாரமணன் பாடிய சோலோ பாடலும், கே.ஜே ஜேசுதாஸ் பாடிய கூண்டை விட்டு வெளியில் வந்து என்ற சோகப்பாடலுமே மனதை கவர்ந்தது. அதிலும் கூண்டை விட்டு வெளியில் வந்து என்ற பாடலை கவிஞர் வாலி ஆழமான சிந்தனைகளுடன் எழுதி இருந்தார் படத்தில் அப்பாடல் பிட் பிட்டாக சின்ன சின்ன இடங்களில் வந்து விட்டு சென்றதும் ஒரு ஏமாற்றம்தான். சாமியாரா போனவனுக்கு என்ற பாடலையும் இளையராஜா தன் சொந்த குரலில் பாடி இருந்தார் அந்த பாடலும் படத்தில் இடம்பெற்றதாக தெரியவில்லை. இசைஞானி இளையராஜாவுடன் கோடை மழை படத்துக்கு பின் முக்தா சுந்தர் இணைந்திருந்தார். கோடை மழை படம் போலவே இதிலும் சிறப்பான இசையை இளையராஜா கொடுத்திருந்தார்.

படத்தில் இன்னொரு சிறப்பான விசயம் , கோபு பாபு அவர்களின் வசனம்.

வில்லன் ஆனந்தராஜ் பாதி காட்சிகளுக்கு வில்லனாக உருவகப்படுத்தப்படவே செய்வார். கடைசி 1 மணி நேரத்துக்கு முன்புதான் அவர் இப்படிப்பட்ட கொடூரமான வில்லன் என சில காட்சிகளில் காட்டப்பட்டிருக்கும்.

இறுதியில் வில்லன்களான ஆனந்தராஜ், ரஞ்சன் இருவரையும் கார்த்திக் எப்படி பழிவாங்கினார் என்பது கதை. 

கதை கொஞ்சம் பத்திரிக்கை, ஜர்னலிசம் பின்னணியில் அமைந்த  வித்தியாசமான  கதைதான் என்றாலும், 80, 90களுக்கேயுரிய கமர்ஷியல் பாணியிலேயே கதை சொல்லப்பட்டிருக்கும்.

சின்ன சின்ன குறைகளுடன் பெரிய நிறைகளுடன் இப்படம் இருந்தாலும் அந்த நேரத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெரிய அளவில் நிறைவேற்றியதாக தெரியவில்லை. ஆனால் இன்றைய காலக்கட்டத்திலும் பார்த்து ரசிக்க கூடிய அழகான படம் இது.

Abiram Arunachalam

Leave a Reply