• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாவீரன் விமர்சனம்

சினிமா

படம் என்னவோ ஏழை மக்களுக்காக ஹீரோ பொங்கும் எம்.ஜி.ஆர் காலத்து கதைதான். ஆனால் அதை சொன்ன விதம் புதுசு. படம் ஆரம்பித்ததில் இருந்து நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது. சிவகார்த்திகேயன் கார்ட்டூன் சித்திரங்கள் வரைந்து நம்ம தினத்தந்தி கன்னித்தீவு ரேஞ்ச்ல கதை எழுதுபவர். கதையில் மட்டும் வீர தீர சூர பராக்கிரமங்களை கற்பனையில் எழுதி அதை ஓவியமாக வரையும் சிவகார்த்திகேயன் நிஜத்தில் ஒரு தொடை நடுங்கி. அவர் எழுதும் கதையை கூட ஒரு முக்கிய பத்திரிக்கையில் ஏமாந்த தனமாக கொடுத்து விட்டு வரும் அப்பாவி. சென்னையில் ஒரு பகுதியில் வசித்து வரும் இவர்களது குடும்பம் உட்பட பல குடும்பத்தை குடிசை மாற்று வாரிய அமைச்சர் மிஷ்கின் தூண்டுதலின்படி  காலி செய்ய வைத்து அதற்கு பதிலாக குடிசை மாற்று வாரியம் சார்பில் மொக்கையான வீடுகளை கட்டிக்கொடுக்கிறார்கள்.  அந்த வீட்டில் தொட்டாலே சிமிண்ட் உதிர்கிறது படி உடைகிறது, கம்பி, கதவு உடைகிறது. இதையெல்லாம் தொடை நடுங்கியான சிவகார்த்திகேயன் எதிர்த்து கேட்கவில்லை தொடை நடுங்கியா இருக்கார்னு அவரின் அம்மா சரிதாவுக்கு கவலையாக இருக்கிறது.

இந்த் சூழ்நிலையில் தங்கையிடம் தவறாக நடக்க வந்த அந்த பில்டிங் இஞ்சினியரை கூட சிவகார்த்திகேயன் தட்டி கேட்க பயப்படுகிறார். இதனால் அம்மாவின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகும் சிவகார்த்திகேயன் தற்கொலை செய்ய முற்பட அப்போது ஒரு சூப்பர் பவர் அவருக்கு வருகிறது. அது ஒரு அசரீரி குரல் அடுத்தடுத்து நடக்கும் அபாயங்களை கூறுகிறது. அமைச்சர் மிஷ்கினுடன் மோதி பெரும் அபாயங்களை சந்திக்க இருப்பதையும் அடுத்தடுத்து  அன்லிமிட்டட் ஆக லொட லொட என கூறிக்கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த குரலே நமக்கு அபாயமாகி விடுகிறது.

விஜய் சேதுபதி குரலில் அந்த அசரீரி குரல் ஒலிக்கிறது . இடைவேளை வரும் இந்த காட்சிகள் ஓரளவு ரசிக்க வைக்கிறது. இடைவேளைக்கு பிறகு சிவகார்த்திகேயன் பெரிய வீரர் ஆயிருவாப்ள ராஜாதிராஜா, அதிசயப்பிறவின்னு ரஜினிகாந்த் நடிச்ச மாதிரி, எங்கவீட்டு பிள்ளைல எம்.ஜி.ஆர் நடிச்ச மாதிரி இண்டர்வெல்லுக்கு பின்னாடி பெரிய வீரனா மாறி எதிரிகளை தூக்கி போட்டு பொளக்க போறார்னு பார்த்தா ஏமாற்றமே மிஞ்சுகிறது. இண்டர்வெல்லுக்கு பிறகு அந்த அசரீரி குரல் நில் நட ஓடு என எல்லாவற்றுக்கும் அசரீரி குரல் கொடுத்து நம்மை கொலையாய் கொல்கிறது அது ஓவர் டோஸாக இருக்கிறது.

வில்லன் வேடத்தில் வரும் அமைச்சர் மிஷ்கின் முதன் முதலில் சிவகார்த்திகேயனுக்கு எதிரியாக மாறுவதாக சொல்லப்படும் முதல் காரணமே அழுத்தமில்லாமல் இருக்கிறது. கடைசி வரை அந்த அசரீரி விஜய் சேதுபதி குரல் கேட்டு சிவகார்த்திகேயன் அதை மட்டும் செய்துவிட்டு கடைசி வரை பயம் கொண்டவராகவே காட்டுகிறார்கள் . 

ஒரு படத்தின் ஹீரோ ஆண்மைத்தனமாக ஏதாவது செய்தால்தான் ரசிப்பார்கள் பயந்துகொண்டே இருந்தால் ரசிக்க மாட்டார்கள். க்ளைமாக்ஸ் காட்சியில் பரத் சங்கரின் அதிரடி இசையில் ஒரு பயங்கரமான சண்டைக்காட்சி வைத்திருக்கிறார்கள்.

அந்த குடியிருப்பு வாசிகள் பல பேர் கூடியிருக்க அவர்களுக்கு உதவி செய்யும் சிவகார்த்திகேயனை நாலைந்து ரவுடிகள் தாக்க முற்படுகையில் அவர் ஒருத்தர்தான் கஷ்டப்பட்டு க்ளைமாக்ஸில் சண்டை செஞ்சு காப்பாற்றிக்கொள்கிறார். பல ஆயிரம் நபர்களில் ஒருவன் கூட உதவிக்கு வரவில்லை என்பதெல்லாம் நம்ப முடியாத விசயம்.

இதில் ப்ளஸ் என்னனா பேட்ச் ஒர்க் பார்க்க வரும் யோகிபாபுவின் காமெடி இதில் நன்றாக இருக்கிறது. எந்த படத்திலும் இவர் சிரிக்க வைத்தது இல்லை .இதில் கொஞ்சம் ரசிக்க வைத்திருக்கிறார். சிவகார்த்திகேயன் வழக்கமாக ஜாலியாக பேசும் ஹீரோவாக வரவில்லை. ஆக்சனோடு சீரியஸாகவும் நடிக்கவில்லை. இரண்டும் கலந்தது போல் நடித்துள்ளார்.

அசரீரி சொல்றபடி என்னென்னவோ பெரிய சம்பவம்லாம் நடக்க போகுது, இண்டர்வெல்லுக்கு பின்னாடி படம் நல்லா இருக்க போகுது என நினைத்து சீட்டில் நிமிர்ந்து உட்காருகையில் அடுத்து கதையை எப்படி கொண்டு போவது என தெரியாமல் எங்கெங்கோ நுழைந்து என்னென்னவோ செய்திருக்கிறார் இயக்குனர் மடோன் அஷ்வின்.

வில்லனாக வரும் மிஷ்கின் அவரின் உதவியாளராக வரும் சுனில் என்பவர் நன்றாக நடித்திருக்கிறார்கள். அதிதி, சிவகார்த்திகேயன் போன்றவர்கள் இருந்தும் அவர்களுக்கு சினிமாத்தனமாக டூயட் எல்லாம் இயக்குனர் வைக்கவில்லை இயல்பாக விட்டிருக்கிறார். நல்லவிதமாக வித்தியாசமாக இந்த கதையை யோசித்து நடுவில் கொஞ்சம் சறுக்கிவிட்டார் இப்பட இயக்குனர் இசையமைப்பாளர் பரத்சங்கர் இசை பரவாயில்லை க்ளைமாக்ஸ் சண்டை காட்சியில் வரும் பிஜிஎம் அனலாக இருக்கிறது. தூள் பட க்ளைமாக்ஸ் பாடலை ஞாபகப்படுத்துகிறது.

படத்தின் ஓப்பனிங்கில் இசைஞானி இளையராஜாவுக்கு டைட்டில் கார்டு போடுகிறார்கள். அவரின் பாடல்கள் எதையும் பயன்படுத்தி ரசிக்கும்படி செய்துள்ளார்களோ என நினைத்தால் எதுவுமே இறுதி வரை இல்லை எதற்கு போட்டார்கள் என்றே தெரியவில்லை. அது போல் இந்த படத்தில் வரும் அரசியல் கட்சி யாரையும் குறிப்பிடல என ரொம்ப டீடெய்லா சொல்றாங்க. அவங்க டீடெய்லா சொல்ற அளவுக்கு மிஷ்கின் சார்ந்து இருக்கும் கட்சியை அவங்க டீடெய்லா காண்பிக்கவே இல்ல அப்புறம் ஏன் இந்த பயம்.

படம் என்னை பொறுத்தவரை சுமார்தான் ஆகா ஓஹோ என சொல்லுமளவு எல்லாம் இல்லை ஓக்கே ரகம்.

Abiram Arunachalam

Leave a Reply