• Welcome to TamilsGuide
செய்திகள் 1

Evergreen,பட வரிசையில், 'தேவதாஸ்!

சினிமா

'தேவதாஸ்',காதலில் தோல்வியடைந்தவர்களுக்கு அடையாளச் சொல்லாக வைக்கப்படும் அளவிற்கு இத்திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது என்பதை எல்லோருமே அறிவோம்.
இத் திரைப்படம் ஸ்ரீ சரத்சந்திரர் சட்டர்ஜி-யின் வங்காள நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.
ஒளிப்பதிவு:B.S.ரங்கா
இசை:சி.ஆர்.சுப்பராமன்
பின்னணி இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி
தயாரிப்பு:டி.எல்.நாராயணா
திரைக்கதை-இயக்கம்:வேதாந்தம் ராகவய்யா
வருடம்:1953
நடிகர்கள்:நாகேஸ்வரராவ்,சாவித்திரி,
எஸ்.வி.ரங்காராவ்,நம்பியார்,லலிதா....
சிறுவயதில்,எங்கள் ஊரில் தரைடிக்கெட்டில் பார்த்தப்பிறகு நேற்றுதான் இந்தப் படத்தை மறுபடியும் பார்த்தேன்.இடையில் இந்தப் படத்தை பார்க்க தவிர்த்தற்கு காரணம் படம் முழுவதும் சோகம் கவ்விக்கிடக்குமே என்பதேயாகும்.ஆனால்,சில திரைப்படங்களில் வரும் சோகம் கூட சுகமான சுமைதான்.அந்த வகையில் தேவதாஸ் நம் மனதில் சுகமான சுமையை தந்தவன்தான்.
70 ஆண்டுகள் கடந்தும் ஒரு திரைப்படம் நம் மனதை கனக்க வைக்கிறது என்றால் அது மிகச்சிறந்த திரைப்படமாகத்தானே இருக்க வேண்டும்.
கதை என எடுத்துக்கொண்டால் மிக எளியதுதான்.தேவதாஸ் ஜமீன்தார் வீட்டுப் பையன்.பார்வதி,பக்கத்து வீட்டுப்பெண்.இருவரும் படிப்பு,நடனம் என ஒன்றாகவே கற்றுக்கொள்கிறார்கள்.விளையாட்டிலும் இருவரும் பிரிவதேயில்லை.அவன் கோபப்பட்டு அடித்தாலும் பொறுத்துக்கொள்கிறாள் பார்வதி.அவன் மீது அவளுக்கு அந்த அளவிற்கு பிரியம்.அவனுக்கும்தான்.
சிறுவயதில் அவர்கள் இருவரும் சேர்ந்து விளையாடுவதற்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை,ஜமீன் குடும்பத்திலிருந்து.
பார்வதி பெரியவள் ஆனதும் அவள் தேவதாஸ் மீது வைத்திருந்த அன்பை புரிந்து கொண்டு பார்வதியின் பாட்டி,தேவதாஸ் வீட்டிற்கு சென்று பெண்கேட்க செல்கிறாள்.இப்பொழுதுதான் அந்தஸ்து எட்டிப்பார்க்கிறது.ஜமீன்தார்வீட்டுக் குடும்பம் ஒன்னுடன் சம்மந்தம் செய்து கொள்வதா என பார்வதியின் தந்தையை அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார் தேவதாஸின் தந்தை.
பார்வதியின் அப்பா,தன்னுடைய பெண்ணுக்கு ஜமீன்தார் குடும்பத்திலேயே மாப்பிள்ளை பார்க்கிறேன் என வைராக்கியம் கொண்டு மாப்பிள்ளை தேடுகிறார்.
40 வயதைக் கடந்த மணமகனும் அமைகிறான்.பெரிய ஜமீன் குடும்பம்தான்.இரண்டாம்தாரமாக வாழ்க்கைப் படுகிறாள்.முதல் மனைவி இறந்து விட்டாள்.முதல் மனைவிக்கு திருமணம் ஆன ஒரு மகனும் உண்டு.வரிசையாக நாலைந்து பிள்ளைகளும் உள்ள பெரிய குடும்பத்தில் வாழ்க்கைப்படுகிறாள் பார்வதி.
நமக்கு விதித்தது இதுதான் என சகித்துக்கொண்டு குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொள்கிறாள்.அவளை அம்மா அம்மாவென பாசத்தோடு அழைக்கும் அளவிற்கு அக்குடும்பத்தின் மீது பாசம் வைக்கிறாள்.
இங்கோ,தேவதாஸ் பார்வதி கிடைக்காத விரக்தியில் கண்மூடித்தனமாக வாழ்கிறான்.நண்பனால் குடிப்பழக்கத்திற்கும் ஆளாகிறான்.வெளியூரில் வாக்கப்பட்டுப்போன பார்வதி இவனது நிலையை அறிந்து புழுவாய் துடிக்கிறாள்.வேறு ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் தனைமறந்து விடுவான் என்றே நினைத்திருந்தாள் பாவம்.
அவள் ஒன்று நினைக்க,காலம் ஒன்று நினைத்து விட்டதே!
நேரில் வந்து கெஞ்சி கதறி அழுகிறாள்.மோசம் செஞ்சிட்டேனே!என்னால்தானே ஒனக்கு இப்படியாகிவிட்டது.....என்று கண்ணீரை கொட்டி புலம்புகிறாள்.
குடியை விட்டு விடும்படி கெஞ்சிக்கேட்கிறாள்.'எனக்கு இருக்கிற ஒரே நிம்மதி இது ஒண்ணுதான்.....இதையும் விடச்சொல்றியா பார்வதி....என அவன் கேட்க பதிலே சொல்ல முடியாமல் கண்ணீரோடு ஓடுகிறாள் பார்வதி.
தேவதாஸின் நல்ஒழுக்கத்தைக் கண்டு ஒரு விலைமாதுப்பெண்ணே மனம் திருந்துகிறாள்.கடைசிக்காலத்தில் அவனுக்கு பக்கபலமாக இருப்பது அவளும்,அவனுடைய வேலைக்காரன் மட்டுமே!
தனது வாழ்க்கை முடியப்போகிறது என அறிந்து கடைசியாக தனது பார்வதியின் முகத்தைப் பார்ப்பதற்காக அவளுடைய ஊருக்கு பயணப்படுகிறான்.
இந்தக் காட்சியை படமாக்கிய விதத்தில் நம் மனதை கனக்கச்செய்து விடுகிறார்கள்.சாகும் தருவாயிலும் வண்டிக்கூலியை மறக்காமல் கொடுக்கும் அந்த செயலைப் பார்க்கும் பொழுது வண்டிக்காரன் மட்டுமல்ல நாமும் அழுதுவிடுவோம்.
தேவதாஸ்-விதிவிலக்கான அற்புதமான கேரக்டர்.

இந்தப் படத்திற்குப் பிறகுதான் சாவித்திரிக்கு அதிக படவாய்ப்புகள் வந்ததாகவும் படித்திருக்கிறேன்.
இந்தப் படத்தின் முடிவு எல்லோருக்குமே தெரியும் என்பதால் க்ளைமாக்ஸ் வரையில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளேன்.
கடைசியில் தேவதாஸ் பார்வதியை பார்த்தானா?அதை மட்டும் மிச்சம் வைக்கிறேன்.படத்தைப் பாருங்கள்.
படத்தில் அமைந்த அனைத்து பாடல்களுமே கேட்க இனிமையாக இருக்கும்..குறிப்பா,ஓ ஓ தேவதாஸ் ....ஓ ஓ பார்வதி,உலகே மாயம் வாழ்வே மாயம்,உறவுமில்லை பிரிவும் இல்லை,கனவிதுதான் எனும் பாடல்கள் மிக முக்கிய பாடல்கள் என சொல்லலாம்.
பாடல்களை உடுமலை நாராயணகவியும்,கே.டி.சந்தானம் அவர்களும் எழுதியுள்ளார்கள்.யார் எந்தப் பாடல்களை எழுதியுள்ளார்கள் என்பதுதான் தெரியவில்லை.

சே மணிசேகரன்

Leave a Reply