• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகர்திலகமும்,கன்னட நடிகர் ராஜ்குமாரும்

சினிமா

கன்னட நடிகர் ராஜ்குமாருக்கு அங்குள்ள மக்கள் கொடுக்கும் மரியாதையை, நாம் எல்லோருமே அறிவோம்.அந்த மாநிலத்திற்கு போய் வந்தவர்கள் மேலும் அறிவார்கள்.
ராஜ்குமாருக்கு தெருவுக்கு தெரு சிலை இருப்பதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுள்ளேன்.அப்படி என்னதான் இவர் அந்த மக்களுக்காக செய்துள்ளார் என்பது எனக்குத் தெரியலே.
கர்நாடகாவில் 20 வருடங்களாக வசித்து வரும் நண்பர் ஒருவரிடமும் விசாரித்தேன்.அவர் சொன்னது இதுதான். ராஜ்குமார் காவிரி நீர் பிரச்னை எழும்பொழுதெல்லாம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது என்பதில் தலைமை தாங்கி நடத்துவதே அவர்தான்.மற்றபடி,அவர் மக்களுக்காக முக்காத்துட்டு செலவு செய்தது கிடையாது',என்றார்.
அவர் கன்னடப்படவுலகின் சூப்பர் ஸ்டார்,அவ்வளவுதான்.அந்த மாநிலத்தைத் தாண்டி பாமர ஜனங்கள் எவருக்கும் அவரைத் தெரியாது.இப்படியாப்பட்ட ஒருவருக்கு அங்கு தெருவெங்கும் சிலை.மக்கள் அவரை கொண்டாடி தீர்க்கிறார்கள்.
ஆனால்,தமிழ்நாட்டிலோ தலைகீழ்.தலைமேல் தூக்கி வைத்து கொண்டாட வேண்டிய தமிழனை,தமிழ் நடிகனை வாழும் பொழுதும் புறக்கணித்தார்கள்;மறைந்த பிறகும் புறக்கணிக்கிறார்கள்.
காமராஜர் மதிய உணவுத்திட்டம் ஆரம்பித்தவுடன் முதன்முதலில் உதவிக்கரம் நீட்டியது சிவாஜிதான்.தன்னுடைய பங்காக ஒரு லட்ச ரூபாய் கொடுத்தார்.இன்றைக்கு இதன் மதிப்பு 1 கோடி ரூபாய் வரை பெறலாம்.இந்த தகவலே எனக்கு 20  வருடத்திற்கு முன்புதான் வானொலி ஒலிபரப்பின் மூலம் அறிந்தேன்.
இந்தியா பாகிஸ்தான் போர் மூண்ட போது தனது மனைவி அணிந்த நகைகள் அனைத்தையும் கழட்டி போர் நிதியாக கொடுத்தார்.
இவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட மிக விலைஉயர்ந்த  தங்கப்பேனாவையும் போர் நிதியாக அளித்தார்.அரசு பதவியில் இருக்கும் பொழுது தனக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புகள் அனைத்தையும் பதவிக்காலம் முடிந்தப் பிறகு  வீட்டிற்கு எடுத்துச் செல்லும் அல்ப அரசியல்வாதிகளையும் நினைவு படுத்த விரும்புகிறேன். 
1959-ஆம் ஆண்டில் பராசக்தியில் அறிமுகம் ஆனதிலிருந்து 1959-ஆம் ஆண்டு வரை,அவர் பொதுக்காரியங்களுக்கு தானமாக அளித்த நன்கொடைகள் மட்டும் 10 லட்சம் ரூபாயாகும்.அதன் பொருட்டுதான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள்,இவரைப்பற்றி பெருமை பட ஒரு கவிதையே எழுதியுள்ளார்.
'நானறிந்த அலகு மெச்சும்
நடிப்பால் நற்றறித்தால் பெற்ற 
குன்றெந்த பெருஞ் செல்வத்தை
குவித்தீந்த கணேசன் போல் 
என்றெந்த நடிகர் ஈந்தார்?
இப்புகழ் யாவர் பெற்றார்?
சிவாஜியின் கொடைத்திறனுக்கு பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை வரிகளே சாட்சியாக அமைந்து,சிவாஜி பெற்ற பேறாகும்.எவருக்கு இப்பெருமை கிட்டும்.
கட்சிக் தனக்கு என்ன செய்தது என நினைக்கும் அரசியல் உலகில் காங்கிரஸ் கட்சிக்காக செலவு செய்தது இவர் ஒருவர் மட்டுமே!
1950 களிலேயே கடல் கடந்து புகழைப்பெற்றவர் சிவாஜி ஒருவரே!
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்திற்காக சிவாஜி அவர்கள் ஆசிய-ஆப்பிரிக்க படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார்.இவ்விருது எகிப்து நாட்டின் மிகப்பெரிய விருதாகும்.இதன் மூலம் சர்வதேச அளவில் விருதை வாங்கிய முதல் இந்தியன் என்பதையும் தாண்டி தமிழன் எனும் பெருமையையும் பெற்றார்.
எகிப்து அதிபர் நாசர் விருந்தினராக இந்தியா வந்தபோது,அவர் விருந்துண்டு மகிழ்ந்தது இரண்டு பேர் வீட்டில் மட்டுமே!ஒருவர் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு.மற்றொருவர் நடிகர்திலகம் மட்டுமே!
1962-ஆம் ஆண்டில் அமெரிக்க நாட்டிற்கு கலைத்துறையின் வாயிலாக  சிறப்பு விருந்தினராக சென்றபொழுது,நயாகரா நகரில் ஒரு நாள் கௌரவ மேயராக நியமிக்கப்பட்டார்.
பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரிய உயர்விருதான செவாலியே விருதையும் இவர்தான் முதலில் பெற்றார்.
பெற்றதாய் தன்னுடைய பிள்ளையை கொஞ்சி மகிழ்வதைக்காட்டிலும்,பக்கத்து வீட்டாரும் நம் பிள்ளையை பாராட்டி மகிழ்வதில்தான் சிறப்பே இருக்கு.

இப்படி,கடல்கடந்து இந்தியநாட்டிற்கு பெருமையை தேடித்தந்த சிவாஜிக்கு,குண்டு சட்டியிலேயே குதிரையை ஓட்டிக்கொண்டிருந்த ராஜ்குமாருக்கு தாதாசாகிப் விருது வழங்கப்பட்ட பிறகுதான் சிவாஜிக்கு வழங்கப்பட்டது.
நாட்டிற்காக பொன்னையும் பொருளையும் இழந்து,மண்ணெண்ணெய் விற்கும் நிலைக்குச் சென்ற கப்பலோட்டிய தமிழன் வஉசிக்கே பாரதரத்னா விருது இன்றைய வரையில் வழங்கப்படவில்லை என்பதையும் நினைவுபடுத்துகிறேன்.
பாரதரத்னா விருது உருவாக்கப்பட்டபொழுது இறந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவித்தார்கள்.மறுவருடமே விதியை தளர்த்தி உயிரோடு இருப்பவர்களுக்கும் கொடுப்பதாக அறிவித்தார்கள்.அப்படி அறிவித்த உடனேயே முதலில் தியாகசீலர் வஉசிக்குதான் வழங்கியிருக்க வேண்டும்.தொடர்ந்து யார் யாருக்கோ கொடுத்தார்கள்.வஉசியை மறந்தார்கள்.தமிழ்நாட்டைத் தாண்டி அவருடைய புகழை பரவாமல் பார்த்துக்கொண்டார்கள்.
எப்பொழுதுமே தமிழன் என்றாலே ஒன்றிய அரசுகளுக்கு வேப்பங்காய்தான்.அது இன்று வரையில் தொடர்கிறது.
இப்போ இந்தப் பதிவுக்கான காரணத்துக்கு வர்றேன்.மக்களுக்கு எதுவுமே செய்யாத ராஜ்குமாருக்கு அங்கு வீதிதோறும் சிலைகள்.இங்கோ,இருந்த ஒரே ஒரு சிலையையும் ஏதோவொரு காரணம் சொல்லி அப்புறப்படுத்தினார்கள்.
திருச்சியில் 13 வருடங்களாக சிவாஜியின் சிலை மூடியே கிடக்கு.ஏன் சிலை வைக்க அனுமதி அளித்தார்கள்?பிறகு ஏன் மூடினார்கள் என்பதுதான் வெளங்கலே.இத்தனைக்கும் திருச்சி சங்கிலியாண்டபுரம்தான் அவர் வளர்ந்த ஊர்.
வருகிற ஜீலை 21-ம் தேதி சிவாஜி அவர்களின் 23-ஆம் ஆண்டு  நினைவுநாளுக்குள்ளாவது மூடி வைத்துக்கொண்டிருக்கும் சிலையை திறந்து வைப்பார்களா என பார்ப்போம்.
வாழும் பொழுதும் இறந்தப் பிறகும் புறக்கணிக்கப்பட்ட தமிழர்கள் இரண்டு பேர்.
ஒருவர் கப்பலோட்டிய தமிழன் வஉசி;மற்றொருவர் அவருடைய தியாகத்தை திரையில்  சொன்ன நடிகர்திலகம்.

Manisekaran

Leave a Reply