• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்த வருடத்தின் நான்காவது வெற்றி கிண்ணமும் சில்வர்ஸ்டார் மைதானத்தில் முதலாவது வெற்றி கிண்ணமும்

இலங்கை

அச்சுவேலி சில்வர்ஸ்ரார் விளையாட்டுக்கழகத்தால் நடாத்தப்பட்ட 2023ஆம் ஆண்டிற்கான அமரர்கள் இ.கஜன், ச.தூபதீபன், இ.கோகுலன் ஞாபகார்த்த மென்பந்தாட்ட சுற்றுத்தொடரின் வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றியது எமது கோல்ட்ஸ்ரார் அணி.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார் எல்லாளன் அணித்தலைவர் தேனுஜன். இதன்படி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய எல்லாளன் அணிக்கு ஆரம்பமே சறுக்கலாக அமைந்தது. ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் ஓட்டமெதனையும் பெறாமல் ஆட்டமிழந்த நிலையில் அடுத்து வந்த வீரர்கள் நிதானமாகத் துடுப்பெடுத்தாடி அணி கௌரவமான ஓட்ட எண்ணிக்கையைப் பெற உதவினர். அதிகபட்சமாக தனுசன் 21 ஓட்டங்களையும் சைலரூபன் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க எல்லாளன் அணி நிர்ணயிக்கப்பட்ட 10 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளையிழந்து 63 ஓட்டங்களை சேர்த்திருந்தது. பந்துவீச்சில் கோல்ட்ஸ்ரார் அணி சார்பாக கஜன்ராஜ் மற்றும் விந்தன் தலா 3 விக்கெட்டுகளையும் ஜோயல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

64 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கோல்ட்ஸ்ரார் அணியினரின் விக்கெட்டுக்கள் சீரான இடைவெளியில் வீழ்த்தப்பட போட்டி உச்சக்கட்ட விறுவிறுப்பை எட்டியது. போட்டியின் இறுதிப்பந்துப் பரிமாற்றத்தில் கோல்ட்ஸ்ராரின் வெற்றிக்காக 14 ஓட்டங்களும் எல்லாளனின் வெற்றிக்காக 2 விக்கெட்டுக்களும் தேவை என்ற நிலையில் சைலரூபன் வீசிய முதற்பந்தில் விந்தன் ஆறு ஓட்டங்களைப்பெற்று அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேற போட்டி எல்லாளன் பக்கம் திரும்பியது. இறுதி விக்கெட்டாக களமிறங்கிய ரதுஷன் கோல்ட்ஸ்ரார் அணியின் மீட்பராக மாறி கடைசி நான்கு பந்துகளையும் எதிர்கொண்டு ஒரு சிக்ஸர் உட்பட 7 ஓட்டங்களைப் பெற்று எல்லாளன் பக்கமிருந்த வெற்றியை கோல்ட்ஸ்ராரின் வசமாக்கினார். பந்துவீச்சில் எல்லாளன் சார்பாக சைலரூபன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இப்போட்டியின் ஆட்நாயகனாக சகலதுறைகளிலும் பிரகாசித்த விந்தன் தெரிவு செய்யப்பட்டார்.

சாம்பியன்களாக கோல்ட்ஸ்ரார் வி.கழகம் தெரிவு செய்யப்பட்டது .(இவர்களுக்காக 15000 ரூபா பணமும் வெற்றிக்கிண்ணமும்)

இரண்டாமிடம் எல்லாளன் வி.கழகம் தெரிவு செய்யப்பட்டது .(இவர்களுக்காக 10000 ரூபா பணமும் வெற்றிக்கிண்ணமும்)
 

Leave a Reply