• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தபால் துறையை நவீனமயப்படுத்த நடவடிக்கை

இலங்கை

“தபால் திணைக்களத்தை நவீனமயமாக்குவதற்கான புதிய சட்டமூலம் இவ்வருட இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்” என வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்றைய தினம்  (16) நடைபெற்ற ஊடக மாநாட்டில்  கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”தனியார் மற்றும் அரச துறையின் கூட்டுத் திட்டமாக 10 பில்லியன் ரூபாய் செலவில் இந்த நவீனமயமாக்கல் பணி மேற்கொள்ளத்  திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும் தபால் திணைக்களம் எந்த வகையிலும் தனியார் மயப்படுத்தபட மாட்டாது. தபால் சேவையை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் அடுத்த இரண்டு வருடங்களில் தபால் துறையில் இலாபமீட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக இவ் வருட இறுதிக்குள் 3,000 மில்லியன் ரூபாவால் நட்டத்தைக் குறைக்கவும், வரும் 2025 ஆம் ஆண்டளவில் இலாபம் ஈட்டும் நிறுவனமாக தபால் திணைக்களத்தை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும்  அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போதுள்ள தபால் கட்டளைச் சட்டம், அதனை நவீனமயமாக்கும் செயற்பாட்டுக்கு இடையூறாக இருப்பதால், அதனை அவசரமாக திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதன் பணிகள் ஏற்கனவே 80 % நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் காணப்படும் பழமையான துறைகளில் ஒன்றான தபால் திணைக்களம் தொடர்பில் காலனித்துவ காலத்தில் கொண்டு வரப்பட்ட கட்டளைச் சட்டமே இன்றும் உள்ளது. இதுவரை ஒருமுறைதான் இச்சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தபால் திணைக்களத்தை நவீனமயமாக்கும் செயற்பாட்டுக்கு இது ஒரு பெரிய தடையாக உள்ளது. அதை மாற்றுவதன் மூலம் வருமானத்தை அதிகரிக்க நாம் எதிர்பார்க்கின்றோம்.

சுமார் 27,000 தபால் திணைக்கள ஊழியர்கள் உள்ளனர். மேலும், 653 தபால் நிலையங்கள், 3342 உப தபால் நிலையங்கள் மற்றும் 140 முகவர் தபால் நிலையங்கள் உள்ளன. இவ்வளவு விசாலமான தபால் சேவை நம்மிடம் இருந்தாலும் கடந்த ஆண்டின் நட்டம் 7000 மில்லியன் ரூபாய் ஆகும்.

இந்த அமைச்சை என்னிடம் ஒப்படைத்ததன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த தபால் சேவையைக் கட்டியெழுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பணித்தார். அதன்படி முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தின் காரணமாக இவ்வருடம் தபால் திணைக்கள நட்டத்தை 3000 மில்லியன் ரூபாயால் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.வரும்  2024 ஆம் ஆண்டிற்குள் வருமானத்திற்கும் செலவிற்கும் இடையிலான இடைவெளியை சரிசெய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2025 ஆம் ஆண்டில், திறைசேரியில் தங்கியிருக்காத தபால் சேவையை உருவாக்குவதே எமது நோக்கமாகும்” இவ்வாறு அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply