ஏ.ஆர்.ரஹ்மானின் குருகிராம் இசை நிகழ்ச்சி 2027-க்கு ஒத்திவைப்பு
சினிமா
ஏ.ஆர்.ரஹ்மானின் குருகிராம் இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் 'வொண்டர்மென்ட் டூர்' குருகிராம் இசை நிகழ்ச்சி, வரும் நவம்பர் 21-ஆம் தேதி நடைபெற இருந்தது.
இந்நிலையில், "எதிர்பாராத சூழ்நிலை மற்றும் கடைசி நேர முக்கியமான மாற்றங்கள் காரணமாக" நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அடுத்த ஆண்டு 2027-ல் நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், புதிய தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஹரியானா மாநிலம், குருகிராமில் உள்ள பேக்யார்டு ஸ்போர்ட்ஸ் கிளப்பில் வரும் 21ம் தேதி மாலை 7 மணிக்கு நடைபெற இருந்த இந்த நிகழ்ச்சிக்கு, ரூ.2,499 முதல் ரூ.1,50,000 வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.
நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணம் திருப்பித் தரும் நடவடிக்கையை ஏற்பாட்டாளர்கள் தொடங்கியுள்ளனர்.
பிற பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் பலர் தங்களது நண்பர்களுடன், உறவினர்களுடன் நிகழ்ச்சியில் பங்கேற்க பயண ஏற்பாடுகளை செய்திருந்ததாகவும், திடீர் ஒத்திவைப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த 'ஹார்மனி ஆஃப் ஹார்ட்ஸ்' நிகழ்ச்சியிலும் இதேபோல் கடைசி நேரத்தில் டிக்கெட் ரத்து சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.






















