ஈரானுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துவிட்டது - டொனால்ட் ட்ரம்ப்
ஈரானுக்கு எதிரான போர் "இராணுவ ரீதியாகப் பார்க்கையில் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது" என நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்கள்கிழமை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஈரானிய பொருளாதாரம் மற்றும் சர்வதேச சந்தையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய தொடர் தாக்குதலை தற்போதைக்கு மீண்டும் தொடங்குவதற்குத் தாம் ஆயத்தமாக இல்லை என்பதை அவர் உணர்த்தியுள்ளார்.
கட்டார் பிரதமர் ஷேக் மொஹமட் பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானியுடன் நடத்திய சந்திப்பைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையின் செய்தியாளர் சந்திப்பு அறைக்கு எதிர்பாராதவிதமாக வருகை தந்த ஜனாதிபதி ட்ரம்ப் இதனைத் தெரிவித்தார்.
"ஈரான் இராணுவ ரீதியாக முடிவுக்கு வந்துவிட்டது. நாம் தற்போதுள்ள நிலையையே பராமரித்து வருகிறோம்," என்று கூறிய ட்ரம்ப், ஈரானின் தலைமைத்துவம் வீழ்த்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டதுடன், அந்த நாட்டின் அணுசக்தித் திட்டத்தை முற்றிலுமாகச் முடக்குவதற்கான நீண்டகால தீர்வை உறுதி செய்ய இன்னமும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சி பாராளுமன்றத்தின் இரு அவைகளின் பெரும்பான்மையையும் ஜனநாயகக் கட்சியிடம் இழந்த நிலையைத் தொடர்ந்து ட்ரம்பின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
முன்னதாக, மத்திய கிழக்கு நட்பு நாடுகளான கட்டார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட நாடுகள் தற்போதைய அமைதி நிலையையே விரும்புவதாக எக்ஸ் (X) தளத்தில் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானுடன் "சாதகமான நகர்வுகள்" காணப்படுவதாகவும், போர் முடிவுக்கு வர "நல்ல வாய்ப்பு" உள்ளதாகவும் கூறினார்.






















