அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்திக்கு புதிய பொறிமுறை
இலங்கை
அநுராதபுரம் புனித பூமியில் அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்தும்போது ஒருங்கிணைந்த பாரம்பரிய பாதுகாப்பு, முகாமைத்துவம், திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் தேவையான தீர்மானங்களை மேற்கொள்ளும் செயன்முறைக்காக ஜனாதிபதி ஆலோசகர் சபை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
அட்டமஸ்தானாதிபதியும் (பதில்), ருவன்வெலிசாய விகாராதிபதியும், ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தரும், மகாவிகாரை சங்க சபையின் தலைமைச் செயலாளரும், வடமத்திய மாகாண தலைமைச் சங்கநாயக்கருமாகிய வணக்கத்திற்குரிய ஈதலவெட்டுணுவெவே ஞானதிலக்க நாயக்க தேரர் மற்றும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோர் இக்குழுவின் இணைத் தலைவர்களாகச் செயற்படுவர்.
அபயகிரிய விகாராதிபதியும், இலங்கை பிக்கு பல்கலைக்கழகத்தின் முதுகலை மற்றும் வெளிவாரி பட்டப்படிப்புகள் விரிவாக்கல் பிரிவின் பணிப்பாளருமான வணக்கத்திற்குரிய பேராசிரியர் கல்லஞ்சியே ரதனசிரி தேரர், தூபாராம விகாராதிபதி வணக்கத்திற்குரிய கஹல்லே ஞானிந்த தேரர், இந்திய மகாபோதி சங்கத்தின் முன்னாள் பிரதிச் செயலாளரும், போமலுவ விகாரைவாசி வணக்கத்திற்குரிய கலாநிதி கஹட்டகொல்லேவே மேதங்கர தேரர் அடங்கலாக, தொடர்புடைய அரச நிறுவனங்களின் பணிப்பாளர் நாயகம்மார், அரச அதிகாரிகள், அறிஞர்கள் உட்பட 32 உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் இதற்கென நியமிக்கப்பட்டுள்ளனர்.
புனித பூமியின் அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்தும்போது ஒன்றித்த தீர்மானங்களை எடுக்கும் பொறிமுறையின் ஊடாக தொல்பொருள், வரலாற்று, மத மற்றும் கலாசார பாரம்பரியங்களைப் பாதுகாத்து அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன் ஏனைய உறுப்பினர்களாக, புத்தசாசன அமைச்சின் மேலதிக செயலாளர் (புனித பூமி பிரிவு) சமந்தி நாகஸ்தென்ன, நகர அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) தரணி அனோஜா கமகே, யுனெஸ்கோவுக்கான தேசிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பிரபாத் ஜயசிங்க, தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் (பாதுகாப்பு) பிரசன்ன ரத்நாயக்க, தாவரவியலாளர் பாத்திய சுமித்ரா ஆரச்சி, கலாநிதி ரத்னசிரி பிரேமதிலக்க, புத்தசாசன அமைச்சின் ஆலோசகரும் முன்னாள் தொல்பொருள் பணிப்பாளருமான பேராசிரியர் ஜகத் வீரசிங்க, களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மாலிங்க அமரசிங்க, இலங்கை தொல்பொருள் ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஆர். எம். எம். சந்திரரத்ன, ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முன்னாள் வரலாற்றாசிரியர் பேராசிரியர் ஆரிய லகமுவ, களனி பல்கலைக்கழகத்தின் தொட்டுணரா பாரம்பரியம் தொடர்பான ஓய்வுபெற்ற பேராசிரியர் பி. டி. நந்ததேவ, இலங்கை நகர திட்டமிடுபவர்கள் நிறுவனத்தின் தலைவர் வை. ஏ. டி. கே. குணதிலக்க, இலங்கை கட்டிடக் கலைஞர்கள் நிறுவகத்தின் தலைவியும் சான்றளிக்கப்பட்ட கட்டிடக் கலைஞருமான திலும்மினி டி மெல் ஆகியோரும், அநுராதபுரம் நகர முதல்வர், அநுராதபுரம் மாவட்ட செயலாளர், தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம், தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம், தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், அநுராதபுரம் பிரதி பொலிஸ் மா அதிபர், மத்திய நுவரகம் பிரதேச செயலாளர், வடமத்திய மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் மாகாண பொறியியலாளர், அநுராதபுரம் நகர ஆணையாளர், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் முகாமைத்துவ பணிப்பாளர், வடமத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்று பொறியியலாளர், அநுராதபுரம் லங்கா மின் விநியோக நிறுவனத்தின் மின்சார பொறியியலாளர், அநுராதபுரம் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிராந்திய முகாமையாளர் ஆகியோர் செயற்படுவர்.





















