மக்களுக்கு நன்மை கிடைக்குமெனில் 500 நாட்கள்கூட சிறையில் இருக்கத் தயார் - நாமல் ராஜபக்ச
இலங்கை
நாட்டின் பொருளாதாரச் சுமையைக் குறைத்து, கலாசார மரபுரிமைகளைப் பாதுகாக்கத் தனது சிறைவாசம் உதவுமெனில், 50 நாட்கள் மட்டுமன்றி 500 நாட்கள்கூட சிறையில் இருக்கத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 23ஆம் திகதியிடப்பட்ட நீண்ட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், ஒக்டோபர் 24ஆம் திகதியுடன் தான் கைது செய்யப்பட்டு 50 நாட்கள் நிறைவடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “எனது நாட்டுக்கு நன்மை கிடைப்பதுடன், எமது கலாசார மரபுரிமைகளையும் பாதுகாக்க முடியும் என்றால், 50 நாட்கள் மட்டுமன்றி 500 நாட்கள்கூட சிறையில் இருக்க நான் தயாராக இருக்கிறேன்.
கவந்திஸ்ஸ யானையின் உயிரிழப்பு
நாட்டின் பொருளாதார நிலைமை முன்னேற்றமடைந்து வருவதாகக் கூறப்பட்டாலும், பொதுமக்கள் தொடர்ந்தும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள்.
மின்சாரக் கட்டணங்களை மூன்றில் இரண்டு பங்காகக் குறைத்தல், எரிபொருள் விலைகளைக் குறைத்தல், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சம்பளத்தை அதிகரித்தல், பிணையின்றி வட்டியில்லாக் கடன்களை வழங்குதல், சுமார் 12 இலட்சம் ரூபாவுக்கு டொயோட்டா விட்ட்ஸ் ரக கார்களைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள், சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் வரிகளை நீக்குதல் உள்ளிட்ட வாக்குறுதிகளையும் அவர் தனது அறிக்கையில் நினைவுபடுத்தியுள்ளார்.
தேசியப் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக ஒரு அரசியல் குடும்பத்தை இலக்குவைப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“இவ்வாறான நெருக்கடியான தருணத்தில், நாட்டின் பிரச்சினைகளின் பாரத்தை ஒரு குடும்பத்தின் பின்னால் மறைக்க முயற்சிப்பது அபத்தமானது” என அவர் தெரிவித்துள்ளார்.
பிரபல தந்தமுடைய யானையான கவந்திஸ்ஸவின் உயிரிழப்பு குறித்துக் கவலை வெளியிட்ட நாமல் ராஜபக்ச, அந்த யானையைப் பாதுகாக்கத் தவறியமை தொடர்பிலும் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கலாசார மற்றும் இயற்கை மரபுரிமைகளைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தனது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச, நாட்டின் மரபுரிமைகளைப் பாதுகாத்ததுடன் உயிரினங்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கும் வழிவகுத்த தலைவர் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
மதம் மற்றும் கலாசாரம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், ஜனநாயகச் சமூகத்தில் இவ்விடயங்கள் குறித்துக் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெறுவது அவசியம் என்றாலும், அவமதிப்பு, உண்மைகளைத் திரித்துக் கூறுதல் மற்றும் வெறுப்பைப் பரப்புதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
“மதம் என்பது போட்டியல்ல அது இணைந்து வாழ்தல் அது ஒரு வெளிப்படுத்தலல்ல அது புரிந்துணர்வு” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளிலிருந்து நீதித்துறை இறுதியில் தன்னை விடுவிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
சிறைவாசம் தனது வாழ்க்கை மற்றும் அரசியல் குறித்து ஆழமாகச் சிந்திப்பதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளதாகத் தெரிவித்த அவர், சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் இருப்பதால் தனது சிந்தனைகளையோ அரசியல் நம்பிக்கைகளையோ கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளார்.
“என்னைச் சிறையில் அடைக்கலாம். ஆனால், எமது அரசியல் அணிக்கு ஆதரவாக நிற்கும் மக்களின் எதிர்பார்ப்புகளைச் சிறையில் அடைக்க முடியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





















