உண்மையான சாதனையாளர் இறந்த பிறகே அதிகமாக நினைவுகூறப்படுகிறார்!
சினிமா
அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களாக என்னுடைய சிந்தனையிலும், தேடலிலும் தேவா அதிகமாக இருந்து கொண்டிருக்கிறார். எனக்கு மாத்திரமல்ல, பலரிடமும் இந்த உணர்வைப் பார்க்கிறேன்.
தேவாவின் பலங்கள் இரண்டு!
ஒன்று, அவர் மயிலாப்பூரில் பிறந்து வளர்ந்த சென்னை மண்ணின் மைந்தர். இந்த மண்ணின் உழைக்கும் பாமர மக்களின் பாடுகளை உள்வாங்கியவர் என்ற வகையில் உதிரி வேலை செய்யும் உழைக்கும் மக்கள் குரலில் உள்ள இசையை உன்னிப்பாக உள்வாங்கியவர் குரங்காட்டி தொடங்கி தெருவில் வண்டியில் பழம் விற்றுச் செல்பவர், ஒட்டை உடைசல் பாத்திரங்களை பழுது பார்க்க கத்திக் கொண்டு செல்பவர்..என அனைவர் குரல்களிலும் ஒரு தாள கதியை, இசையை உள்வாங்கியுள்ளார். நொச்சிக்குப்பம், அயோத்தி குப்பம் மீனவப் பெருங்குடிகளின் கானா இசை மரபையும்..உள்வாங்கி உருவானவர்.
மற்றொன்று அவரது தன்னடக்கம். யார் தன்னை அவமானப்படுத்தினாலும், உதாசீனப்படுத்தினாலும், துன்பத்திற்கு வித்திட்டாலும் அவர்கள் மீது ஒரு சிறிதும் கோபப்படாத அன்புள்ளம்.
அதே சமயம் தேவாவின் அளவுக்கு அதிகமான தன்னடக்கமே - அவர் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் போனதே - முக்கியத்துவம் குறைந்தவராக மதிப்பிடப்பட்டதற்கும் காரணமாகும்.
ரேடியோ வாங்கும் வசதி கூட இல்லாமல் பக்கத்துவீட்டு ரேடியோவில் பாட்டு கேட்டு வளர்ந்தரான தேவா இயல்பிலேயே ஒரு ஓவியர். கலைகளிலே ஓவியம் உன்னதமானது. அதுவே அவரை இசை பக்கம் மெல்ல நகர்த்தியதாக அவரே ஒரு நேர்காணலில் சொல்லி உள்ளார்.
கானா பாடல்களில் தேவா கொடிகட்டிப் பறந்ததின் பின்னணி இது தான்! தேவாவின் வெற்றிக்கு அடித்தளமாக இருந்தது அவரது தம்பிகளான சபேசனும், முரளியும் தான். அவர்களை கண்ணுக்கு கண்ணாக வைத்திருந்தார்!
''நான் ஆட்டோகாரன், ஆட்டோகாரன்..'' பாடலுமே கூட ஒரு கானா பாடலின் உல்டாவே! இந்தப் பாடலை ரிகர்சலில் தேவா பாடியதை கேட்டு சொக்கிப் போன ரஜினி, ''இதை நீங்களே பாடிவிட்டால் நன்றாக இருக்குமே'' என்று வற்புறுத்தியும், ''இல்லை எஸ்.பி.பி பாடுவதே நல்லா இருக்கும்'' என தன்னை குறை மதிப்பீட்டில் வைத்துக் கொண்டார்.
உண்மையில் நான் ஆட்டோகாரன் பாடலை தேவா பாடி இருந்தால், அது உழைக்கும் வர்க்க ஆட்டோ ஓட்டுநர்களின் குரல் போலவே உணரப்பட்டு கொண்டாடப்பட்டு இருக்கும். இன்னொரு 'சலோமியா' பாடலை போல இருந்திருக்கும். சலோமியா பாடலைக் கூட படத்திற்கு அவர் உதித் நாராயணனைத் தான் பாட வைத்திருப்பார். மேடை கச்சேரிகளில் தேவாவே அதை பாடும் போது, படத்தில் உதித் நாராயணன் பாடியதைவிட மிக அற்புதமாக இருக்கிறது.
இப்படி பல பாடல்களுக்கு ரிகர்சலில் அவர் குரலைக் கேட்ட பிறகு அவரையே இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாடச் சொல்லியும் பாடாமல் மற்றவர்களை பாட வைத்துள்ளார்.
19 வயதிலேயே அவர் இசை பக்கம் வந்து விடுகிறார். மேடை நாடகங்கள் கொடி கட்டிப் பறந்த அந்த காலகட்டத்தில் சென்னை சபாக்களில் நடந்த பல பிரபலங்களின் மேடை நாடகங்களுக்கு அவரும் அவர் நண்பர் சந்திரபோசும் சேர்ந்து இசை அமைத்துள்ளனர்.
திரைப்பட வாய்ப்புகளுக்காக அவரும் சந்திர போஸ் சைக்களில் டபுள்ஸாக சென்று பல திரைப்பட கம்பெனிகளுக்கு மூன்று வருடங்கள் தொடர்ந்து படை எடுத்ததில் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வாய்ப்பில் சந்திரபோஸ் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்கிறார். மச்சானை பார்த்தீங்களா? ( 1978) படத்திற்கு மாப்பூவே சிறு மைனாவே பாடல் டியூனை உருவாக்கி கொடுத்துவிட்டு நண்பனிடம் பகை பாராட்டாமல் விடை பெற்று தூர்தர்ஷனில் குடும்ப கஷ்டத்திற்காக வேலைக்கு சென்று பிறகு 14 வருடங்களாக தொடர்ந்து முயற்சித்து 1989-ல் மனசுக்கேத்த மகராசா பட வாய்ப்பை பெறுகிறார்.
பாவலர் பிரதர்ஸ் சகோதரர்களுக்கும், தேவாவிற்கும் 1970 களின் தொடக்கத்தில் இருந்தே அறிமுகம் இருந்துள்ளது. இருவரும் நாடகங்களுக்கு இசையமைத்த காலகட்டம் அது. அந்த தொடர்பில் தான் தேவாவின் இரண்டாம் படமான வைகாசி பிறந்தாச்சு படத்தில் கங்கை அமரனை பாடல் எழுத வைத்து, பாடவும் வைத்தார் தேவா. தொடர்ந்து தேவாவின் இசையில் கங்கை அமரன் 10க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.
தேவாவுக்கு வாய்ப்பு வருவதற்கு முன்பு தேவாவின் தம்பி சபேசன் கங்கை அமரன் குழுவிலும், இளையராஜா குழுவிலும் நிறையவே பணியாற்றி உள்ளார். பாவலர் பிரதர்ஸோடு சம்பந்தியாகவும் தேவா மாறினார். அந்த கல்யாணத்திற்கு இளையராஜா செல்லவில்லை. நியாயப்படி தகப்பன் இல்லாத நிலையில் சித்தப்பாவான இளையராஜா தான் தந்தையாக இருந்து திருமணத்தை நடத்தி வைத்திருக்க வேண்டும்.
1990 களில் ஆண்டுக்கு 35 படங்கள், 38 படங்கள் என தேவா அதிக படங்கள் தருவதிலும், அதிக ஹிட் பாடல்கள் தருவதிலும் முதன்மை இசை அமைப்பாளராக வலம் வந்த காலகட்டத்தில் கூட தேவா அவர்கள் இளையராஜா மீது பெரு மதிப்பையும், பேரன்பையும் கொணடவராகவே தன்னை வெளிப்படுத்தி வந்துள்ளார். ஆனால், நேருக்கு நேர் பார்க்க நேர்ந்த சமயங்களில் தேவா வணக்கம் வைத்தால் கூட இளையராஜா பதில் வணக்கம் சொல்லாமல் கடந்து போய்விடுவார்.
ஆயினும் தன் கடைசி காலம் வரை இளையராஜா மீது மாறா மதிப்பையும், அன்பையும் கொண்டிருந்தார் தேவா. ஏனோ தெரியவில்லை, கடைசி வரை இசை ஞானி இளையராஜா அவர்கள் தேவா அவர்களை இறப்பிலும் கூட அங்கீகரிக்கவில்லை!
சாவித்திரி கண்ணன்





















