• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சவுதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

இலங்கை

சவுதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் மாறிவரும் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, அங்கு வசிக்கும் இலங்கை குடிமக்கள் விழிப்புடன் இருக்குமாறு, அதிகாரப்பூர்வ அவசரகால எச்சரிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இலங்கைவரலாறு

ஜெட்டாவில் உள்ள இலங்கைத் தூதரகம் ஒரு அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் மேற்குப் பிராந்தியத்தில் சேவையாற்றும் இலங்கையின் அதிகாரப்பூர்வ தூதரகப் பணிமனையாக இது செயல்படுகிறது.

தங்கள் மொபைல்களில் ‘தேசிய எச்சரிக்கை அறிவிப்பு’ (National Warning Alert) வந்தால், இலங்கையர்கள் உடனடியாக ஜன்னல்களிலிருந்து விலகி பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வெளியே இருப்பவர்கள் அருகிலுள்ள பாதுகாப்பான கட்டிடத்திற்குள் செல்லவோ அல்லது உறுதியான சுவருக்குப் பின்னால் தஞ்சம் புகவோ அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளையில், திறந்தவெளிகள், கண்ணாடிப் பகுதிகள், பால்கனிகள் மற்றும் கட்டிடக் கூரைகளிலிருந்து விலகி இருக்குமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அவசரகால எச்சரிக்கையைப் பெறும் வாகன சாரதிகள், தங்கள் வாகனங்களை ஓரமாக நிறுத்திவிட்டு, ஆபத்து நீங்கிவிட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தும் வரை பாலங்கள் மற்றும் உயரமான கட்டிடங்களிலிருந்து விலகி இருக்குமாறு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

 கூட்டமான இடங்கள் மற்றும் ஆபத்து ஏற்படக்கூடிய பகுதிகளைத் தவிர்க்குமாறும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவதற்குப் பதிலாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறும் இலங்கையர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

சம்பவங்களை புகைப்படம் எடுப்பது, வீடியோ அல்லது ஒலிப்பதிவு செய்வது அல்லது அத்தகையவற்றை சமூக ஊடகங்களில் பகிர்வது அல்லது அது குறித்து கருத்து தெரிவிப்பது ஆகியவற்றில் ஈடுபட வேண்டாம் என்று அந்த அறிவிப்பு குறிப்பாக எச்சரித்தது.

மேலும், சவுதி அரேபியாவின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளைத் கண்டிப்பாகப் பின்பற்றுமாறும் வலியுறுத்தியது.

உள்ளூர் அவசரநிலைகளுக்கு, மக்கா மற்றும் மதீனா பிராந்தியங்களுக்கு ‘911’ எண்ணையும், சவுதி அரேபியாவின் பிற பகுதிகளுக்கு ‘998’ எண்ணையும் அந்த அறிவிப்பு குறிப்பிடுகிறது. 

அவசரச் சூழல்களுக்காகத் தொடர்புகொள்ள ‘056 098 6671’ என்ற எண்ணையும் தூதரகம் வழங்கியுள்ளது.

சவுதி அரேபியாவின் புனித நகரமான மக்கா மற்றும் இரண்டாவது பெரிய நகரமான ஜெட்டா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (15) அன்று பாதுகாப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

யேமனின் செங்கடல் கடற்கரையோரம் ஹவுத்திகளின் தாக்குதல்களும் முன்னேற்றங்களும் சவுதி எண்ணெய் ஏற்றுமதிக்கும் உலகளாவிய கப்பல் போக்குவரத்துக்கும் புதிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply